மாமயி லன்னாய் கடம்பெற்றான் பெற்றான் குடம் - பழமொழி நானூறு 57
நேரிசை வெண்பா
கைவிட்ட ஒண்பொருள் கைவர வில்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யாய்
மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்
கடம்பெற்றான் பெற்றான் குடம். 57
- பழமொழி நானூறு
பொருளுரை:
மடப்பம் பொருந்திய மான் போன்ற பார்வையையுடைய சிறந்த மயில் போல்வாய்!
மெய்யான நெறியிலே நின்று உலகஇயலை அறிந்தார் உண்மையாகவே யாதொரு சாட்சியுமின்றிக் கடனாகத் தன் கையினின்றும் விட்ட ஒள்ளிய பொருள் மீட்டுத் தன் கைக்கு வருதல் இல்லை என்று கூறுவார்கள்;
பிறர்க்குக் கடனாகக் கொடுத்த பொருளை மீட்டுப் பெற்றானெனப் படுவான் உறுதி கூறுதற்குப் பாம்புக் குடத்தைப் பெற்றவனேயாவா னாதலால்.
கருத்து:
யாதொரு சான்றுமின்றிக் கடன் கொடுத்தலாகாது.
விளக்கம்:
'மெய்ப்பட்டவாறே உணர்ந்தார்' என்றது மெய்யான நெறியில் நிற்பார்க்கே மெய்ம்மை தோன்றும்; ஆகவே அவர் கூறியதே உறுதி என்பதாம்.
யாதொரு சான்று மின்மையால் கடம்பெற்றான் குடம்பெற்றான் ஆதலின் ’கைவிட்ட’ என்பதற்கு ’யாதொரு சான்றுமின்றி விடப்பட்ட’ என்று பொருளுரைக்கப்பட்டது.
'குடம்பெற்றான்' என்றது பண்டைநாளில் வழக்கினைத் தீர்ப்போர் சான்றில்லாதாரைப் பாம்புக் குடத்தின்கண் கையைவிட்டு அவர் வழக்கினைக் கூறுமாறு செய்வர். இது பண்டைய நாளில் தீர்ப்புக் கூறப்பட்ட முறை.
'கடம் பெற்றான் பெற்றான் குடம்' என்பது பழமொழி.

