மனித நேயம்
கையில் சூடான ப்ரூ இன்ஸ்டன்ட். சுடச் சுடத் தினத்தந்தி. வாசலில் உட்கார்ந்திருந்தேன்.
"வாழேக்காய்...கத்ரீக்காய்...தக்காளி....வென்டேக்காய்...."
வியர்வையில் குளித்தபடி..தள்ளாடி...தள்ளாடி மூதாட்டி ஒருவள் வந்து கொண்டிருந்தாள். எங்கள் தெரு
காய்க்காரம்மாள்.
" இந்தாம்மா காய்கறியெல்லாம் புதுசா இல்லையே. தக்காளியெல்லாம் இப்படி நசுங்கி கெடக்குதே. பழசும் பாழ்
பட்டதையெல்லாம் எங்க தலையில கட்டிட்டு.வெண்டைக்காய் இப்படி முத்தலாய்..." என்றபடி
வெண்டைக்காய்களின் மூக்கை படக்..படக்கென உடைக்க ஆரம்பித்தாள் பக்கத்து வீட்டு பார்வதி.
" அம்மா...பாத்துமா...பாத்துமா. எல்லாத்தையும் நீயே ஒடிச்சிட்டீனா. மத்தவங்க கிட்ட நா எப்படிம்மா விக்கறது?"
" ஐயே தங்கம்னு நினைப்புதான்.முத்தலோ..தொத்தலோ...வாடியதோ...வதங்கியதோ...எல்லாத்தையும்
நம்பி...அதுவும் நீ சொல்ற வேலைக்கே வாங்கணும்னு என் தலை எழுத்து..."
"ஏம்மா காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டீயா? மொத போனிம்மா.நொட்ட சொல்லு சொல்லாம வாங்கிட்டு போம்மா"
"பழய காய்கறிய விக்கறதும் இல்லாம...வாயப் பாரு வாய.பொடலங்கா கணக்கா நீளுது"
"எதோ எங்க வயத்து பொழப்புக்கு இப்படியெல்லாம் ஓரியாடறோம். என் வாயப் புடுங்காதம்மா..."
"தினதந்தி"யின் சூடான செய்திகளை விட...நிதர்சனமான நாட்டு நடப்பு கண் முன்னே விரிய... உற்று கவனிக்க
ஆரம்பித்தேன்.
"எங்க கைக்கு தக்கனத வாய கட்டி...வயத்தை கட்டி..கடன ஒடனே வாங்கி...இந்த வேகாத வெயில்ல... நாலு தெரு
சுத்தி வந்தாதான் ஏதோ நாலு காசு பாக்கமுடியுது.இதுல நீ வேற..."
"சரி..சரி...ஒன் ராமாயணத்த நிறுத்திட்டு.தக்காளியில 1/4 கிலோ, வெண்டையில 1/4 கிலோ, கத்திரியில 1/4 கிலோ
போடு. த பாரு கரெக்ட்டா அளந்து போடு.ஏமாத்தாத. எடை கல்லெல்லாம் கரெக்ட்டா இருக்கா?"
அளந்து போடுகிறாள் கிழவி.
"இவ்ளோ வாங்கினேனில்ல. ரெண்டு காய் கூட போட்டாத்தான் என்ன? கொறஞ்சா போயிடுவ.பிசினாரி...பிசினாரி..."
கொசுறா கருவேப்பிலையையும்..கொத்தமல்லியையும் உரிமையோடு வாங்கிக்கிட்டா பார்வதி.
கிழவியும் தாராளமாய் எடுத்து கொடுத்தாள்.
எண்ணிப்பார்த்தேன்...என் சிந்தனை 70mm சினிமாவாய் விரிந்தது.
"டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்" இல்ல பெரிய...பெரிய "மால்"களுக்கோ போனால்...எந்த கேள்வியும்
கேட்காமல் ...எந்த கொசுறும் எடுக்காமல்.. கேட்ட விலையை சாரி...சாரி...ஒட்டப்பட்ட விலையை வாய் பேசாமல்..
எந்தவித சஞ்சலமும் இல்லாமல்... மனம் முழுக்க சந்தோஷத்தோட வாங்கி வரும் இவர்கள்...பாவம் ஒரு ஏழை
கிழவி....பெத்த பிள்ளைங்களால் கைவிடப்பட்ட ஒரு வயதான தாய்...தன் வயித்து பிழைப்புக்காக...ஒரு வேளை
சோத்துக்காய்...விடிகாலையில எழுந்து மார்க்கட்டுக்கு போய்...இடிபட்டு...உதபட்டு...வார்த்தைகளால் வறுபட்டு...
லோக்கல் பஸ்சுல ஏறி ட்ரைவர் ...கண்டக்கடரிடம் வசவு வாங்கி அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி...காய்கறிகளை
வாங்கி வந்து...சாப்டிச்சோ சாப்பிடலையோ இந்த வேகாத வெயில்ல தல மேல அத்தன பாரத்தையும் சொமந்து..
கிடைக்கும் அற்ப லாபத்துக்காக தெருத் தெருவாய் தெரு நாயாய் அலைந்து திரிந்து அவரவர் வீட்டுக்கே... வீட்டு
வாசலுக்கே கொண்டு வந்து கொடுக்கும்...வாங்குபவர் உதாசீனப்படுத்தினாலும்...தரக்கொரவாய் பேசினாலும்...
அடுத்த நாளும்...அடுத்த நாளும்...வந்து மொகம் கோணாமல் "அம்மா காய்கறி வேணுமாமா?"ன்னு கேட்க்கும் இந்த
கிழவியிடம் காட்டும் கெடுபிடி...ஓ..நெஞ்சில்.. செந்நீர் பொங்கியது.
ஏ/சி ஷோ ரூமில்...நிறைய முதலீட்டில்...அடி மாட்டு விலைக்கு மொத்த சரக்கையும் வாங்கி லாபம் ஒன்றே
குறிக்கோளாய்...பழைய காய்கறிகளையையும் புதிய காய்கறிகளோடு பாலித்தீன் பைகளில் அழகாக...கண்ணை
கவரும் வகையில் கவர்ச்சியாக வைத்து கொள்ளை லாபம் பார்க்கும் "கார்ப்பரேட்" நிறுவனங்களிடம் இவர்கள் வாயே
திறப்பதில்லையே...ஏன்? என்ன நியாயம் இது? கண் முன்னே அவலப்படும்...அவமானப்படும்..சக ஜீவனை...சக
உயிரை..ஏற்காத நேயம்...தவிக்கிற வாய்க்கு கொஞ்சம் தண்ணிகூட கொடுக்காத...கொடுக்கத் தோணாத ஒரு நேயம்
ஒரு மனித நேயமா? என்ன உலகமடா இது. நாம் எங்கேதான் போய் கொண்டு இருக்கிறோம்? ஒரு நிமிடம் இதயம்
நின்று துடிக்கத் துவங்கியது. ம்...ம்....இதற்க்கு முடிவுதான் என்ன?
அதோ அவள் பயணம் தொடங்கிவிட்டது.
"வாழேக்காய்....கத்தரீக்காய்....தக்காளி....வென்டேக்காய்..."