மிடில் கிளாஸ்
தினசரி செய்திதாளை வழக்கம் போல் புரட்டிக்கொண்டு இருந்தார் ரத்தினவேல். காலைக்கடன்களை முடித்துவிட்டு அடுத்து அவர் செய்யும் அன்றாட வேலையில் செய்தித்தாள் வாசிப்பதும் ஒன்று.
"ஏங்க டிபன் ரெடி வாங்க"என்று மனைவியின் குரலிற்கு கட்டுப்பட்டு அந்த செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு அன்றாட சிற்றுண்டியான இட்லியை உண்பதற்கு சமையலறை பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கையில் அந்த எவர்சில்வர் தட்டினை ஏந்தியபடி மனைவி ராதா இட்லியை பறிமாற இவரும் அதை ரசித்து உண்பார்.
அன்று வழக்கம் போல் சிற்றுண்டி சாப்பிடும்போது தான் மகன் வினோத் அவரிடம் பேச்சுவாக்கில் தனது மனதிலுருந்த குமுறலை வெளிபடுத்தினான்."அப்பா உங்கள் கிட்ட ஒன்னு சொல்லனும்"என்று நடுக்கத்துடன் பேச்சை துவங்க அவன் சொல்வது என்னவென்று கேட்போமே என்ற பார்வையில் அவனை நோக்க "அப்பா..நாம ஏன் ஒரு சொந்த வீடு வாங்க கூடாது?"என்று நியாயமான ஒரு கேள்வியை அவரிடம் சமர்ப்பிக்க
"சொந்த வீடா"?என்று ஆச்சரியத்துடன் கேள்வி கேட்க
"ஆமாம் . எவ்வளவு நாளைக்கு தான் இந்த ஒண்டிக்குடித்தன வாழ்க்கை யை வாழமுடியும் நாளைக்கே எனக்கு கல்யாணம் காட்சினு நடந்தால் வரவ எப்படி இங்கே அட்ஜஸ் பன்னி வாழுவா ?"என்று வினோத் கூற
"ஆக உன் எதிர்கால மனைவிக்காக வீட்டை காலி பன்னலானு சொல்ற அதானே?என்று உரத்த குரலில் வெளிபட்ட அவருடைய கேள்வியில் மிரண்டவன்"அய்யோ அப்பா அப்படினு இல்லை, இங்க நாலு வீட்டுக்கு ஒரே டாய்லெட் பாத்ரூம் அப்படியிருக்க எப்படிப்பா வரபொன்னுங்க பொறுத்துக்கும் அ..அதுக்கு தான்.என்று பேச்சை வலுபடுத்த.."நல்ல காரணம் தானே"என்று ராதா நினைத்துவிட்டு அவரிடம் குறுக்கிட்டாள்.
"அட ஆமாங்க ஏற்கனவே பொன்னுபார்க்க போயிருந்த போது வீடு பத்தி யோசித்து தான் நம்ப வினோத்க்கு பொன்னு குடுக்க தயங்குனாங்க. நான் தான் கல்யாணம் ஆகிட்டு இவங்களை தனிகுடித்தனம் வைப்போம் னு உறுதியா சொல்லிட்டு வந்தேன்"என்று ராதா கூற
"ஓ..மேடம் என்னை எதுவும் கேக்காமல் உறுதியாக வேற சொல்லிட்டு வந்துட்டிங்களா"என்று ராதாவை முறைக்க..."ஏங்க அப்படி முறைக்கிறிங்க நானும் வினோத்தும் நல்லதுக்கு தானே சொல்றோம்"என்று கிரங்கியபடி கூற
ரத்தினவேல் கை அலம்பிட்டு வந்து அறைக்கதவு பின்னால் மாட்டிவைத்திருந்த காக்கி ஓட்டுநர் யூனிபார்ம் எடுத்து அணிந்து விட்டு இன்னைக்கு சவாரி போயிட்டு வர நேரமாகும் நான் கிளம்புறன் என்று பதில் எதுவும் தரமாலே வீட்டை விட்டு நகர
"அம்மா..அப்பா எதுவும் பேசாமலே போறாரே ரொம்ப கோச்சிக்கிட்டாரோ?"
