பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம் - நீதிநெறி விளக்கம் 66
இன்னிசை வெண்பா
பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குறமகளே ஏனையோர் செல்வம் கலனழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார்
செல்வம் பயன்படுவ(து) இல் . 66.
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
தலையான சிறந்த குணமுடையவர்களின் செல்வம் பொது மகளிரைப் போல எல்லார்க்கும் பயன்படும்.
இடைப்பட்ட குணமுடைய மற்றவர்களது செல்வம் குலமகளே போலத் தனக்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே பயன்படும்.
கீழான குணமுடைய பிறர்க்கு உதவாதவர்க்ளுடைய செல்வம் மங்கள நாணிழந்த கைம்பெண்களின் நலம் போல யார்க்கும் பயன்படுவதில்லை.
விளக்கம்:
தலைமக்கள் தம்மிடமுள்ள பொருளைத் தாம் அனுபவிப்பது போல பிறரும் அனுபவிக்குமாறு செய்வர்.
இடைப்பட்டோர் தம் பொருளைத் தாமே நுகர விரும்புவர்.
கீழான குணமுடையோர் பொருள் அவர்க்கும் பயன்படாதாய் ஒழியும்.
இதனால் பலர்க்கும் பயன்படும் செல்வமே தலைமக்கள் செல்வமென கருதப்படும்.
கருத்து:
செல்வர், பலர்க்கும் உதவியாயிருத்தற்கு உரியர்.