வெறுத்தபின் பேர்க்குதல் யார்க்கும் அரிது – நாலடியார் 161

நேரிசை வெண்பா

பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி யணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161

- பெரியாரைப் பிழையாமை, நாலடியார்

பொருளுரை:

ஆரவாரித்தொலிக்கும் அருவிகளையுடைய அழகிய மலைகள் பொருந்திய சிறந்த நாடனே!

பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து மாசு நீங்கிய பெரியோரிடத்திலும் அவர் வருந்தத்தக்க பிழைகளைச் செய்யாதிருத்தல் வேண்டும். அவ் வருத்தத்தால் உண்டாகுந் தீங்கை நீக்கிக் கொள்ளுதல் எத்தகையவர்க்கும் இயலாது.

கருத்து:

பெரியோரை அவமதித்து ஒழுகினால் தீர்வில்லாத தீங்குண்டாகும்.

விளக்கம்:

பெரியோர் பொறுத்தற்குரியோராயினும் அவர் உள்ளத்துக்கு ஆகாதன அவரொழுகலாற்றிற்கு ஊறு பயக்குமாதலின் ‘வெறுப்பன செய்யாமை வேண்டும்' எனவும்,

இவை பொருந்தாதன என்று அவர் கருதுதலே ஈண்டு வருந்தியதாகுமாதலின் ‘வெறுத்தபின்' எனவும்.

எத்தகைய ஆற்றல் படைத்தவர்க்கும் அதனால் விளையுந் தீங்குகளை நீக்கிக் கொள்ளுதல் அரிதாகுமாதலின் ‘யார்க்கும்' எனவுங் கூறினார்.

"பூவுட்கும் கண்ணாய் பொறுப்பரெனக் கருதி யாவர்க்கேயாயினும் இன்னா செயல் வேண்டா" பழமொழி 43 என்றார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-22, 1:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே