முச்சா ரிகையொதுங்கும் ஓரிடத்து மின்னவை நச்சாமை நோக்காமை நன்று – ஏலாதி 12

நேரிசை வெண்பா

கொலைக்களம் வார்குத்துச் சூதாடு மெல்லை
அலைக்களம் போர்யானை யாக்கு - நிலைக்களம்
முச்சா ரிகையொதுங்கும் ஓரிடத்து மின்னவை
நச்சாமை நோக்காமை நன்று 12

– ஏலாதி

பொருளுரை:

கொலை பயிலுமிடமும், வெள்ளம் பெருகிச் சுழியும் நீர் நிலைகளும், சூதாடு கழகமும், பிறரை வருத்துஞ் சிறைச் சாலையும், போர் செய்ய வல்ல யானைகளைப் பழக்குகின்ற இடமும், யானை, தேர், குதிரை யென்னும் மூன்றும் ஓட்டம் பயிலுகின்ற ஒருவகை இடமும் என இவை தம்மை விரும்பாமையும், போய்ப் பாராமையும் நல்லது.

பொழிப்புரை:

பொருது கொல்லுங் கொலைக்களமும் வார்குத்துமிடமும், சூதாடுமிடமும், தண்ட முதலாயினவற்றால் அலைக்குஞ் சிறைக்களமும், போர் யானைகளைக் கொலை கற்பிப்பானுக்கு நிலையிடங்களும், யானை, தேர், குதிரையான மூன்று திறமுஞ் சாரிகையாக வோடு மோரிடத்துஞ் செல்லுதற்கு உடன்படாமையும் அவை சென்று நோக்காமையும் நல்வினையாம்.

கருத்து:

கொலைக்களம் முதலியவற்றை நச்சாமையும் நோக்காமையும் நன்று.

வார்குத்து, நீர் குத்திச் சுழியும் இடமென்க; வார்க்குத்தென்பது பாடமாயின், நீரினது குத்துமிட மென்றுரைக்க. நீர் நிலைகளிற் சுழிதலுடைய இடங்களே தீமை விளைப்பனவாகலின் அதனை யுணர்த்தற்கு ‘வார்குத்'தென்னுஞ் சொற்பெய்தார்;

வார்க்குத்து - பெரிய மற்போர் செய்யுமிடம் எனலுமுண்டு.

முச்சாரிகை - மூன்றினது சாரிகை:

சாரிகை - சுற்றியோடி வருதல். ஓரிடத்து மென்புழி வரும் எண்ணும்மையை ஏனையவற்றோடுங் கூட்டுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 9:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

சிறந்த கட்டுரைகள்

மேலே