பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும்

பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும்
கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களைப் பொதுவாக மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இருவகையில் அடக்குவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் மேற்கணக்காகும். கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டாகும். பாட்டு, தொகை நூல்களில் மேற்கணக்கு நூல்களை அடுத்துப் போற்றப்படுவது கீழ்க்கணக்கு நூல்களாகும். தமிழ்விடு தூது என்னும் சிற்றலக்கிய நூல்,
- - - - - - - - - மூத்தோர்கள்
பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
சேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கு
என்று இம்மூன்று தொகுதி நூல்களையும் முறையே குறித்துள்ளதை நோக்க கீழ்க்கணக்கு, பதிணென் கீழ்க்கணக்கு என்னும் வழக்குகள் மிகவும் பழமையானவை என்பது புலனாகிறது. கேடில் பதினெண் கீழ்கணக்கு என்பதிலிருந்து கெடுதலை தவிர்ப்பது நீதி உரைப்பது இதன் நோக்கம் என்பது தெளிவாகப் புலனாகிறது.
நீதி எடுத்துரைத்தலில் முதன் முதலில் இடம் பெறும் பதினெண் கீழ்க்கணக்கு நூலகள் பெண்களுக்கான நீதி எடுத்துரைத்தலிலும் பெரும்பங்காற்றுகிறது. அவ்வகையில் பெண்களின் நிறையை விளக்குவதாக இந்தக் கட்டுரை அமைகிறது. நீதிகளை எடுத்துரைத்தலால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மட்டும் ஆய்வின் எல்லையாக அமைகிறது.
நிறை - அகராதி பொருண்மை
கீழ்க்கணக்கு நூல்களில் நிறை என்னும் சொல்லிற்கு வழங்கபட்ட பொருளை அறியும் முன்னர் அதன் பொருள் இன்றையச் சூழலில் எவ்வாறு வழங்கப் படுகிறது என்பததையும் வெவ்வேறு காலகட்டங்களிலும் என்ன பொருள்களில் வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
சங்க இல்க்கியங்கள், கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள் என இவற்றிற்கு மட்டும் விளக்கங்கள் தரும் சனத தமிழ் அகராதி நிறை என்பதற்கு,
“அடக்கம், அறிவு, ஒப்பு, ஒழுக்கம், ஒழுகல், ஒழுங்கு, கற்பின் வழி நிற்றல், கற்பு, கனம், குறைவில்லாத, சால், சீலம், நிறுக்கப்படும் பொருள், நிறுத்தல், நிறைமொழி, நீதி, நெஞ்சை நிறுத்தும் ஆற்றல், பெருமை, மனத்தை அதன் வழி விடாது நிறுத்தல், மனத்தை நல்வழியில் நிறுத்தல் ஆகிய நற்பழக்க வழக்கங்கள், மனதில் பிறர் அறியாத படி நிறுத்தும் நிறம், மனவடக்கம், மனஉறுதி, மாட்சிமை, மிகுதி, வெள்ளம், வேதம்.” (சோ. அ. புகழீசுவரன் சனத அமிழ் அகராதி ப.99)
என விளக்கம் தருகிறது. இவ்விளக்கத்தைக் கொண்டு நிறை என்னும் சொல் மனம் சார்ந்த கட்டுப்பாடு, ஒழுக்கம், கற்பு என்னும் பொருள்களைத் தருவதாகச் சுருக்கமாகக் கொள்ளலாம்.
இன்றையச் சூழலில் நிறை என்னும் சொல் பொதுவாகப் பல பொருண்மைகளில் வழங்கப்படுகிறது. தமிழ் மொழி அகராதியில்,
“நிறை: அழிவின்மை, ஆடுஉக்குண நான்கினொன்று, இடை, உறுதிப்பாடு, கற்பு, தயிரியம், துலாராசி, நியாயம், நிறுத்தலளவு, நிறையென்னேவல், நிறைவு, நீர்ச்சால், நூறுபலம், மாட்சிமை, முறையினிலைமை, வரையறை” (ந. கதிர் வேற் பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.897)
என்கிறார் ந. கதிர் வேற்பிள்ளை. இங்கு நிறை என்னும் சொல் நிறைவு, கற்பு, ஆண்களின் கனம், உறுதி என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது.
