காதல் காவியம் 5
கன்னமதில் காவியத்தை
மறைத்துவிட்டு மெல்லமெல்ல
கள்ளநகைச் செய்கின்றாய் - குழிபறித்து
எள்ளிநகை ஆடுகின்றாய்.
எண்ணமதில் தமிழ்தந்து
ஏட்டினிலே எழுதிவிட
ஏக்கங்களைத் தருகின்றாய் - மறு
ஆக்கங்களைத் தவிர்க்கின்றாய்.
என்மனதில் தான் நுழைந்து
எண்திசையும் தோன்றி நல்
ஊக்கங்களை ஊட்டுகின்றாய் - என்
ஊகங்களை ஊதுகின்றாய்.
என்னடி உன் சரசம்?
என்று நான் கேட்டுவிட்டால்
சாகசங்கள் புரிகின்றாய் - புதிய
சரித்திரங்கள் படைக்கின்றாய்.
மென்னடி போடுகையில்
மோவாயில் நாணம்தனை
மெள்ளத்தான் காட்டுகின்றாய் - மனம்
முள்ளான மலரல்லவோ!