"தெரியலையே டா"
"சரிமா நானும் ஆபிஸ் கிளம்புறன். இன்னைக்கு புது மேனஜர் வராரு அவரை வரவேற்கனும் சரி சரி சாப்பாடு கட்டிட்டியா?"என்று சுடுதண்ணீர் காலில் ஊற்றியது போல் படபடத்தான். ராதா ஒரு டிபன் கேரியரில் காரக்குழம்பும் கூட்டும் செய்து கொடுத்து விட்டு அவனை வழியனுப்பி "அப்பாடா"என்று ஓய்வாக சிறிது நேரம் அமர்ந்தார். பக்கத்து வீட்டு வனஜா மாமி எட்டிப்பார்த்தார்.
"என்னடி மா ரொம்ப களைப்பா இருக்கியா?என்று வாயில் எதையோ மென்றுக்கொண்டே கேட்க "
"ஆமாம் மாமி உள்ள வாங்க ஏன் வாசல்ல நிக்கிறீங்க"என்று புன்னகையிக்க.
அவரும் உள்ளே வந்து அமர்ந்தார்.
"மாமி காபி குடிங்கோ ..."என்று அவரை உபசரிக்க.. இருவரும் கையில் கோப்பையை ஏந்தியபடி பேசத்துவங்கினர்.
"ஏண்டிமா உன் மகன் வினோத்துக்கு எப்ப கல்யாணம்?"
"வர தைமாசம் " என்று ராதா உரைக்க.
"ஓ..அதுசரி எவ்வளவு சவரன் நகைபோடுறதா ஒத்துக்கிட்டா பெண் வீட்டார்"? என்று கேட்க. "பத்து சவரன் தான் மாமி,என்ன பன்றது என் மகனுக்கு 8000 சம்பளம் தான் ,நாங்க இருக்கிறதும் ஒரு குடித்தனவாசல் வீடு அப்படியிருக்க எப்படி மாமி அவங்க கிட்ட அதிகமா எதிர்பார்க்க முடியும் என்று சளித்துகொள்ள"
"உண்மை தாண்டி மா எனக்கும் ஒரே பொன்னு கட்டி குடுத்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் என் மாப்பிள்ளை என் வீட்டுக்கு வந்து ஒரு நாள் கூட தங்கினது இல்லை. இந்த வருத்தம் எனக்கு எப்பவுமே உண்டு. நாமளும் எதும் கேக்க முடியாது. இந்த குடித்தனவாசல் வீட்டில் அவருக்கு சங்கோஜமா இருக்கோ என்னமோ ம்ம்ம் என்ன பன்றது"
"மாமி அப்படினா நீங்க ஏன் இன்னும் வீட்டை மாத்தாம இருக்கீங்க?"என்று ராதா ஆர்வமுடன் கேட்க.
"ஹாஹா ஏண்டிமா நாம என்ன மைசூர் மஹாராஜா பேத்தியா இல்லை தேசிங்கு ராஜா வம்சமா எல்லாத்தையும் அள்ளி வீச..நான் பணத்தை சொன்னேன் டி மா. என் வீட்டுக்கார் ஒரு சமையல்காரர் ஏதோ மாசம் 10,000 சம்பளம் வாங்கிட்டு வராரு. பொன்னு கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டுறதுக்கே படாத பாடு படுறோம் இதுல வீடு எங்கடிமா ம்ம்ம் என்று சளித்துகொள்ள... தண்ணீர் லாரி வரும் சத்தம் காதை பிளக்க வனஜாவும் ராதாவும் தண்ணீர் குடம் எடுத்துக்கொண்டு விருவிருனு வெளியே லாரி முன்பு வரிசை கட்டி நின்றனர்.
"இது என் குடம்,இதோ இந்த மஞ்சள் குடம் பக்கத்தில் இருக்கே அது என்னது, அய்யே நான் உனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தேன் என்று தண்ணீர் பிடிக்கும் பெண்களின் கூச்சல் சத்தம் ஒருபக்கம் ,அடிக்கும் வெயிலில் முகத்தில் வழியும் வியர்வை ஒருபக்கம். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்கவே இம்புட்டு பாடு என நொந்து கொண்டே தினமும் இப்படி தண்ணீர் பிடித்தால் தான் வீட்டில் உள்ளவர்களின் தாகத்தை தீர்க்க முடியும்."