சுராவின் தமிழகராதி, நிறைகுணம் என்பதனைப் பொறுமையான குணம் என்றும் நிறை என்பதனைத்,
“தராசு, எடை, துலாம் ராசி, மன அடக்கம், தாளவகை. வலிமை, அறிவு, அழிவிண்மை, நீதி” (சுராவின் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ப.636)
என்றும் பொருள் வழங்குகிறது. இதன்படி மன அடக்கம், கற்பு, நீதி என்னும் பொருள்களில் நிறை வழங்கப்படுகிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழகராதி நிறை என்பதற்கு, “நிறைய, நிறைந்து, இனிய உறவுகள், சிறப்புகள்” என்று பொருள்படும்படியாக விளக்கமளிக்கின்றது.
மேற்கண்ட அகராதிப் பொருண்மைகளைப் பார்க்கும் பொழுது சங்ககாலம் முதல் இன்று வரை நிறை என்னும் சொல்லின் பொருள் சிறுபாண்மை மாறி மாறி அமைந்தாலும் பெரும்பான்மை மாறாத ஒரே தன்மையுடைய பொருள்களைத் தருவதாக அமைகிறது. இவ்விளக்கங்களைக் கொண்டு நிறை என்பது மனக் கட்டுபாடு, கற்பு என்னும் பொருண்மையில் அமைவதாகத் துணிய முடிகின்றது.
திருக்குறளில் நிறை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நிறை என்னும் சொல் திருக்குறளில் தான் அதிகம் கையாளப்பட்டுள்ளது. அது மேம்போக்காகப் பார்க்கும் பொழுது ஆண், பெண் என இருவருக்கும் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக அல்லாமல் இருவேறு பொருளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆண்மையைக் குறிக்கும் நிறை என்பது மனக்கட்டுப்பாடு என்று பொருண்மையில் அமைந்துள்ளது.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்ஙனும் யார்க்கும் எளிது. (குறள்.864)
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள் (குறள்.917)
என்னும் இரண்டு குறட்பாக்களிலும் நிறை என்னும் சொல் மனக் கட்டுப்பாடு என்னும் பொருண்மையில் வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது.
நிறைநீர நீரவடி கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு (குறள்.782)
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். (குறள்.154)
என்னும் குறட்பாக்களில் அறிவுடையார் பேதையரிடம் நட்பு கொள்ளமாட்டார் என்றும் நிறையுடைமை என்பது பொறையுடைமை என்னும் ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் இருப்பதையே குறிப்பிடுகிறது. அதேபோன்று,
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும். (குறள்.28)
என்னும் குறட்பாவில் நிறைமொழி மாந்தர்கள் என்பவர் மனதைக் கட்டுப்படுத்தி வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார் வள்ளுவர். ஆகவே ஆண்மையைப் பற்றிய நிறையை மனக்கட்டுப்பாடு என்பதுடன் தொடர்புடையதாகவே குறிக்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் வழி பெண்களுக்கு உரியதாகச் சொல்லிப்படுகின்ற நிறையே தலைமையானதும், சிறப்புக்குரியதாகவும் கருதப்படுகிறது. இங்கு நிறை என்பது கற்பு நெறி என்று விளக்கம் கொள்ளப்படுகிறது.
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை (குறள்.57)
இக்குறளுக்கு விளக்கம் தரும் பரிமேலழகர், “நிறை : நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக் காவலால் பயன் இல்லை” என்பார் (பரிமேலழகர் (உ.ஆ.), திருக்குறள், பக்.57-58). எனவே நிறை என்பது கற்பு நெறியில் நிறுத்துதல் எனப் பொருள்படும்.
