நயந்தருள்வார் நற்றவத்தின் சீலங்கொண்டு உய்வார் - தவம், தருமதீபிகை 966
நேரிசை வெண்பா
ஆன்ம வுணர்வில் அழுந்தி அகமகிழ்வார்
பான்மை வரும்வழியைப் பார்த்திருப்பார் - நூன்முறையை
ஞாலங்கண்(டு) உய்ய நயந்தருள்வார் நற்றவத்தின்
சீலங்கொண்(டு) உய்வார் தெளி. 966
- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நல்ல தவ ஒழுக்கம் உடையவர் ஆன்ம தியானத்தில் ஆழ்ந்து அகம் மிக மகிழ்வார்; மேன்மையான குண நீர்மைகள் மேவி வரக் காண்பார்; உயிரினங்கள் உய்ய உயர்போதனைகளை அருளோடு புரிவார்; எவ்வழியும் தெருளுடன் திகழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
அருந்தல் பொருத்தல்கள் ஆகிய புலன் நுகர்ச்சிகளிலேயே மக்கள் மையலாய் மகிழ்ச்சி அடைகின்றனர்; மெய்யறிவுடைய மகான்கள் ஆன்ம சிந்தனையிலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர். புனித நிலையில் விளைவது தனியே இனிய மகிமை ஆகிறது.
பொறிகளின் வழியே வெறியராய் நுகர்வன சுகங்கள் போல் தோன்றினும் அவை கொடிய துக்கங்களையே விளைக்கின்றன; துயர விளைவுகளை உணராமல் மயலாய் மாந்தர் மறுகியுழலுகின்றனர். தேக போகங்களையே அவாவி அலைபவர் ஆன்மாவின் மேன்மையான ஆனந்தத்தை இழந்து விடுகின்றனர்.
அகமுகமாய்த் தன் உயிரை எவன் நாடுகிறானோ அவன் உயர்ந்தவனாய் ஒளிமிகப் பெறுகிறான். தனது சீவனை ஆவலோடு தெரிசிக்கிறவன் தேவ தேவனை நேரே காணுகிறான். அந்தக் காட்சியில் பேரொளியும் பேரானந்தமும் பெருகி வருகின்றன. அந்த இன்ப சாகரத்தை அடைந்தவன் உடலோடு இருந்தாலும் உயர் பரம் ஆகிறான். அவனுடைய மகிமைகள் அளவிடலரியன.
அரிய தவசிகள், பெரிய ஞானிகள், மகா யோகிகள் என மகிமை தோய்ந்துள்ளவர்கள் எல்லாரும் இந்த ஆத்துமானந்தத்தை அடைந்தவர்களே. மானுட வடிவில் மருவி வாழினும் இவர் பரமான்வினுடைய இனிய ஒளிகளே. இவருடைய சிந்தனையும் செயல்களும் எந்த வேளையும் அந்த ஆதிமூல சோதியினிடமே உறவுரிமைகளாய் உலாவி ஒளி மிகுந்து வருகின்றன.
தன் உயிருள் உயிராய் உறைந்துள்ள இறைவனை நினைந்து உள்ளமுருகிய அளவு பேரின்பம் வெள்ளம் பொங்கி எழுகின்றது. அந்த இன்பநிலை பரிபக்குவமுடைய தூய தவயோகிகளுக்கே நேயமாய் அமைகிறது. ஆனந்த மயமான பொருளைக் கருதி உருகி வருபவர் அதன் மயமாகவே மருவி மகிழ்கின்றார்,
பன்னிரண்டு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன்
எனருசித் திடவலியவந்
தின்பங்கொ டுத்தநினை எந்நேர நின்னன்பர்
இடையறா துருகிநாடி
உன்னிய கருத்தவிழ உரைகுளறி உடலெங்கும்
ஓய்ந்துயர்ந் தவசமாகி
உணர்வரிய பேரின்ப அநுபூதி உணர்விலே
உணர்வார்கள் உள்ளபடிகாண்
கன்னிகை யொருத்திசிற் றின்பம்வேம் பென்னினுங்
கைக்கொள்வள் பக்குவத்தில்
கணவனருள் பெறின்முனே சொன்னவா றென்னெனக்
கருதிநகை யாவளதுபோல்
சொன்னபடி கேட்குமிப் பேதைக்கு நின்கருணை
தோற்றிற் சுகாரம்பமாஞ்
சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. 1 - 9 சுகவாரி, தாயுமானவர்
ஆன்ம உணர்வில் தோய்ந்துள்ள மேன்மையாளரது மேலான நிலைமை நீர்மைகளை இது தலைமையாய் விளக்கியுள்ளது.