ஒரு குடம் இடுப்பிலும் இன்னொரு குடம் கையில் ஏந்தியபடி ராதா நடந்து வர எதிரே ஒரு நிறைமாத கர்ப்பிணி தண்ணீர் குடத்தை சுமந்தபடி வர அதை பார்க்க அவளுக்கு ஏதோ தோன்றியது "இதே நிலை தானே என் வருங்கால மருமகளுக்கும் ,என்று நொந்து கொண்டு தனது குடத்தை இறக்கிவிட்டு ,அந்த கர்ப்பிணியின் குடத்தை தூக்கிக்கொண்டு அவள் வீடுவரை சென்று குடத்தை வைத்தார்.
அந்த கர்ப்பிணி ராதாவிடம்"ஆண்டி ரொம்ப தாங்க்ஸ்"என்று கைகூப்பி சொல்ல.. வீட்டினுள் டிவி சிரியலில் மூழ்கியிருந்த அவளுடைய மாமியார்
"இந்தாடி தண்ணீர் எடுக்க இம்புட்டு நேரமா.போ போய் மத்த வேலையை பாரு"என்று கடுக்கடுக்க இதை கண்ட ராதாவிற்கு கோபமே வந்தது
"ஏம்மா வாயும் வயிறுமா இருக்க இந்த சின்ன பொன்னை தண்ணீர் குடம் தூக்க வைக்கிறதே தப்பு இதுல இவ்வளவு நேரமானு வேற கேள்வியா?"என்று நறுக்குனு கேள்வியை கேட்டுவிட்டு அவள் வீட்டை நோக்கி பயணித்தாள்.
தண்ணீர் பிடிக்கும் வேலை முடிந்தது என்றாலும் அடுத்து ரேஷன் கடைக்கு வேற போகனும் பத்து தேதிக்குள்ள போனால் தான் சக்கரை பருப்பு எல்லாம் கிடைக்கும் இல்லையென்றால் வெறும் அரிசி தான் என்றபடி நினைத்துக்கொண்டே கையில் பையுடன் கிளம்ப வனஜா மாமியும் இவளுடன் துணைச்செல்ல இருவருமாக நடந்து கொண்டே செல்ல "ஏண்டிமா இந்த ரேஷன் கடை எல்லாம் கிட்ட இருந்திருக்க கூடாதா?இப்படி லோலோனு நடையா நடக்க கஷ்டமா இருக்கு,என்று சளித்துகொள்ள"
"மாமி பேசாமல் இதெல்லாம் வீடு தேடிவந்து கொடுத்துவிட்டு போனால் இன்னும் நல்லாருக்கும் ல?"என்று புன்னகையிக்க...
"போடி நீ வேற வீடு தேடி வந்து எல்லாம் குடுக்கவேணாம் வீதி தேடி வந்து கொடுத்தாலே போதுமே. எங்க வருவானுங்க எல்லாம் ஓட்டு கேக்குறப்ப வந்து கையை கும்பிட்டு போறதோட சரி அதுக்கப்புறம் நம்ப செத்தோமா பொழைச்சோமா னு கூட யாரும் வருவதும் இல்லை போறதும் இல்லை."என்று வனஜா மாமி சளிப்புடன் கூற
"சரியா சொன்னிங்க மாமி. இதோ கடையே வந்துருச்சு இந்த பில் போடுறவரு இன்னும் வரலையோ !"என்று கடை இருக்கும் திசையை பார்த்து கூறினாள் ராதா.
வரிசையில் இருவரும் நிற்க அங்கு பில் போட்டு தரும் ஊழியர் தாமதமாக வரவே மக்கள் கூச்சலிட துவங்கினர் ஒருவழியாக ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து விட்டு பில் போட துவங்கினர். வனஜா மாமியும் ராதாவும் வாங்கிக்கொண்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு சாலையை கடந்தனர்.
"ராதா அங்க பாரேன் விளம்பரம்"
10 லட்சத்தில் தனி வீடு உடனே குடிபெயரலாம். கடன் வசதி செய்து தரப்படும் என்று விளம்பரம் இருக்க அதை பார்த்து விட்டு வாய்மேல் கைவைத்தபடி ராதா"ஏன் மாமி பத்து லட்சத்தில் தனி வீடா? எப்படி மாமி"?
"எங்கனா ஒதுக்குபுற ஏரியாவா இருக்கும் டி மா.." என்று வனஜா மாமி தனது தோரணையில் வாய் சுளிக்க.
"மாமி இந்த விளம்பர பலகைல இருக்கிற நம்பர் போன்ல சேவ் பன்னி வச்சிக்கிறன். இதை வினோத் கிட்ட காட்டலாம் காலை ல கூட சொந்த வீடு பத்தி தான் பேச்சு "
"ம்ம்ம் அதுசரி " வாடிம்மா நாழி ஆயிடுத்து வெயில் வேற வாட்டி வதைக்குது.
நம்பரை பதிவு செய்து கொண்ட ராதா தனது கணவன் ரத்தினவேல் இதற்கு என்ன சொல்வாறோ என்ற பயம் ஒருபக்கம் இருந்தாலும் மகனின் ஆசை நிறைவேற வேண்டும். எனது மருமகளாவது இந்த ஒண்டிக்குடித்தன வாழ்க்கை யிலிருந்து தப்பித்து தனக்கென்று ஒரு வீடு என்ற வசதியுடன் வாழவேண்டும் என்று எண்ணினார் ராதா.
வீட்டுக்கு வந்தடைந்தனர் இருவரும். "மாமி உங்கள்ட ஜாக்கெட் தைக்க குடுத்தேனே இன்னைக்கு தரேனு சொன்னிங்க என்று நியாபகபடுத்திட்டு போனாள் அத்தெருவில் வசிக்கும் ஒருத்தி"
"அய்யோ இன்னும் ஹெம்மிங் பன்னலையே நான் வேலையை பாக்குறன் டி மா என்று வனஜா வீட்டினுள் நுழைய ராதாவும் தன் வீட்டினுள் நுழைய மணி.இரண்டானது."மதிய உணவை வாங்கிக்கொள்ள வயிறு தயரான நிலையில் இருந்தது. "உன் கஷ்டத்துல என்னை மறந்துறாத தாயே என்று வயிறு ஏங்கிக்கொண்டு இருந்தது" மகனுக்கு கொடுத்தனுப்பிய காரக்குழம்பு மிச்சமிருக்க அதை சாதத்துடன் பிசைந்து வாயில் திணிக்கலானாள்.
நேரம் கடந்து சென்றன..வீட்டிற்குள் நுழைந்தான் வினோத் "அம்மா ஒரு ஸ்பெஷல் டீ"என்று உத்தரவிட "டேய் அது என்னடா ஸ்பெஷல் டீ நான் என்ன இங்கே டீ கடையா நடத்திட்டு இருக்கேன்."என்று மகனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்க "மா பால் கொஞ்சம் அதிகமா ஊத்தினா ஸ்பெஷல் டீ,பால் மிச்சபடுத்துறேனு நீ டீயில் பாதி தண்ணீர் கலந்திங்கனா அதுக்கு பெயர் சாதாரண டீ"என்று தன் அம்மாவை கலாய்த்தெடுக்க..
"டேய் நம்ப வாங்குற 250 மிலி.லிட்டர் பாலுக்கு சாதா டீ தான் டா கிடைக்கும் என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூற "
"ம்ம்..என்ன பன்றது தாய் கிழவி அர லிட்டர் பால் 25 ரூபாய் பாவம் நீயும் என்னதான் பன்னுவ. தினமும் கால் லிட்டர் பால் வாங்கி அதுலயே இரண்டு வேளை டீ போட்டு ,அதுல கொஞ்சம் மிச்சம் பன்னி தயிர் தோயவைக்கிற என்று வீட்டின் நிலையை அவன் பாணியில் கூற..மகனின் ஸ்பெஷல் டீ ஆசையை நிறைவேற்ற தயிரிற்கு எடுத்து வைத்திருக்கும் மிச்சம் பாலினை எடுத்து டீயிற்கே செலவிட்டாள்.
"இதோ டீ ரெடி"என்று அவனிடம் கோப்பையை நீட்ட அதைவாங்கி உறிந்தவன் "ஸ்ஸ் ப்பா என்ன தாய்கிழவி அதிசயமா ஸ்பெஷல் டீ போட்டுருக்கு. பேஷ் பேஷ்"என்று பாராட்ட தன்னை அறியாமல் மகனையே பார்த்துக்கொண்டிருந்தவள். "டேய் கன்னு இவ்வளவு ஆசையா என்கிட்ட தனிமையில் இருக்கும் போது தான் பேசுற ஏண்டா உங்கள் அப்பா முன்னாடி பேசுறதுக்கு அப்படி பயப்படுற?"என்று மனதில் இருக்கும் சங்கடத்தை அவனிடம் கூற.
