இந்த உடலே இறுதியென்னும் வீர விரதம் உடையவரே மெய்த்தவம் சார வருவர் - தனிமை, தருமதீபிகை 976
நேரிசை வெண்பா
இந்த உடலே இறுதி இனியாண்டும்
எந்த உடலும் எடேனென்னும் - அந்தவுயர்
வீர விரதம் உடையவரே மெய்த்தவம்
சார வருவர் தனித்து. 976
- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எடுத்த இந்த உடலே இறுதி; இனிமேல் வேறு பிறவியை நான் அடையேன் என்னும் வீர விரதமுடையவரே புனிதராய்த் தனியே விலகி மெய்யான தவங்களைச் சார வருவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உலகில் வாழுகின்ற மக்களுள் மிகவும் சிலரே உணர்வு நலம் உடையராய் ஒளி பெற்று வருகின்றார். உணர்வு தெளிவாய் ஒளிமிகுந்து வரவே உண்மையான நிலையை உறுதியாயுணர நேர்கின்றார், நேரே கண்டதைக் கொண்டு காணாததைக் கருதிச் சிந்திக்கின்றார், உலக வாழ்வின் நிலைகளை ஓர்ந்து நோக்கி அவற்றின் புலைகளைத் தேர்ந்து புனித நலனை ஓர்ந்து கொள்கின்றார்.
சீவ கோடிகள் தோன்றி சிலகாலம் வாழ்ந்து பின்பு அடியோடு மறைந்து போகின்றன. பிறந்தும் இறந்தும் ஒழிந்து போகிற மாய வாழ்வில் ஓயாமல் உழன்று உளைந்து நொந்த சீவன் முடிவில் மாயாத தூய வாழ்வைச் சித்த சுத்தியால் உய்த்துணர்கிறது; உணர்ந்து அந்த வழியை விழி திறந்து கண்டு உண்மை தெளிந்து உவந்து துள்ளுகிறது. உரிமையை அடைந்து கொள்வது உய்தியாகிறது.
என்றும் அழியாமல் எங்கும் இன்ப நிலையமாய் நின்று நிலவும் பொருளொன்றே எல்லாவற்றிற்கும் மூல காரணமாயுள்ளது. அந்தப் பரமாத்துமாவே இந்தச் சீவாத்துமாவுக்கு நிலையான உறவுரிமையுடையது; அதனை அடைந்தபோதுதான் துன்பப் புலைகள் ஒருங்கே ஒழியும்; இன்ப நிலையில் இனிது வாழலாமென்று உறுதியாய்த் தெளிந்து அவ்ஒளிவழியே ஊக்கிச் சென்று உரிய பொருளை அடைந்து மகிழ்கிறது.
அதிசயமான இந்த இன்ப நிலையை யாதும் அறியாமல் யாவரும் அறியாமையில் மூழ்கியுழல்வது பரிதாபமாயுளது. கோடிக்கு ஒருவர் கூடத் தமக்குச் சொந்தமான இந்த உரிமையைச் சிந்திப்பதேயில்லை. சிந்தனைகள் நிந்தனைகளில் விரிகின்றன.
உனது பரம நாயகனான இறைவனடியை நினைந்துருகு, பிறவிப் பெருந்துயரங்கள் எல்லாம் அறவே நீங்கிப் பேரின்ப நிலையை நீ பெறுவாய் என்று ஞான சீலர்கள் ஆன வரையும் போதித்து வருகின்றனர்; ஒருவரும் இந்த வழியை எந்த வகையிலும் திரும்பிப் பார்ப்பதே இல்லை.
மாந்தர் பார்க்கும் பார்வை எல்லாம் கீழான புலைகளிலேயே கிளர்ந்து பாய்வதால் அவர் கீழாயிழிந்து பாழாய் ஒழிந்து பரிதாபமாய் அழிந்து போகின்றனர்.
உண்மை ஞானம் தோய்ந்து அருந்தவர், துறந்தவர் எனச் சிறந்து வருபவரைத் தேவதேவன் விழைந்து நோக்கி உவந்து நிற்கின்றான். தன்னை நோக்குவோரைக் தற்பரன் நோக்குகிறான்.
தனிமையில் புகுந்து பரமனை நினைந்து தவம் புரிகின்றவனிடம் அதிசய ஆற்றல்கள் நிறைந்து வருகின்றன. அந்த ஆதி பகவனும் இவனை நாடிவந்து நயந்துறவாடி வியந்து மகிழ்கிறான்.
