குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம் உழைதங்கட் சென்றார்க்கு ஒருங்கு – நாலடியார் 167

நேரிசை வெண்பா

மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா – துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க்(கு) ஒருங்கு 167

- பெரியாரைப் பிழையாமை, நாலடியார்

பொருளுரை:

அரசர் வளமும் மகளிரின் எழுச்சியழகும் அவர்களுடன் நெருங்கிக் கலந்திருப்பவர் நுகர்வர்: நேயம் என்னும் அந் நெருக்கமில்லாமல் அதற்குத் தகுதியுடைமை வேறு வேண்டாம்.

நெருங்கத் தழைகள் பொருந்தித் தாழ்ந்துள்ள குளிர்ச்சியான மரங்களெல்லாம், தம்மிடம் வந்தடைந்தார் அனைவர்க்கும் வேறுபாடின்றி நிழலிடமாகும்.

கருத்து:

ஆதலால், நேயத்தால் தம்மை அடைந்தவரிடம் தகுதி வேறுபாடுகள் கருதாமல், பெரியோர் அளவளாவியிருந்து அவரை மகிழ்விப்பர்.

விளக்கம்:

உவமைகள் மூன்றும் இருவகையாகப் பெரியோர் மாட்சிமை யுணர்த்தின. சிறப்பாக நேய நெருக்கமுடையோர் துய்த்தற்கு முதலிரண்டு உவமைகளும், தகுதி வேறுபாடு கருதாமைக்குப்பின் ஓர் உவமையும் வந்தன. இதனாற் பெரியோரது திருநலம் விளங்கிற்று.

துன்னியென்பதற்குக் கிளைகள் நெருங்கியென உரைத்தலுமாம். குளிர் மரமாதலின் குழை கொண்டு தாழ்ந்தவெனக் கூறப்பட்டது.

உழை – இடம்; ஈண்டு நிழல் பயக்கும் இடமென்க. வேறுபாடு கருதாமைப் பொருட்டு ஒருங்கு என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-22, 4:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே