கொரோனாவின் நாட்கள் நூல் ஆசிரியர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
கொரோனாவின் நாட்கள் !
நூல் ஆசிரியர் : நீல நிலா செண்பகராஜன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு : கந்தகப் பூக்கள் பதிப்பகம், 2/2440 F2, கவிதா நகர், ஜக்கம்மாள் கோவில் பின்புறம், சிவகாசி-626 113.
பக்கங்கள் : 112. விலை ரூ. 120.
******
நூல் ஆசிரியர் நீல நிலா செண்பகராஜன் அவர்கள், தான் நடத்தி வரும் காலாண்டு இதழான நீல நிலாவை பெயரோடு இணைத்துக் கொண்டவர். நடுவணரசில் அலுவலராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியிலும் ஈடுபட்டு வருபவர். 2022 புத்தாண்டு தொடக்கத்தை கோலாகலமாக விழா எடுத்து நூல்கள் வெளியிட்டுக் கொண்டாடி மகிழ்ந்தவர். நானும் சென்று வாழ்த்துரை வழங்கி வந்தேன். அன்றே வழங்கியது இந்நூல்.
கொரோனா காலத்து ஊரடங்கை பலரும் ஓய்வாகவே எந்த வேலையும் செய்யாமலே ஒருவித மனஇறுக்கத்துடன் கழித்து வந்தனர். வெகுசிலர் மட்டுமே பயனுள்ள நாட்களாக பயன்படுத்திக் கொண்டனர். நூலாசிரியரும் கொரோனா ஊரடங்கு நாட்களில் தேதி நேரமிட்டு வடித்த கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி விட்டார். பாராட்டுகள். எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இளைஞர்.
வினை!
ஓய்வு / ஊரடங்கு / நாட்களை / உடல்நலப்
பராமரிப்பில் / தாயாகவும்! / நூல் வாசிப்பில்
நூலகச் சூழலாகவும் / சூழல் வரைந்ததில்
ஒரு காத்திரமான / படைப்பாகக் கிடைக்கும்
என்ற நம்பிக்கையை / விதைத்து
விதைநெல்லாக!
இந்த நூல் எப்படி உருவானது என்பதையே புதுக்கவிதையாக வடித்தது சிறப்பு. கொரோனா ஊரடங்கு காலத்தை சரியாகப் பயன்படுத்தவில்லையே என்ற ஏக்கத்தை வரவழைத்தது!
எதிர்வினை!
நேரத்தைச் சரிவரப் பயணிக்க உதவிய
இயந்திர ஓட்டுநரின் / இளமை நட்பின் கசிவில்
மிதந்தேன் நான் / வரலாற்று டைட்டானிக்
கப்பலாக...!
மகிழுந்து ஓட்டுனர் இளைஞர் நூலாசிரியருக்கு உற்ற நண்பராகவும் மாறிவிட்டார். குறித்த இடத்திற்கு குறித்த காலத்திற்குள் செல்ல சரியாக உதவியதால் அவருக்கும் ஓர் எதிர்வினை கவிதை வடித்துள்ளார்.
எதிர்வினை!
பல்வேறு வகையான / உணவுகள் / பரிவுடன்
பரிமாறப்பட்டாலும் / உடல் எடை என்னும்
அரக்கன் / அவ்வப்போது / எச்சரிக்கை
மணியை அடிக்கிறான் / அபாய மணியொலியாய் ...
பெண்கள் வீட்டு வேலைகளை கொரோனா காலத்தில் கூடுதலாகவே செய்ய நேர்ந்ததால் அவர்கள் எடை கூடவில்லை. ஆனால் ஆண்களில் பெரும்பாலோர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால் எடை கூடி விட்டனர். எடை கூடியதால் நோயும் கூடி விட்டது. ஒரு சில ஆண்கள் மட்டும் விதிவிலக்காக வீட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் எடை கூடவில்லை. இதுபோன்ற நினைவுகளை மலர்வித்தது இக்கவிதை.
