பெண்

சிக்கென்று உடை உடுத்து
சிங்கார புன்னகை சிந்தி
செஞ்சாந்து பொட்டிட்டு, மங்கள
குங்குமம் வகிட்டில் துலங்க
தேகமெங்கும் மஞ்சல் வீச....

எட்ட வைத்து நடக்குங்காள்
எழில் கொஞ்சும் கொலுசொளி
கேட்க முன்வாசல் திறக்கும்
மனையாளை விரும்பும்
காளைகளே அனேகம் இவ்வகிலத்தில்.

உயிர் சத்து அனைத்தும்
உரியப்பட்டு வெறும் சதைப்
பிண்டமாகி போன மங்கையை
மகிழ்வு மனமெங்கும் வியாபித்த
புன்னகை சிந்த உந்தும்
மடமைக்கு பதிலென்ன கூற
இயலும்....

மனம் மட்கி மடிந்த நிலையிலும்
மங்களம் காக்க வகிட்டில் செம்மை
துலங்கச் சிரிக்கும் சின்ன இதயத்தில்
செந்தீர் வழிந் தோடும் வலியை
யாரும் உற்று நோக்கியது உண்டா???

உற்றுநோக்கும் காளையை கைபிடித்திருப்பின்
காதல்வாழ்வு கனவாகிப் போகாது
நனவாகி வாழ்ந்திருப்பாளே!

மனதில் ஆசையை விதைத்து
அறுவடைக்கு வழி அல்லாது
அழுகிப் போகச் செய்யும்
படைத்தவனின் கணக்குதான் என்ன???

எழுதியவர் : கவி பாரதீ (20-Feb-22, 5:37 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : pen
பார்வை : 154

மேலே