"மா,அப்பாக்கு இந்த மாதிரி பேசுவதோ நக்கலடிக்கிறதோ பிடிக்காது மா,எப்ப பாரு ஹிட்லர் மாதிரி ஒரு பார்வை பாக்குறாரு,இந்த லட்சணத்தில் நான் வேற கேலியா கிண்டலா பேசினால் அம்புட்டு தான் என்னை கடிச்சி துப்பிருவாரு" என்று தாயிடம் தந்தையின் குணத்தை பற்றி சொல்ல அவரும் "ஆமாம் டா கன்னு உங்கள் அப்பா கொஞ்சம் முசுடு தான் ஆனாலும் உனக்கும் எனக்கும் எந்த குறையும் வச்சதே இல்லை டா."
"அது என்னவோ சரிதான் மா,பாவம் அப்பா நாள் முழுக்க ஆட்டோ சவாரி அடித்து தினமும் 300ரூபாய்,400ரூபாய் னு சம்பாரிச்சு ஏதோ வயித்துக்கும் வாய்க்கும் வஞ்சனை செய்யாமல் குடும்பம் நடத்திட்டு வராரு. நான் வீடு வாங்கனும் சொன்னது கூட எனக்காக இல்லை மா...எல்லாம் என்னோட வருங்கால மனைவி ஜானு நம்பளை மதிக்கனும்னு தான் மா."என்று தன் தாயிடம் உணர்வுபூர்வமாக தன் எண்ணத்தை வெளிப்படுத்த அவரோ தன் மகனின் தலையை வருடியவாறு "கன்னு நீ எங்க பையன் டா சின்னவயசுல இருந்தே கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவன் அதனால சூழ்நிலையை புரிஞ்சிப்ப ஆனால் வர பொன்னுங்க அப்படி இருப்பாங்கனு எதிர்பார்க்க முடியாது நீ சொல்ற மாதிரி ஒரு தனி வீட்டுக்கு நம்ப குடிபோகனும் டா"என்று நீண்ட பெருமூச்சு விட..அவனின் கைப்பேசி அழைத்தது "ஹலோ...என்றான் வினோத்".
எதிர்முனையில் அவனது மேனஜர்"ஹலோ வினோத் இன்னைக்கு நான் புதுசா சேர்ந்ததால எனக்கு எல்லாம் பார்த்து பார்த்து பன்னிங்க ரொம்ப தாங்க்ஸ் நீங்க எந்த உதவியினாலும் என்னை தயங்காம கேளுங்க சரியா அப்றம் நான் நாளைக்கு நேரில் பேசுறன் பை என்று போனை வைத்துவிட அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது "நாம ஏன் அவர்கிட்ட கடன் கேக்ககூடாது சும்மா இல்லை வட்டிக்கு வாங்கிப்போம்" என்று மனதினுள் கணக்கு போட அவனது தாய் "என்னடா ஏதோ பலமா யோசிக்கிற?என்று கேட்க.
"இல்லை.. சார் கிட்ட கடன் வாங்கிக்கலாமானு யோசிக்கிறேன்"என்று நகத்தை கடிக்க. டேய் அது இருக்கட்டும் செவ்வாய் கிழமை அதுவுமா நகத்தை கடிச்சு ஏண்டா நடுவீட்டில் துப்புற என்று கடிந்துகொள்ள"
"ம்ம்ம் அப்ப புதன் கிழமை நகத்தை கடிச்சு துப்புனா பரவாயில்லை யா என்று தாயை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க"...ப்ச்ச் உன்கிட்ட போய் சொல்றேன் பாரு என்று எழுந்து சமையலறைக்கு சென்றார்.
நேரம் மணி இரவு 7.30
வாசலில் திடிர் கூச்சல் சத்தம் எதிர்வீட்டு குடிகாரன் புருஷனும் அவனது அப்பாவி மனைவிக்கும் இடையே ஏதோ தகறாரு போல வழக்கம் போல் அனைவரும் எட்டிபார்த்தால்..