வினை!
நண்பர்களிடம் / செல்லிடப் பேசியில்
உரையாடி / நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும்
தருணங்கள் ... / நெருக்கடி நிலையையும்
நேசகரமான சூழ்நிலையாக / மனத்தில்
பூ பூக்கச் செய்தது / ஒரு பீனிக்ஸ்
பறவையின் / எழுச்சி மிக்க பறத்தலாக!
கொரோனா ஊரடங்கு காலத்தில் சும்மாவே இருக்க மனமின்றி பழைய நட்புகளுடன் அலைபேசியில் பேசி மகிழந்தது உண்மை. ஆனால் ஒரு சிலரோ கொரோனா நம்மைத் தொற்றிவிடும் என்ற பயத்தில் மன இறுக்கத்தில் கவலையிலேயே காலம் கழித்ததும் உண்மை. ஊடகங்களும் மக்களை அச்சப்படுத்தி வந்ததும் உண்மை. அச்சம் தவிர்த்து நண்பர்களுடன் அலைபேசியில் பேசியவர்கள் பீனிக்ஸ் பறவை போல உயிர்பித்து உயிர் பெற்று பறத்தல் சாத்தியமானது. நல்ல உவமை பீனிக்ஸ் பறவை. பாராட்டுகள்.
எதிர்வினை!
வாசிப்பு மின்னிதழிலும் என / நவயுக
மாற்றத்திற்கு ஏற்ப / என்னை மாற்றிக்
கொண்டது / என் செயல்பாட்டு வினைகள்.
தொடர்ந்து அன்புப் பாராட்டும் / 3 குரல்களின்
அன்பின் கசவில் / தண்ணீரில்
எதிர்நீச்சலடிக்கும் படகாக மாறினேன்.
கொரோனா காலத்தில் நேரத்தை பயனுள்ளதாக்க மின்னிதழ்கள் உதவின். நானும் படித்தேன். இன்றும் தொடர்கின்றன பல மின்னிதழ்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் அன்பானவர்கள் அச்சம் தவிர்த்து ஊக்கம் தந்து தன்னம்பிக்கை விதைத்து பொழுதை மகிழ்வித்தனர் என்பதும் உண்மை. கொடிய கொரோனா காலத்தை நாம் எப்படி பயன்படுத்தினோம், எப்படி வீணடித்தோம் என நம்மை நாமே எடை போட உதவின கவிதைகள். பாராட்டுகள்.
எதிர்வினை!
சற்றே இளைப்பாறி / இரசித்தேன்
அழகான புதிய வானத்தை / மென்காற்றின்
ஸ்பரிசத்தை ருசித்தபடி / ஒரு மழலைக்
கவிதையாய்!
இயற்கையை ரசிப்பவர்களுக்கு கவிதை காணாமல் போகும், இன்பம் தொற்றிக் கொள்ளும். நூலாசிரியரும் இயற்கை ஆர்வலர், ரசிகர் என்பதால வானத்தை ரசித்து இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் வெளியே செல்ல முடியாவிட்டாலும் மாலை நேரத்தில் வீட்டின் மாடிக்குச் சென்று வானம் ரசித்தவர்கள் மிகச் சிலரே!
வினை!
தேசிய ஹைக்கூ தினத்தைக்
கொண்டாடின / என் படைப்பு விரல்கள் /
முன்பு எழுதிய / ஹைக்கூவை அலைவரிசை
வாயிலாகப் / படைப்பு பந்தியாக / பரிமாறிய படி
எதிர்வினை!
பலரும் பரிமாறப்பட்ட ஹைக்கூவை ருசித்தார்கள் /
தங்கள் இலக்கியப் பசியாற,
உண்மை தான். நானும் கொரோனா காலத்தில் சும்மா இருக்கவில்லை. சமூக ஊடகங்களில் கவிதைகளைப் பரிமாறி வந்தேன். மலரும் நினைவுகளை மலர்வித்து நூலாசிரியருக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.