திருவள்ளுவர் நிறை அழிதல் என்னும் அதிகாரத்தில் இரு இடங்களிலும், நாணுத்துறவு உரைத்தல் என்னும் அதிகாரத்தில் ஒரு இடத்திலும் நிறை என்பதனை விளக்குகிறார்.
நிறையுடையேன் என்பேன்மண் யானோ: என் காமம்
மறையிறந்து மன்று படும் (குறள்.1254)
நிறை அரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும். (குறள்.1138)
இக்குறட்பாக்களில் நிறையுடையவராக இருக்க தம்மால் இயலவில்லை காமம் வெளிப்பட்டது. அதனால் பிறர் அறியாமல் காக்க முடியவில்லை என்று தலைவி வருந்துவாள். நிறையழிதல் என்பதற்கு, “அதாவது தலைமகள், மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்கமாட்டாது வாய்விடுதல்” (பரிமேலழகர் (உ.ஆ.), திருக்குறள், ப.507) என்கிறார் பரிமேலழகர்.
அதே போன்று “நிறையெனப்படுவது மறை பிறர்அறியாமை” (கலி. நெய்தல்.16) என்கிறது கலித்தொகை.
பெண்களுக்கு நிறை என்பது நாணம் என்ற தாழிட்ட கதவு என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
“காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு” (குறள்.1251)
இக்குறள் மூலம் நாணம் என்ற தாழிட்ட கதவினை உடைப்பவர்கள் காம வேட்கை மிகுதியாக உள்ள கணிச்சியாவர் என்பது புலனாகின்றது ஒழுக்கம் வாய்க்கப்பெற்ற தலைவிக்கு,
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொல்.கள.8)
என்பார் தொல்காப்பியர்.
பெண்களுக்கு உரியவையாகச் சொல்லப்பட்ட குறட்பாக்களில் நிறை என்பதனை மனக்கட்டுப்பாடு, நாணம் தாழிட்ட கதவு, கற்பு வழி நெஞ்சை நிறுத்துதல் ஆகிய பொருள்களில் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
பிற இலக்கியங்களில் நிறை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைத் தவிர பிற அற இலக்கியங்களில் எட்டு இடங்களில் நிறை என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஐந்து இடங்களில் ஆண்களுக்குரிய மனக்கட்டுப்பாடு என்னும் பொருண்மையிலும் மூன்று இடங்களில் பெண்மைக்குரிய மனக்கட்டுப்பாடு என்னும் பொருண்மையிலும் வருகின்றது.
ஆடவர் பற்றிக் குறிப்பிடும் இன்னா நாற்பதில் நிறை என்னும் சொல் நெஞ்சினை ஒரு வழியில் நிறுத்துதல் என்னும் பொருளில் வருகின்றது.
சிறையில்லா மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந்து ஆடை கழுவுதல் இன்னா
அறைபறை அன்னவர் சொல்இன்னா இன்னா
நிறையில்லான் கொண்ட தவம் (இன்னா.23)
இப்பாடலில் நிறையில்லாதவன் கொண்ட தவம் இன்னாததாக அமைகின்றது.
திரிகடுகத்தில் நிறை என்பது ஐந்து புலன்களையும் அடக்குபவன் என்னும் பொருளிலும், மனதில் உறுதி கொண்டவன் என்னும் பொருளிலும் அமைகின்றது. இதனை,
நிறைநெஞ் சுடையானை நல்குரவு அஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை எவ்வுயிரும் அஞ்சும்இம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள் (திரி.92)
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து (திரி.80)
என்னும் பாடல்கள் விளக்குகின்றன. இவ்விரு பாடல்களிலும் ஐம்புலன்களை அடக்குதல், மனதில் உறுதி கொண்டிருத்தல் என்னும் பொருண்மைகள் மனக்கட்டுப்பாட்டையே குறிக்கின்றன. அதேபோன்று மன உறுதி இல்லாமல் பெண்ணாசையில் ஓடித் திரிபவர் என்னும் பொருண்மையில் பின்வறும் சிறுபஞ்சமூலம் பாடல் ஒன்று அமைகின்றது.
ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்
தாம்பல்வா யோடி நிறைக்காத்தல் - ஓம்பார்
நெடுங்கழைநீண் மூங்கில் எனஇகழ்ந்தார் ஆட்டும்
கொடுங்குழை போலக் கொளின் (சிறுபஞ்ச.55)
இப்பாடலிலும் மன உறுதியைக் காத்தல் என்னும் பொருளிலேயே நிறை என்னும் சொல் இடம்பெறுகின்றது. ஒரு பெண்ணிடத்தில் கூறுவதைப்போல அமைந்த,
நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே
பொறையுடைமை பொய்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளால் இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாயன்னன் என்னத் தகும் (ஏலாதி.6)
என்னும் பாடலிலும் நிறை என்பது மனவடக்கமுடைமை என்னும் பொருண்மையிலேயே அமைந்துள்ளது.
அற இலக்கியங்களில் மேற்குறிப்பிட்ட ஐந்து பாடல்களில் ஆடவர் பற்றிய நிறை அனைத்தும் மனக்கட்டுப்பாடு என்னும் பொருண்மையிலேயே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
பெண்மை பற்றிய நிறை என்னும் சொல் திருக்குறளைத் தவிர்த்த அற இலக்கியங்களில் மூன்று இடங்களில் கையாளப்படுகின்றது. அவற்றில் பழமொழி நானூற்றில் ஒரு இடத்தில்,
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா – அறையோ
வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல் (பழமொழி.262)
என்று வழங்குகிறது. இப்பாடலில் நிறையான் மிகுகல்லா நேரிலையார் என்பது மனக்கட்டுப்பாடுடைய பெண்ணை வசப்படுத்த முடியாது என்னும் பொருளைத் தருகிறது. நான்மணிக்கடிகையில் ஒரு பாடலில்,
பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகதல் நன்று. (நாண்மணி.15)
என்னும் அடிகளில் நிறை என்னும் சொல் இடம்பெறுகிறது. இதன் உரையாசிரியர், “பெருமையில்லா மாந்தரைவிட நெஞ்சை ஒருவழியில் நிறுத்துகின்ற கற்பில் சிறந்த பெண் மேலானவள்” (துரை. இராசாராம் (உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) முதல்பகுதி, ப.18) என்று உரை தருகிறார்.
இனியவை நாற்பதின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்,
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான் இனிது நன்கு. (இனியவை.10)
என்கிறார். “கற்பு மாட்சியில்லாத மனைவியரை நீக்கி விடுதல் நல்லது” (துரை. இராசாராம் (உ.ஆ), பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) முதல்பகுதி, ப.65) என்பது உரையாசிரியர் பாடம்.
நாண்மணிக்கடிகை, இனியவை நாற்பது, ஆகிய இரு பாடல்களிலும் நிறை என்னும் சொல்லிற்கு, ‘நெஞ்சை ஒரு வழியில் நிறுத்துகின்ற கற்பில் சிறந்த பெண்’ என்றும், ‘கற்பு மாட்சியில்லாத மனைவியர்’ என்றும் உரையாசிரியரால் பொருள் கொள்ளப்படுகிறதே தவிர கற்பு என்பது மூல ஆசிரியரின் பாடம் அன்று.
நிறையும் பெண்மையும்
நிறை என்னும் சொல்லின் பொருளை வெளிப்படையாகக் கற்பு என்று திருவள்ளுவரும் பிற அற இலக்கிய ஆசிரியர்களும் கூறாத பொழுது அகராதிகள் நிறை என்பதற்குக் கற்பு என்று பொருள் கொள்ள வேண்டியதன் காரணம் ஆயவேண்டியது கடமையாகிறது. முதலில் மனக்கட்டுப்பாடு என்னும் பொருளை நினைக்க அது மனத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பொருளைத் தருகிறது.