அந்த பெண் அவனை ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தாள். "தருதல தருதல தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து வீட்டில் வம்பு இழுக்குறீயே வெக்கமா இல்லை, வயசு பொன்னை வீட்டில் வச்சிக்கிட்டு தினமும் குடிச்சிட்டு காசு வேற கரியாக்குறியே உன்னையெல்லாம் சும்மாவே விடக்கூடாது என்று..அவனை வறுத்தெடுக்கும் காட்சியை அனைவரும் வேடிக்கை பார்க்க...
ரத்தினவேல் சவாரி முடித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது. "அம்மாடி நிறுத்துமா,என்னம்மா இந்த அடி அடிக்கிற அவரு உன் புருஷன் மா எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க உள்ள போமா"என்று கூற
"அண்ணே, புருஷனா உங்களை மாதிரி லட்சணமா வேலைவெட்டி பார்த்து பொண்டாட்டி புள்ளைய பக்குவமா பார்த்துக்கனும். ஆனால் இந்த ஆளு தினமும் குடிச்சிட்டு வந்து என்னை அந்த அளவு கஷ்டபடுத்தி பாக்குறாரு. என்று கண்ணை கசக்க பதில் எதுவும் கூறாமல் ராதாவை பார்த்தபடி வீட்டினுள் நுழைய...
"என்னங்க இந்தாங்க தண்ணீர் என்று தண்ணீர் குவளையை நீட்டினாள் ராதா". அதை வாங்கி பருகிவிட்டு "அம்மாடி ராதா ,இன்னைக்கு இரவு உணவு எதுவும் செய்யவேண்டாம். நான் உன்னையும் வினோத்தையும் ஹோட்டல் கூட்டிட்டு போலானு இருக்கேன் என்று இன்முகத்துடன் கூற வினோத் ஆச்சரியப்பார்வையை தந்தை மீது செலுத்த "வினோத் கன்னு இங்க வா" என்று அழைத்தார்.
"சொல்லுங்க பா என்று அவரருகே நிற்க கையில் இருந்த பையை திறந்து அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாயை நீட்டினார்.
"அ...அப்பா உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்?
"அதானே உங்களுக்கு ஏதுங்க இவ்வளவு பெரிய தொகை?" என்று ராதாவும் கேட்க அவர் சரித்துக்கொண்டே "பயப்படாதிங்க இது இன்ஷுரன்ஸ் பணம். நான் கல்யாணம் ஆன புதுசுல ஒரு லைப் இன்ஷுரன்ஸ் பாலிஸி போட்டுருந்தேன். அது இன்னைக்கு மெச்யூரிட்டி டேட் ,அதான் எல்.ஐ.ஸி ஆபிஸ் போயிட்டுவர கொஞ்சம் நேரம் ஆகிருச்சு. என்றதும்.
"எ...என்னங்க இது எப்பங்க சேர்ந்தீங்க?.
"ஹாஹா நீ கர்ப்பம் ஆயிருக்கனு கேள்விபட்ட நாளிலிருந்து எனக்கு ஏதோ வாழ்க்கை மேல ஒரு பயம் வந்துச்சு. நம்பள நம்பி வந்த பொண்டாட்டியையும் புள்ளையையும் நல்லபடியா காப்பாத்தனுமேனு. அப்பதான் அந்த இன்ஷுரன்ஸ் ஏஜெண்ட் என்னை மீட் பன்னப்போ சரின்னு ஒரு பாலிஸி போட்டேன். 25 வருஷம் ஓட்டினதே தெரியவில்லை பாரேன்."
......
அதுசரிங்க பா இந்த பணம் இப்ப எதுக்கு என்கிட்ட தரிங்கனு தெரிஞ்சிக்கலாமா?என்று மகனின் கேள்விக்கு "இந்த பணத்தை வீடுவாங்க முன்பணமா வச்சிக்கோ" மீதி லோன் போட்டுக்கலாம்.
"எ...என்னங்க வீடு நம்ப பட்ஜட்டுக்கு ஏத்தமாதிரி?, என்று தயங்கிக்கொண்டே கேட்க "ஹாஹா.. அதான் நீ கூட ஏதோ விளம்பரம் பார்த்து நம்பர் கூட சேவ் பன்னி வச்சிருக்கியே அதே தான்"
"என்னங்க சொல்றீங்க? "என்ற ராதாவின் கேள்விக்கு சிரித்து கொண்டே பதிலளித்தார்.
