தவவாழ்வில் காமம் ஓரணுவுள் ஆய தெனினும் அழியுமே பாலித்து ஒழுக - தவம், தருமதீபிகை 969
நேரிசை வெண்பா
மேய தவவாழ்வில் வெங்காமம் ஓரணுவுள்
ஆய தெனினும் அழியுமே - துாயவான்
பாலில் பிரைசிறிது பட்டாலும் பாழாமே
பாலித்(து) ஒழுக பரிந்து. 969
- தவம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நல்ல பாலில் சிறிய ஒரு மோர்த்துளி விழுந்தால் அவ்வளவும் நிலை குலைந்து போகும்; அதுபோல் தூய தவத்தில் தீய காமம் அணுவளவு தோய்ந்தாலும் அத்தனையும் அவமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
உலக நிலைகளை ஒருவித் தவ நிலையில் புகுந்தவர் தனியான புனித நிலையில் வாழவுரியவர். கடுமையான விரத ஒழுக்கங்களை மேற்கொண்டு நெறி நியமங்களோடு வாழும் நியதியுடையவராதலால் அவரது வாசம் மாசறு காட்சியாய் மகிமை தோய்ந்துள்ளது. மாசு ஒழியத் தேசு வெளியாய் ஈசனை எய்துகிறார்.
அவர்தம் சீலமும் செம்மையும் சீர்மையும் நீர்மையும் கூர்மையாய் அறிய பாலை உவமை கூறியது. வெண்மை, இனிமை, நன்மை பாலின் பால் பரவியுள்ளன. தண்மை, தகைமை, தூய்மை தவசிகள் பால் தழுவியுள்ளன. பாலனையார் பரன்பாலுறுகிறார்.
உலகம் உவந்து பேணும் நிலைமையில் தலைமையாய் உயர்ந்து சிறந்துள்ள மாதவர் ஏதேனும் சிறிது பிழைபட நேரின் உயர்நலமெல்லாம் ஒருங்கே இழந்து அவமாய் இழிந்து போவர்.
தன் இனமான மோர்த்துளியைச் சிறிது தழுவினும் பால் நிலை குலைந்து போகும்; பழைய உறவென்று எளிமையாய் மகளிரொடு பழகிவரின் பழி படிந்து தவசி இழிவடைந்து விடுவான்.
எவ்வழியும் யாதொரு இழிவும் நேராமல் தன்னைச் செவ்வையாய்க் காத்து வருபவனே திவ்விய நிலையில் சிறந்து வருகிறான். புலையான தொடர்புகள் ஒழிந்த அளவே தவம் ஒளி மிகுந்து உயர்ந்து விளங்கும். அவமாய் அவம் படியாமல் தவம் படிக.
காமம் என்றது பெண் ஆசை, பொன் ஆசை முதலிய நசைகளையெல்லாம் குறித்து நின்றது. அவகேடான இழிவிழைவுகளை அடியோடு ஒழித்தவரே தவயோகிகளாய்த் தழைத்து வருகின்றார். மாசான ஆசைகள் படியின் நீசங்கள் நெடிது படிகின்றன.
இன்னிசை வெண்பா
பெண்விழைவார்க் கில்லை பெருந்தூய்மை; பேணாதூன்
உண்விழைவார்க் கில்லை உயிரோம்பல்; எப்பொழுதும்
மண்விழைவார்க் கில்லை மறமின்மை; மாணாது
தம்விழைவார்க் கில்லை தவம். 104 அறநெறிச்சாரம்
தேக போகங்களை விழைபவர் தவ யோகிகளாய் விளைய முடியாதென இது விளக்கியுள்ளது. நெறியான கட்டுப்பாடே தவத்தைச் சரியாக வளர்த்து மகிமையை விளைத்து வருகிறது.
நேரிசை ஆசிரியப்பா
வரிக்கடை நெடுங்கண் விளங்க மேதக
மணித்தோடு பெய்து வாண்முகந் திருத்தி
நானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய
கான்யாற்று வருபுன லாடலுந் தேமலர்
வல்லிப் பந்தர் வண்டுவா ழொருசிறை
நிலமகட் புணருஞ் சேக்கையு மரமுதல்
மெல்லுரி வெண்டுகி லுடையுந் தொல்வகைப்
படையுழா விளையுளி னுணவு மந்திரத்துச்
சுடர்முதற் குலமுறை வளர்த்தலும் வரையாது
வருவிருந் தோம்புஞ் செல்வமும் வரைமுதற்
காடுகைக் கொள்ளு முறையுளு மென்றிவ்
வெண்வகை மரபி னிசைந்த வாழ்க்கை
ஐம்பொறிச் சேனை காக்கு மாற்றலோடு
வென்றுவிளங்கு தவத்தி னரசியற் பெருமை
மாக்கட லுடுத்த வரைப்பின்
யார்க்கினி தன்றஃ தறியுநர்ப் பெறினே. 3 ஆசிரியமாலை
காட்டு ஆறுகளில் நீராடி, மரவுரி தரித்து, கனி காய்களைத் தின்று, தரையில் படுத்து, உயிர்களுக்கு இரங்கி, பொறிகளை அடக்கி, நெறிநியமங்களோடு தியானம் புரிந்து, பரமான்மாவுடன் மருவி வாழும் தவ வாழ்வை இது நயமாய் வரைந்து காட்டியுள்ளது.
நேரிசை வெண்பா
தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று. 95 பழமொழி நானூறு
பிறர் வைதாலும் வாழ்த்தினாலும் சமமாய்க் கருதி அமைதியாயிருக்கும் சித்த சாந்தியே தவமாகும் என இது குறித்துளது. தவம் புரிவது மிகவும் அரிய செயல். அதனை உறுதியாகச் சாதித்த பொழுது அந்த மாதவனை வானவரும் புகழ்ந்து போற்றுகின்றனர்; மேலான மகிமைகள்.அவனிடம் வருகின்றன.
மாசற்ற தவசி ஈசன் போல் தேசுற்று நிலவுகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.