ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை

ஊருக்குள் ஒரு நாடகம் போட்ட கதை

மாலா இந்த நாடகத்தில் தான் நடிக்கவில்லை என்று முருகேசனிடம் சொல்லிவிட்டாள். முருகேசு ஏன் மாலா திடீருன்னு இப்படி சொன்னா எப்படி? கேட்ட முருகேசுவிடம் ப்ளீஸ் முருகேசு இந்த முறை நான் வரலை, வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிக்க.
மாலா முருகேசனின் நாடக கதாநாயகி, நாளை அவன் புதிதாக தொடங்கப் போகும் நாடகத்தின் ஒத்திகைக்கு அவள் வரமுடியாது என்று சொல்லி விட்டாள். அவள் இல்லாமல் அந்த நாடகத்தின் வெற்றி என்பது அவனுக்கு கிடைக்காது என்பது அவனது எண்ணம். எப்பொழுதுமே முருகேசனின் நாடகத்தில் நடிக்க ஆர்வம் காட்டுபவள் இந்த நாடகத்தை ஆரம்பிப்பதாக சொன்னவுடன் மன்னிச்சுக்கோ முருகேசா இதுல நான் நடிக்க மாட்டேன், நீ வேற யாரையாவது ரெடி பண்ணிக்க என்று கறாராய் சொல்லிவிட்டாள்.
முருகேசு எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். இது “ஹீரோயின் சப்ஜெக்ட்” நீதான் இதுக்கு பொருத்தமான ஆளு, ஹூஹூம் மறுத்து விட்டாள். நண்பர்கள் குழு இந்த முறை பெரிய எழுத்தாளர்களின் கதைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து நாடகமாக்கலாம் என முடிவு செய்தபோது அந்த கதைகள் சொல்லும் கதாபாத்திரங்கள் அளவுக்கு நாம் நடிப்போமா ! என்பதில் அவர்களுக்கு பெருத்த சந்தேகம் வந்து விட்டது. இவர்கள் அனைவருமே கல்லூரி மாணவர்கள். அதே போல் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். நல்ல நட்புடன் இருப்பவர்கள். அதில்தான் இப்பொழுது மாலாவால் விரிசல் வந்து விட்டது. காரணம் கேட்டால் சொல்ல மாட்டேன் என்கிறாள்.
மறு நாள் மாலா வரவில்லை, தங்கராசுவும், பனிமலரும், அவளை ஏன் தொங்கணும், பேசாம நாமளே ஒரு கதை தயார் பண்ணி நமக்கு தகுந்த மாதிரி ஆட்களை ரெடி பண்ணிக்கலாமே, சொன்ன இருவரையும் யோசனையுடன் பார்த்த முருகேசன் ஆமா அப்படி செய்தால் என்ன ? யோசனை தோன்ற ஓ.கே. முதல்ல ஒரு கதையை ரெடி பண்ணுவோம், யார்கிட்டேயாவது கதை ரெடியா இருந்தா சொல்லுங்க.
தங்கராசு உடனே கையை தூக்கி நான் சொல்றேன், என்றவன் இது “ஜேம்ஸ்பாண்ட்” கதை மாதிரி, நான் ஜேம்ஸ்பாண்டா நடிக்கிறேன், என்றவனை வெறுப்புடன் பார்த்த பனிமலர், முதல்ல கதையை சொல்றா, என்று மிரட்ட ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா,….அவங்களுக்கு ஒரு பெண் அவள் கல்லூரியில படிக்கிறா, அதுக்கப்புறம் நான் சொல்றேன், அவள் ஒருத்தனை காதலிக்கிறா..பார்த்துக்கொண்டிருந்த ரமேஷ் திடீரென சொல்ல ஆரம்பிக்க உடனே தங்கராசு முறைக்க நான் ஒண்ணும் கதை சொல்ல்லை என்று பிகு செய்து செய்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
முருகேசு எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருங்க, இந்த அம்மா, அப்பா, கதை எல்லாம் நமக்கு வேணாம். ஏன்னா நாம் அந்தளவுக்கு வேசம் போடறமாதிரி இருக்க கூடாது. அதே நேரத்துல நம்ம வயசுக்கு தகுந்த மாதிரி கேரக்டரா கொண்டு வந்துட்டா மேக்கப் போடற செலவு கம்மியா இருக்கும். அதுதான் நான் ஜேம்ஸ்பாண்ட்டா நடிக்கிறேன், நீங்க எல்லாம் எனக்கு வில்லனா நடிங்க அப்படீன்னு சொல்றேன். மீண்டும் ஆரம்பித்தான் தங்கராசு.
அவன் கொஞ்சம் இவர்களை விட வாட்டசாட்டமாய் இருப்பான். போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அந்த எண்ணத்திலேயே தன்னை “ஹீரோவாக” நிலை நிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இப்பொழுது அனவைருமே தங்கராசுவை முறைக்க ஆரம்பிக்க முருகேசு அனைவரையும் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
ஒரு வழியாக கதை தயாராகி அதனை நாடக வடிவில் கொண்டு வந்த பின்னால் யார் யாருக்கு என்ன வேடம் கொடுப்பது? என்பது இழுபறியாயிற்று. ஹீரோ வேசத்தை தவிர வேறு ஒன்றையும் ஏற்க மாட்டேன் என்று தங்கராசு திட்ட வட்டமாய் சொல்லிவிட்டான். எது எப்படி இருந்தாலும் தங்கராசு ஹீரோவாக நடித்தால் மேடையில்,அவன் மட்டுமே நடிக்கட்டும், நாங்கள் அனைவரும் ஒதுங்கிக் கொள்வோம் என ரமேஷ் மிரட்டினான். தலையில் கை வைத்துக்கொண்டு கவலையில் உட்கார்ந்து விட்டான் முருகேசு.