சித்த சுத்தி வாய்ந்து சீவன் பரிபக்குவமானபோது தேவ தேவன் பேரின்பமாய் நேரே பெருகி வருகிறான். கனி தேன் அமுதம் முதலிய இனிய சுவைகளினும் பெரிய மதுரமாய் அரிய பரனுடைய தோய்வு அதிசய ஆனந்தங்களை அருளுகிறது.
உயிர் பரமனை நாடி உருகி வருந்தோறும் அங்கே பெருகி வருகிற பேரின்ப நிலைகளைத் தாயுமானவர் இதில் உணர்த்தியுள்ளார். அரிய பேரின்ப அநுபூதி என்று அவர் குறித்துள்ள அனுபவ சாரங்கள் நுணுகிய அனுபவங்களால் நுகர வுரியன.
பேதை நிலை நீங்கி மங்கைப் பருவம் மருவிய பொழுது உரிய ஒரு கணவனைத் தோய்ந்து மணமகள் இனிய சுகபோகங்களை அனுபவிக்கிறாள். மடமை ஒழிந்து தெளிவான மதிநலம் மருவிய போது பரமபதியை மணந்து மனிதன் மாதவனாய்ப் பேரின்பங்களை நுகர்கிறான். இருவகை இன்ப நுகர்வுகள் கருதியுணர வந்தன.
என்றும் தனக்குரிமையான ஒருவனை இழிமடமையால் மறந்து அழிதுயரங்களில் சீவன் அழுந்திக் கிடந்தான்; விழுமிய ஞானம் உதயமாகவே உளம்மிக உருகி முழுமுதலைத் தழுவி அளவிடலரிய அதிசய ஆனந்தங்களைச் சுகித்துக் களித்து எவ்வழியும் செவ்வி சுரந்து திவ்விய நிலையில் இனிது திளைக்கின்றான்.
பொறி புலன்களை அடக்கி உள்ளத்தை நெறியே ஒடுக்கி வரின் அது நல்ல தவமாய் வர பரமான்மா நேரே தெரிந்து சீவான்மா அதனை ஆவலோடு மருவி அதிசய சுகியாய்ப் பெருகி ஆனந்த பரவசம்.அடைகிறது.
நீண்ட காலம் பிரிந்து போயிருந்த தனது அழகிய நாயகனை எதிரே கண்ட இனிய நாயகி போல் பரமபதியைக் காணவே உயிர் பரவசமாய் உருகிப் பாய்ந்து பாலொடு பால் கலந்தது போல் இன்பமாய் இணைந்து திகழ்கிறது. சீவ நாயகி திவ்விய சுகி.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே. 22 - 27.
- அணைந்தோர் தன்மை, ஒன்பதாம் தந்திரம், பத்தாம் திருமுறை, திருமூலர் திருமந்திரம்
மாசு நீங்கிய மாதவர்கள் ஈசனைத் தோய்ந்து இன்பமாய்த் திளைக்கும் நிலைகளைத் திருமூலர் இவ்வாறு விளக்கியிருக்கிறார். உரிய பரனை மருவி அரிய போகியாய்ப் பெரிய உயர்நிலை யுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.