ஆண்மை பற்றிய நிறை என்பதனை அற இலக்கியங்கள் மனக்கட்டுப்பாடு என்று வெளிப்படையான பொருள் வழங்குகிறது. பெண்மை பற்றிய நிறை என்பதனை மனக்கட்டுபாடு என்னும் பொருளுடையதாயினும் வேறொரு சொல்லில் அதாவது கற்பு என்னும் சொல்லில் குறிக்க இன்றியமையாத காரணம் புலப்படுகின்றது.
ஆடவர் என்போர் தம் நெஞ்சைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளுதல் மனக்கட்டுப்பாடு ஆகும். அதாவது பெண்கள் மீது மனத்தைச் செலுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்வது ஆகும். அதே பொருண்மை பெண்டிற்குப் பொருந்தாது. தொல்காப்பியர் கூற்றுப்படி, அச்சமும் நாணமும் பெண்டிர்க்கு முந்துறும். இயல்பாகவே பிறர் (ஆடவர்) மீது தம் மனம் செல்லாது ஆகையால் பெண்டிர்க்கு மனக்கட்டுப்பாடு என்பது ஆடவர்களிடத்தே தம் மனத்தைப் பறிகொடுக்காமல் காப்பது. எனவே மனக்கட்டுப்பாடு என்பது ஆண்களுக்கு மனதைப் பிறர் மீது செலுத்தாமை, பெண்களுக்கு மனதைப் பிறரிடம் பறிகொடுக்காமை என்பது தெளிவாகிறது. இதனை,
நாண்இல மன்ற எம்கண்ணே ..........
.......... ........... பிரிந்தினோர்க்கு அழலே (குறுந்.35)
என்னும் குறுந்திணைப் பாடல் மூலம் அறியமுடிகின்றது.
மனதைக் கட்டுப்படுத்தல் என்பது ஒரு நிகழ்வின் மீது எண்ணம் சென்ற பின்னர் கட்டுப்படுத்துதல். ஆனால் பறிகொடுக்காமை என்பது இயல்பிலேயே மனத்தைத் தூய்மையாகக் கொண்டிருத்தல் ஆகும். ஆகையால் மனதைப் பறிகொடுக்காமல் காக்கும் வகையான மனக்கட்டுப்பாட்டைத் தனியே ஒரு சொல்லில் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதனால்,
பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (குறள்.54)
என்னும் குறளின்படி பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் நிறை என்பதைக் கற்பு என்னும் சொல்லால் குறித்தனர் சான்றோர்.
தொகுப்புரை
• நிறை என்னும் சொல்லிற்குப் பொதுவாக மனக்கட்டுப்பாடு, கற்பு என்னும் பொருள்கள் வழங்கப்படுகிறது.
• நிறை என்னும் சொல் திருக்குறளில் ஒன்பது இடங்களில் கையாளப்படுகின்றது. ஐந்து குறட்பாக்களில் ஆண்கள் பற்றிய மனக்கட்டுப்பாட்டையும் நான்கு குறட்பாக்களில் பெண்மை பற்றிய மனக்கட்டுப்பாட்டையும் குறிப்பதாக அது அமைகின்றது.
• திருக்குறளைத் தவிர மற்ற பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் எட்டு இடங்களில் நிறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று பாடல்களில் பெண்மையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
• பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மொத்தம் எட்டு இடங்களில் பெண்மை குறித்த நிறை இடம்பெறுகின்றது. இந்நிறை மனக்கட்டுப்பாடு என்னும் பொருளில் வழங்கப்பட்டாலும் பெண்மை குறித்த சிறப்பு காரணமாகக் கற்பு என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
• அற நூல்களில் நிறை என்னும் சொல் நிறைதல், மிகுதி என்னும் பொருள்களிலும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எழுதியவர் : முனைவர் க. இராஜா (15-Feb-22, 10:05 pm)
சேர்த்தது : முனைவர் க இராஜா
பார்வை : 161

மேலே