பின் கதாநாயகனாய் ஒருவனை மட்டும் காட்டாமல் அனைவரும் கலந்து இருப்பது போல கதையை அமைத்துக்கொள்ளலாம். இப்படி முடிவு செய்து அவரவர்களுக்கு உரிய வசனங்களை எழுதிக் கொடுக்கும் பொறுப்பை ராம்குமார் ஏற்றுக்கொண்டான். ஓரிரு நாளில் வசனங்களை வாங்கிக் கொண்டபின் மனப்பாடம் செய்வதற்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டது.
. அதில் கடைசியாக ஒரு வாண்டுப் பையன் நடிக்க வேண்டி இருந்தது. அவனையும் ஏற்பாடு செய்து அவனிடமும் ஒரு வசனப் பிரதியை கொடுத்திருந்தார்கள். அதில் அவன் வசனத்துடன் ( அனைவரும் சிரிக்க திரை மூடுகிறது )எனவும் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தீவிரமாக அந்த பையன் மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். அனைவரும் சிரிக்கிறார்கள் திரை மூடுகிறது, அனவரும் சிரிக்கிறார்கள், திரை மூடுகிறது என் பல முறை வாசித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். அங்கு வந்த முருகேசு டேய்..டேய்..அதை எதுக்குடா மனப்பாடம் செய்யறே? அது நாடகத்தோட கடைசி என்று அவனுக்கு விளங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.அடுத்ததாக வந்த “காதல் வசனம்” ஒன்று “சூரியன் உதிக்க மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்” இந்த வசனத்தை ஒருவன் “சூரியன் உதைக்க மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்று மன்ப்பாடம் செய்ய அவனுக்கு “உதிக்க” என்னும் வார்த்தை வரவழைப்பதற்குள் படாத பாடுபட்டுவிட்டனர்.
இப்படியாக வசன்ங்கள் இவர்கள் வாயில் நுழைந்து கஷ்டப் பட்டு முழு உருவம் வந்த போது அனைவரும் சேர்ந்து தங்கராசுவை தாக்குவது போலவும் அவன் தரையில் விழுவது போலும் காட்சி ஒன்று வந்தது.
ஆரம்பத்தில் முருகேசுவிடம் தங்கராசு “அவர்கள் அடிக்கும் போது வாயில் இரத்தம் வருவது போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவனே வாயில் வெத்தலை போட்டு கொண்டு அவங்க அடிக்கும்போது அதை துப்பறமாதிரி இருந்தா பாக்கறவங்களுக்கு என் “வாயில் இரத்தம்” வற்ற மாதிரி இருக்கும் என்று சொன்னான். அதுவும் நல்ல யோசனைதான் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டது அதிசயம்தான்.
எல்லா ஒத்திகைகளும் முடிந்து அவர்கள் ஒரு நல்ல நாளில் அவர்கள் ஊரில் படித்தவர்கள், படிக்காதவர்கள், அன்றாடம் கூலி வேலைக்கு போகிறவர்கள், ஆபிசர்கள், அனைவருக்கும் முன்னால் நாடகத்தை அரங்கேற்ற நாடகத்தின் இறுதிக் காட்சியில் தங்கராசு முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டான். நான் இவர்கள் அடித்து விழுந்தால் பார்க்க வந்திருக்கும் என்னோட முறைப் பெண் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்? என்று கேள்வியை கேட்டவன் திரும்பி இவர்களை அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஏற்கனவே இவன் பலசாலி, அவனை அடிக்கப் போவதாக நடிப்பவர்கள் அவன் காதருகில் “டேய் தங்கராசு தயவு செய்து விழுகிற மாதிரி நடிடா” என்று கெஞ்சி கூத்தாடி கதறி ஒரு வழியாக ஒப்புக்கொண்டு கீழே விழ சம்மதித்தான். அதற்குள் இவனை அடிப்பதாக நடிப்பவர்களுக்கு நல்ல உதையும் கொடுத்து சத்தமில்லாமல் பழி வாங்கிவிட்டான்.
நாடகம் முடிந்து மறு நாள் இவர்கள் எப்பொழுதும் கூடும் “டீக்கடையில்” மக்கள் பேசிக்கொண்டது “பசங்க நல்லாத்தான் நடிச்சாங்க” நல்ல வேளை டவுனுக்குள்ள போடலை, போட்டிருந்தா மக்கல் கல்லை தூக்கி…
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத முருகேசு அணி, அடுத்த நாடக ஒத்திகையை கல்லூரித் தேர்வு முடிந்தவுடன் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து கொண்டனர். இந்த முறை ‘மாலாவை கூப்பிடக்கூடாது’ எனவும் முடிவு செய்து கொண்டனர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Feb-22, 1:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 163

மேலே