நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கும் மனைமர மாய மருந்து - பழமொழி நானூறு 53

நேரிசை வெண்பா

அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து. 53

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால் அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள் நல்ல செயல் முறையால் அத் துன்பத்தை நீக்க முற்பட வேண்டும்; அச்செயல் அல்லலுற்றார்க்கு வீட்டிலுள்ள மரமாகிய மருந்தினை யொக்கும்

கருத்து:

அல்லலுற்ற காலத்து அவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார்.

விளக்கம்:

ஒருவன் அல்லலுற்ற காலத்து அவன் வருந்தாது அவ்வல்லலை நீக்கும் கிளைஞர்கள் மனையில் உள்ள மருந்து மரத்திற்கு ஒப்பாவார்.

'மனை மர மாய மருந்து' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-22, 6:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே