சரக்கு
கையிருப்பு அதிகமில்லை;
இருந்த சரக்கையெல்லாம்
முகநூல், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள்
ஏற்கனவே
கும்மாளமடித்துவிட்டன.
..
இதுவரை பெய்திட்ட
சில துளி ஊக்க மழையில்
க்வார்ட்டர்., ஹாஃப்., ஃபுல் -ஆகி
ஏணிப்படி உச்சத்தில்
எனக்குள்ளிருக்கும் கவிஞன்
அடுத்த வேளை ஸ்டேட்டஸுக்கு என்ன வழி?
என்ற கொக்கியில் தொக்கி நிற்கிறான்
விடிந்தும் விடியாமல்!
..
பரணில் உறங்கும்
தசாப்தங்கள் உண்ட நாட்குறிப்பேடுகள்
தம்மைப் புரட்ட சொல்வது
மனப்பிராந்தியாக இருக்கக்கூடும் – ஆனால்
ஒரு தலை ராகங்களை
ஒப்பேற்றுவது
சரக்குக் கட்டணங்களைவிட
சகாயமாகத்தானிருக்கிறது எனக்கு.
..
கிட்டத்தட்ட இதுவொரு
’நாய்ப் பொழப்பு’ தான்!
..
ஆஹா, இந்த ‘நாய்ப் பொழப்பு’ம்
நன்றாகத்தானிருக்கிறது;
விடைகொடுங்கள் எனக்கு;
நாளைய கவிதைக்கான
சரக்குகளை நான் இறக்கியாக வேண்டும்!