மழைசெயல் வரம்
மழைசெய்யும் வரம்
======================
நிழலெனத் தொடர்கிற நெடுந்துய யதையொரு
நிமிசமும் வளர்த்திட நினைப்பது தவறே
கிழடுக லொடுசிறு குழவிக ளழிகிற
கடுஞ்சம ரதுதொலை கிறநிலை வரவே
அழகிய புவியிதை யழிக்கிற முனைப்பொடு
அணுஉலை கொதிப்பதை யடக்குதல் முறையே
பழகிய மனத்திடை பகைமையை விதைக்கிற
பதர்களை உதறிடப் பனித்துளி விழுமே
*
உயிர்களைப் பலியிடு முரிமையை எடுத்திட
உலகினி லெவரிட மனுமதி யுளதோ
பயிரினை அறுவடை புரிகிற வகையினில்
பலரதும் தலைகளை யரிவது நலமோ
தயிரிய முளதென தவிடுடைப் பொடியெனத்
தரைதனி லழிக்கிறத் தவறுகள் நிறைவோ
மயிரிழை மணித்துளி மறைவதற் குளுமொரு
மலைதனை தகர்க்கிற அணுத்துகள் பயமே
*
எரிகிற நெருப்பினில் எரிபொருள் கிணறுகள்
இறங்கிட வழிசெயும் இழிகுணம் விடுத்தே
புரிகிற சமரினைப் பொறுப்புடன் நிறுத்திடப்
புறப்படு மமைதியில் புதைகுழி தடுத்தே
சரிபிழை எதுவென அறிகிற சபைகளில்
சரித்திர முனைப்பொடு சமரசம் வளர்த்தே
மரித்திட வழிசெயும் நெருப்பினை உமிழ்கிற
மடமையில் பொழிகிற மழைசெயல் வரமே!
*
*மெய்யன் நடராஜ்
01 -03 – 2022