அரசை இழந்து அடவி புகுந்தபின் அருச்சுனன் தவம் புரிய விரைந்தான். இமயமலையை அடைந்தான்; இனிய ஒரு சாரலில் தனியே நின்று அரிய தவம் புரிந்தான். உண்ணும் உணவும் பருகும் நீரும் துறந்து கண்ணுதல் கடவுளையே எண்ணி உருகி இவ்வீரன் புரிந்த தவநிலையை நோக்கி விண்ணோர் யாவரும் வியந்து துதித்தனர். அரிய தவம் எங்கும் அதிசயங்களை விளைத்தது
இவன் புரிந்து வருகிற அருந்தவ முறையைத் துரியோதனன் அறிந்தான். செய்யும் தவம் முடிந்தால் வையம் முழுவதையும் எளிதே வென்று விடுவான் என்று அவன் அஞ்சினான்; சதி வஞ்சனை செய்யத் துணிந்தான். தனது நண்பனான தானவன் ஒருவனைத் தனியே அழைத்தான். அவன் மூகன் என்னும் பேரினன். வேகமான மாயா சாலங்களுடையவன்; கருதிய உருவங்களை எடுத்துக் கடுங்கேடுகள் செய்வதில் வல்லவன்; விசயன் தவத்தை விரைந்து கெடுத்து வரும்படி அவனிடம் அரசன் உரைத்து விடுத்தான். பெரிய ஒரு பன்றி வடிவம் கொண்டு அவன் கடுத்து வந்தான். அவனது வரவை உணர்ந்து சிவபெருமான் விரைந்து ஒருவேடனைப் போல் வடிவம் கொண்டு வில் ஏந்தி வீர கம்பீரமாய்த் தொடர்ந்தான். உமாதேவியும் வேடச்சியானாள்; என்றும் குமரனாயுள்ள முருகப் பெருமானை அன்று ஒரு இளங்குழந்தையாய்க் கையிலேந்திக் கொண்டு தன் நாயகன் பின்னே அத்தூயவள் நேயமாய்த் தொடர்ந்து நடந்து வந்தாள்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஓர்ஏனம் தனைத்தேட, ஒளித்தருளும்
..இருபாதத்(து) ஒருவன், அந்தப்
போர்ஏனம் தனைத்தேடி, கணங்களுடன்
..புறப்பட்டான்; புனங்கள் எல்லாம்
சீர்ஏனல் விளைகிரிக்குத் தேவதையாம்
..குழவியையும் செங்கை ஏந்தி,
பார்,ஏனை உலகனைத்தும் பரிவுடனே
..ஈன்றாள்தன் பதிபின் வந்தாள்! 87
- அருச்சுனன் தவநிலைச் சருக்கம், பாரதம்
ஈசன் வேடனாய் வந்துள்ள நிலைமையை இது தலைமையாய் விளக்கியுள்ளது. ஏனம் - பன்றி. ஏனல் -தினை. புனம் - மலைச்சாரல்.
திருமால் ஒரு ஏனமாய் வடிவம் கொண்டு தனது அடியைத் தேட அப்பொழுது அவனுக்குத் தெரியாமல் உள்ளே ஒளித்து நின்றவன் இன்று ஒரு ஏனத்தைத் தேடிக் கான வேடனாய் வெளியே புறப்பட்டான், ஈன்ற குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு அவன் மனைவியும் பின்னே தொடர்ந்து வந்துள்ளாள். தன்னை நினைந்துருகும் அன்பரிடம் இறைவன் குடும்பத்தோடு உருகிவரும் உரிமையை இங்கே கருதியுணர்பவர் உள்ளமுருகி இளகுவர். பேரன்பு பேரின்பத்தை நேரே பெறுகிறது.
இவ்வாறு பரமன் வரவே அம்மாயப் பன்றி விரைந்து விசயனை நெருங்கியது. கொலை நோக்கோடு தன்மேல் கொதித்து மூண்டு வருகிற அதன் நிலையைக் கண்டதும் அவ்வீரன் அடுத்து வைத்திருந்த வில்லைக் கடுத்து எடுத்து ஒரு கணை தொடுத்தான். அம்பு தலையில் பாய்ந்து ஊடுருவிப் போகவே பன்றி வீறிட்டு வீழ்ந்தது; அதே சமயம் வந்த வேடனும் ஒரு பகழி தொடுத்து அடுத்து வந்து விசயனோடு வாதாட நேர்ந்தான். அந்த வாதாட்டம் கோதாட்டமான போராட்டமாய்ப் பொங்கி மூண்டது.
வேடன்: என் வேட்டையில் தப்பி வந்த பன்றியை நீ ஏன் வம்பாய் அம்பு எய்தாய்?
விசயன்: அது கொலை நோக்கமாய் என் மேல் கொதித்து வந்தது; ஆகவே அதனைக் கொன்று வீழ்த்தினேன்.
வேடன்: தவம் செய்கின்ற நீ இவ்வாறு அவம் செய்யலாமா?
விசயன்: என் தவத்தைக் கெடுக்க மூண்டது; அதனால் அது மாண்டு வீழ்ந்தது.
வேடன்: உனது தவ வேடம் மிகவும் நவம் உடையது; புல்லையும் நோக மிதியாத எல்லையில் நின்று புனிதமாகத் தவம் செய்யவுரிய நீ இந்தப் பொல்லாத கொலையைச் செய்யலாமா?
விசயன்: தவத்துக்கு அல்லல் செய்ய நேர்ந்தது; அதனால் அதனை ஒல்லையில் தொலைத்தேன். என் கடமையை நான் செய்தேன்; நீ மடமையாய் வாதாடாதே.
வேடன்: பசுவின் தோலைப் போர்த்த பொல்லாத புலி நீ; நல்ல சமர்த்தாய்ப் பேசப் படித்திருக்கிறாய்; என் பன்றியை ஏன் கொன்றாய்? ஒல்லையில் பதில் சொல்; இல்லையேல் அமர் மூண்டு அல்லலே விளையும்.
விசயன்: ஏ வேடா! நீ வீணே வாதாடுகிறாய்; வம்பாகச் சண்டையை விளைக்கிறாய்; இந்தப் பன்றியை நீயே எடுத்துக் கொண்டு போ; அடுத்து நின்று தொந்தரவு செய்யாதே; மேலே பேசினால் வெய்ய துயர் மூண்டு விடும். ஒல்லையில் ஒதுங்கிப் போய் விடு;
வேடன்: ஏய்! நீ பெரிய வீரன் போல் என்ன வெருட்டி மருட்டுகிறாய்; நீ யார்? என் சொந்தமான இந்த மலைக்கு ஏன் வந்தாய்? உன் பேர் என்ன?
விசயன்: அருச்சுனன் என்பது என் பேர்.
வேடன்: சரிதான்; என் குல விரோதி; எனது சாதியான் ஏகலைவனை நீ அநியாயமாய் விரலைத் துணித்தவன் அல்லவா? உன் கையைத் துணிக்க வேண்டாமா? இன்று வலிய வந்து கிடைத்தாய்!
விசயன்: உளறாதே, விரைந்து விலகிப் போய்விடு; போகாமல் நின்றால் சாகவே நேர்வாய்!
வேடன்: உன் வீரத்தையும், தீரத்தையும் இன்று அளந்து பார்த்து விடவேண்டும்; என்னோடு நேரே போருக்கு வாl எடு வில்லை; தொடு அம்பை,
இவ்வாறு சொல்லிக் கொண்டே அந்த அதிசய வேடன் அம்பு தொடுத்தான். விசயன் மாறு தொடுத்துத் தடுத்தான். வில்லாடல் வீறோடு மூண்டது. மூண்டு போராடி வருங்கால் விசயன் வில் நாண் அறுந்து போகவே வேகமாய்ப் பாய்ந்து தன் வில்லால் முடிவில்லாதவன் முடிமேல் அடித்தான்; அந்த அடி அகில சராசரங்கள் எங்கும் பட்டது. விசயன் முடியிலும் இரத்தம் ஒழுகியது; கயிலை வேடன் மறைந்து போனான்; வியந்து மேலே பார்த்தான். சிவபெருமான் உமாதேவியோடு விடை மேல் தோன்றியருளினார். அந்தக் காட்சியைக் கண்டதும் விசயன் பரவசனாயுருகி அழுதான். கண்ணீர் மார்பில் பெருகி ஓடியது; உள்ளம் உவந்து துள்ளிப் பாடினான். பாடிய அன்புமொழிகள் இன்ப ஒளிகளாய் எழுந்தன.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
ஆடினன் களித்தனன் அயர்ந்து நின்றனன்;
ஓடினன் குதித்தனன்; உருகி மாழ்கினன்
பாடினன் பதைத்தனன் பவள மேனியை
நாடினன்; நடுங்கினன்; நயந்த சிந்தையான். 116
விழுந்தரு வினையினின் மெலிந்து நாயினும்
அழுந்திய பிறவியின் அயரு வேன்முனம்
செழுஞ்சுடர் மணிப்பணித் திங்கண் மௌலியாய்
எழுந்தரு ளியவிஃ(து) என்ன மாயமோ. 117
பையரா வணிமணிப் பவள மேனியாய்
செய்யவாய் மரகதச் செல்வி பாகனே
ஐயனே சேவடி யடைந்த வர்க்கெலாம்
மெய்யனே யெங்குமாய் விளங்குஞ் சோதியே. 119
- அருச்சுனன் தவநிலைச் சருக்கம், பாரதம்
பரமனைப் பார்த்துக் களித்துத் திளைத்த பார்த்தன் இவ்வாறு பரவசமாய்த் துதித்திருக்கிறான். தவம் கடவுளையும் நேரே காட்டும்; தவசியிடம் அதிசய ஆற்றல்கள் உளவாம்; சிவபெருமானும் அவனை உறவுரிமையோடு உவந்து கொண்டாடுவன் என்பதை உணர்ந்து தெளிந்து வியந்து கொள்கிறோம்.
தனிமையாய்த் தவம் புரி, சிவமும் இனிமையாய் எதிர் வரும்.