சக்தி கொடுத்திடு என்தாயே
செந்தமிழ் நாடெனும் போதினிலே - துன்பத்
தீ வந்து பாயுது வயிற்றினிலே
செம்மொழி தன்னை அழித்திடவே - ஒரு
கூட்டம் அலையுது பாரினிலே
செந்தமிழ் தன்னை காத்திடவே - இங்கு
வெம்மை படருது மூச்சினிலே
செந்நாய் கூட்டம் கூடியே வந்து
ஒழிக்கத் துடிக்குது பேச்சினிலே
சாதனை செய்த மொழியினை - இங்கு
சாக்கடை மண்ணில் புதைத்திடவே
வடமொழி ஒன்றை மெல்ல புகுத்தி
ஆதிக்கம் செலுத்த நினைக்குதுவே
ஆதாரமில்லா ஆணவத்துடனே ஆட்டிப்
படைக்கவும் துடிக்குதுவே
ஆகாரம் உண்ண முடியாமல் எங்கள்
வயிறும் எரியுது கோபத்திலே
ஆதி பராசக்தி தேவியே நீயும்
ஆடியே வந்து அருள்வாயே
உயிருக்கும் மேலான தமிழினைக் காத்திட
சக்தி கொடுத்திடு என் தாயே!