"நீ ரேஷன் போயிட்டு வனஜா மாமி கூட நின்னு அந்த விளம்பர பலகையையே பார்த்துட்டு இருந்தீயே அததான் டி சொல்றேன்,நான் அந்த வழியா சவாரி வந்தபோது உன்னை பார்த்தேன்".
"அய்யய்யோ நீங்க பார்த்திங்களா நம்பர் போன்ல பதிவு பன்னத.."என்று தலையை சொறிந்துக்கொண்டே பேந்து பேந்து முழிக்க..அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிறகு அதே விளம்பரத்தை தான் செய்தித்தாளிலும் காலை பார்த்ததாகவும் கூற எப்படியோ வீடு வாங்க வழி கிடைத்துவிட்டது என்ற நிம்மதியில் ஹோட்டலுக்கு தயார் ஆகினான் வினோத்.
தலையை சீவியவாறே கணக்கிட்டு கொண்டிருந்தான். வீட்டு இ.எம்.ஐ க்கு சம்பள காசு முழுவதும் போனால் கூட வீட்டுச்செலவுக்கு அப்பா சவாரி அடித்து ஈட்டும் காசினை வைத்து சமாளிப்போம் என்று தீர்மானம் செய்ய இப்போது தான் அவன் முகத்தில் சந்தோஷமே வந்தது. முதன் முறையாய் தன் தந்தை ரத்தினவேல் நினைத்து பெறுமைப்பட்டான்.
குடித்து குடித்து காசை வீணாக்கும் எதிர்வீட்டு ஆள் எங்கே,வரும் சொற்ப வருமானத்தில் சேமிப்பாக இன்ஷுரன்ஸ் போட்டு வைத்த தந்தை எங்கே..."அப்பா ஐ லவ் யூ" என்று ஊருக்கே கேக்கும்படி கத்தி சத்தமாக கூறவேண்டும் என்று ஆசை வந்தது.
மூவருமாக ஹோட்டலுக்கு சென்றனர்.
"அப்பா என்ன சாப்பிடுறீங்க?என்றான் வினோத்.
பிரியாணி சொல்லிடு மூனுபேருக்கும் என்றார் ரத்தினவேல். மூவருமாக ஹோட்டலிலில் பிரியாணி ரசித்து சாப்பிட "ப்பா இந்த ட்ரம்மில் இருக்கிற பிரியாணி யை கரண்டியில் அள்ளி அடிக்கிறப்ப டங்குனு ஒரு சத்தம் வருதே மனசெல்லாம் என்னமோ பன்னுது என்று வினோத் கூற "இதை கேட்ட ரத்தினவேல் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு "ஏண்டா கன்னு நீ இப்படியெல்லாம் காமெடியாக பேசுவியா?, நான் இப்பதான் பார்க்கிறேன்" என்று கூற.
"அப்பா நான் உங்கள் கிட்ட மனசு விட்டு நிறைய பேசனும் னு நினைப்பேன் ஆனால் நீங்க கோபமா பேசுறப்ப மனசு கஷ்டமா இருக்கும். வர காமெடி கூட வராது எனக்கு..என்று தந்தையிடம் கூற "..
எதையோ யோசித்தவர் கண்கலங்கியபடி "இனி அப்படி ஒரு நிலை இருக்காது இந்த அப்பா கிட்ட நீ தயங்காமல் பேசலாம். ஏதோ எனக்குள் ஒரு டென்ஷன். அதான் அப்படி திட்டுவேன் மத்தபடி உன்மேல எந்த கோபமும் இல்லை".
"ஏங்க உங்கள் கிட்ட ஒன்று கேக்கலாமா?"என்று ராதா குறுக்கிட "சொல்லு ராதா " என்று அவர் வினவ
"எப்படி உடனே வீடு வாங்க சம்மதிச்சிங்க?"என்று அவர் கண்களை எதிர்நோக்கி கேட்க அதற்கு அவர்
"இந்த வீட்டுக்கு மருமகளா வர ஜானு தண்ணீர் லாரி பின்னாடி வரிசையில் நிக்கிறதும். காலையில் காலைகடனுக்கு கூட வரிசையில் நிற்கவும் எனக்கு விருப்பம் இல்லை. எந்த ஏரியாவில் இருக்கிறோம் அப்படிங்கிறத விட எந்த வீட்டில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்ப பாரு சென்னையோட முக்கியமான பகுதியான பேரிஸ் ஏரியில் இருக்கிறோம் ஆனால் வீடு எப்படி? சுத்தி நாலு சுவர் அதுல கொஞ்சமா தடுத்து ஒரு அடுப்பு மேடை. அப்றம் ஒரு சின்ன கட்டில் போட்டாலே பெட்ரூம் அடைஞ்சி போகுது..இதுக்கு மாசம் 5000 வாடகை. அதுக்கூட பரவாயில்லை ஒரு ஆத்திர அவசரத்துக்கு கழிப்பறை பயன்படுத்த முடியுதா?ச்சி இந்த நிலை என் மருமகளுக்கு வேண்டாம். இ.எம்.ஐ கட்டினாலும் பரவாயில்லை சமாளிக்கலாம் ஏதோ ஒதுக்குபுற ஏரியாவில் ஒரளவு வசதியாக ஒரு வீட்டில் நிம்மதியா காலத்தை ஓட்டலாமே. என்று சொல்லி முடிக்கவும் சர்வர் பில் கொண்டு வரவும் சரியாக இருந்தது,அவர் பில் கொடுக்கும் முன்பே வினோத் பணத்தை நீட்டினான்.
"அப்பா பில் நான் தரேன்" ..
தந்தை புன்னகையிக்க அன்றைய இரவு நிம்மதியாக கழிந்தது.
சில மாதங்களுக்கு பிறகு.
வாசலில் செம்மண் இட்டு கோலம் போட்டுக்கொண்டு இருந்தாள் ஜானு. நன்கு பெரிய கோலமாக இருக்கவே ராதா அதைப்பார்த்து பூரித்து போனாள். "அம்மாடியோ இம்புட்டு பெரிய கோலமா"?என்று வியப்பாக பார்க்க "ஏன் அத்தை நீங்க இவ்வளவு பெரிய கோலம் போட்டதே இல்லையா?என்று கேட்க.
"அது ஏன் மா கேக்குற அந்த குடித்தனவாசல் வீட்டில் ஒரு கம்பி இழுக்கவே இடமில்லை இதுல எங்க இவ்வளவு பெரிய ரங்கோலி எல்லாம்"என்று சளித்துக்கொண்டார்.
"பேசிக்கொண்டு இருந்தவள் திடிருனு அ...அத்தை குழாய் திருப்பி விட்டு மறந்துட்டேன் என்று விருவிருனு ஓட அப்போது தான் நினைவுக்கு வந்தது தண்ணீர் லாரி பின்னால் குடத்தை ஏந்திக்கொண்டு வரிசையில் நின்ற காட்சி".
...
...
வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தனக்கும் கணவனுக்கும் டிபன் பாக்ஸ் எடுத்து பையில் வைத்துவிட்டு "ஏங்க நான் ரெடி வாங்க போகலாம் நேரமாயிடுச்சு"என்று குரல் கொடுக்க அவனும் தன் கை கடிகாரத்தை கட்டியவாறு அறையிலிருந்து வெளியே வந்தான். பைக்கை கிளப்பி அவளையும் அமர்த்திக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றான். ஆமாம் ஜானுவிற்கு வினோத்தின் அலுவலகத்தில் வேலை கிடைத்ததால் அவளும் அவனுடன் பணிக்கு செல்கிறாள்.
பைக்கில் போகும் வழியில் இவர்களை முந்திச்சென்ற காரை பார்த்து "ஏண்டி இந்த கார் நம்ப வாங்குனா எப்படி இருக்கும்?" என்று கேட்க.
"நல்லாதான் இருக்கும் ம்ம்ம் என்ன பன்றது ஆசைப்படுறது எல்லாம் வாங்கிடமுடியுமா?" என்று கூற.
"ஏண்டி அப்படி சளிப்பா சொல்ற?"என்ற கணவனிடம் "ஏன்னா நம்ப மிடில் க்ளாஸ், சின்ன சின்ன விஷயமே நமக்கெல்லாம் கனவு மாதிரி தான்"என்று கூறி பின்னே அமர்ந்தவாறு அவனை இறுகிகட்டிக்கொண்டாள்.
....முற்றும்...