பப்பு பாடல்-2

நான் பெற்ற செல்வம்
நீதானே கண்ணே!
நான் கண்ட வானில்
காணாத நிலவே
கண்ணே மணியே நீதானடா
என்னுள் நிறைய வரம் கேளடா
வளரும் தளிரே நீ யாரடா
கண்ணில் தெரியும் எனை பாரடா!

ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆரீராரோ ஆராரிரோ
ஆரீராரோ ஆராரிரோ

நீரோடை போலே
நீ ஓடு கண்ணே
நிழல் போல நானும்
வருவேன் உன் பின்னே
தேகம் இழைத்தால் இளைப்பாரடா
தென்றல் உனக்கே என் தாய்ப்பாலடா
தீமைகள் கண்டால் நெருப்பாகடா
துணிவை உனக்குள் திணிப்பாயடா

ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆராரிராரோ ஆரீரிராரோ

விடிகின்ற இரவில்
விழிக்கின்ற அழகே
வினையாவும் வாழ்வில்
ஜெயமாகும் நொடியே
நேர்மை உந்தன் உயிர் தானடா
தோல்விகள் உனக்கோர் உரம் தானடா
வேர்வை சிந்தும் விரல் நீயடா
வெற்றிகள் உனக்கே விளையாடடா !

ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆராரிராரோ ஆரீரிராரோ

வெள்ளந்தி சிரிப்பில்
வேரூன்றும் நினைப்பே
வெந்தாலும் கூட
விட மாட்டேன் உயிரே
காணும் கனவும் நீ தானடா
கண்ணே நீயென் உயிர் தானடா
தாய்மை கூட தவம் தானடா
வந்தாய் நீயோ வரமாயடா !

ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆராரிராரோ ஆரீரிராரோ

சுட்டாலும் உன்னை
சூடாகும் சுடரே
சுத்தத்தின் மனமே
சுகம் தானே மகனே
சுகமாய் சுமந்த தாய் தானடா
சுமப்பாள் உன்னை நிலம் போலடா
நீரின் மேகம் கலையாதடா
களைகள் சேர்த்தால் பயிர் விளையாடா

ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆராரிராரோ ஆரீரிராரோ
ஆரீராரோ ஆராரிரோ
ஆரீராரோ ஆராரிரோ

எழுதியவர் : பப்பு பாடல்கள் (8-Mar-22, 2:25 am)
சேர்த்தது : Pappu Padalgal
பார்வை : 48

மேலே