நீரது மேகமாய்
வெண்டுறை
உடலை அறுத்து உணவாய் சமைத்து
திடமாய் புசித்திட வழிவழியே கற்று
கொடுத்தது எவரோ அவரே உயிரின்
கொடுமையை உணரா தீயோர் (க)
பணத்தின் ஓட்டம் பாசத்தை விரட்டும்
பிணத்தைக் கூட அதுவே உயிராக்கும்
கணிப்பதை விடவும் வீரிய காரணியாய்
மணிதோறும் மாற்றுமே எண்ணத்தை (உ)
குருதியைத் தந்திடும் பயிரோ பச்சை
அருந்திடும் நீருக்கு நிறமே இல்லை
மரங்களே மனிதனின் உயிரின் எல்லை
கருணையிலா மாந்தனே தொல்லை. (ங)
காற்றும் மழையும் கதிரின் ஒளியும்
மாற்றம் அடையுமோ மாயமாய் மறையுமோ
தோற்றங் கண்டே மயங்கும் மனிதராய்
மாறினால் துயரே ஞாலத்தில் (ச)
வானத்தில் ஓடிடும் நீரது மேகமாய்
ஏனத்தில் வந்திடும் தாகம் தீர்க்கவே
ஆனமும் மிதக்குமே அதிக நீரினில்
மேனிலை என்றாலும் தரையிலே (ரு)
---- நன்னாடன்.