மனித இலக்கணம் இழந்துவிட்டான் மனிதன்

மனிதன் வெகு வேகமாக மனிதனின் தன்மைகளை இழந்து வருகிறான். குணம் தான் பெரிது என்று வாழ்ந்த அன்றைய பாரதம் இன்று பணம் தான் பெரிது என்ற சமூக நம்பிக்கை சார்ந்த சாதாரண நாடக மாறிவிட்டது. கடவுளுக்கு ஒரு கண் போய்விட்டதே என்று தன்னுடைய ஒரு கண்ணை தியாகம் செய்த மனிதன் எங்கே? அட ஒரு கண் போய்விட்டது, இன்னொன்றையும் எடுத்துவிட்டால் இவனால் பிரச்சினை இருக்காது என்ற மனம் இங்கே! அரசன் முல்லைக்கு தேர் கொடுத்து கருணை காட்டியது போக இன்று மரம் செடிகளை முன்னேற்றம் என்கிற போர்வையில் வெட்டி தள்ளும் கொடுமை. கடிதம் போடாமல் வீட்டிற்கு வந்தவரை புன்னகையுடன் வரவேற்று நாள்கணக்கில் உணவு படைத்த குடும்பங்கள் அன்று வாழ்ந்து வந்தது. உறவினர் வீட்டிற்கு சென்றால் அவர்களுக்கு தொல்லை என்று நினைத்து ஹோட்டலில் தங்கும் சூழ்நிலை, இந்த உறவினன் வந்தால் நமக்கு ஒரு உபயோகமும் இல்லை, மாறாக செலவு தான் அதிகம் என்று புலம்பும் குடும்பங்கள் தான் அதிகம் இன்று. பெண்களை மிகவும் உயர்வாக கருதி மதிப்புக்குரியவர்கள் வாழ்ந்தனர் அன்று. பெண்கள் உல்லாசம் கொடுக்கும் இயந்திரம் என்ற எண்ணத்துடன் அவர்களை நடத்தும் மானிடர் பல இன்று. பணம் பொருள் பிரதானமாக இருந்த போதிலும், நேர்மையும் வாய்மையும் கைகோர்த்து நடந்தது சில நூறாண்டுகளுக்கு முன்பு. பணமே வாழ்க்கை என்று பணப்பித்தாக பித்தலாட்டம் ஆடும் மனித மந்தையுடன் அநீதி அராஜகம் கைகோர்த்து போடும் தலைவிரி கோலம் இன்று. அன்பால், பண்பால் பிறரை தன் வசம் கவர்ந்த நாட்கள் மறைந்து, பணத்தால், பொருளால் பலரையும் தன்பால் வரவழைக்கும் மந்திர ஜாலம் இன்று. இப்படி காலம் மாறிவிட்டபின் இங்கிருக்கும் உண்மை அன்பு, எப்படி கிடைக்கும் பூரண மனஅமைதி , எவ்வாறு எதிர்பார்க்கலாம் மெய்யான குதூகலமான ஆனந்தம்?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-Feb-22, 9:36 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 106

மேலே