இழித்த தொழிலவர் நட்பின்னா - இன்னா நாற்பது 34

இன்னிசை வெண்பா

ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த1 லின்னா
விழுத்தகு நூலும்2 விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. 34

- இன்னா நாற்பது

பொருளுரை:

நல்லொழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவுளதாகக் கூறுதல் துன்பமாகும்;

சீரிய நூலும் விரும்பிக் கல்லாதார்க்கு துன்பமாகும்;

இழிக்கப்பட்ட தொழிலை யுடையாரது நட்பு துன்பமாகும்;

நல்லாரால் ஒதுக்கப்பட்ட இடமாகிய நாட்டிலே திரிதல் துன்பமாகும்.

விளக்கம்:

ஒழுக்கமிலாளர் குறை உரைத்தல் என்பதும் பாடம். ஒழுக்கமில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில்;
ஈற்றடிக்கு, ஒழுகக் குறைத்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம்.

1. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல், 2. விழித்தகுநூலும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 7:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே