அதுவன்றோ நா’ய்’மேல் தவிசிடு மாறு - பழமொழி நானூறு 75
இன்னிசை வெண்பா
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு
பூமேல் இசைமுரலும் ஊர! அதுவன்றோ
நா’ய்’மேல் தவிசிடு மாறு. 75
- பழமொழி நானூறு
பொருளுரை:
புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசை பாடும் மருதநிலத் தலைவனே! அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை விரும்பி அறிவிற் சிறியார்க்குச் செய்தல் அச்செயலன்றோ யானைமேல் இடவேண்டிய கல்லணையை இழிந்த நாயின் மீது இட்டதை ஒக்கும்.
கருத்து:
பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியோர்க்குச் செய்தலாகாது.
விளக்கம்:
யானை மேல் இடுந் தவிசினை நாய்மேல் இடின் நகைப்பிற்கிடனாதல் போல அறிவுடையோர்க்குச் செய்வனவற்றை அறிவிலார்க்குச் செய்தல் நகைப்பிற்கிடனாம்.
'நாய்மேல் தவிசிடுமாறு' என்பது பழமொழி.