பேசாத மோனம் பெரியதவ ஞானமாய்த் தேசாகி இன்பம் திகழுமே - தனிமை, தருமதீபிகை 979
நேரிசை வெண்பா
பேசாத மோனம் பெரியதவ ஞானமாய்த்
தேசாகி இன்பம் திகழுமே - மாசான
புன்மை புகாமல் புறங்காத்(து) இனிதோம்பி
நன்மை புரியும் நயந்து. 979
- தனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
வாய் பேசாத மவுனம் அரிய பெரிய தவஞானமாம்; அதில் தெளிவான பேரின்பம் விளையும்; இளிவான புன்மை புகாமல் காத்து யாண்டும் நன்மையே.அது நல்கி அருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மவுன நிலையில் மகிமைகள் விளைந்து வருகின்றன.
பேசுகின்ற திறம் மனிதனுக்குத் தனி உரிமையாய் அடைந்துள்ளது. மிருகங்கள் பேசா; மனித மரபே பேசவுரிய பெருமையோடு பெருகி வந்துள்ளது. வாய்மொழிகளை வழங்கியே மனித சமுதாயம் எவ்வழியும் வாழ்க்கையை நடத்தி வருகிறது.
உலக வாழ்வை இனிது நடத்தி உணர்வின் மணமாய் ஒளி வீசி வருகிற மொழியைப் புனிதமாய்ப் பேணாமல் வீணே பாழ்படுத்துபவர் வெய்ய பேதைகளாய் இழிந்து படுகின்றனர். பயனில்லாமல் வறிதே பேசுகின்றவன் அறிவின் சிறுமையை வெளியிடுகின்றான். வெறுஞ்சொல் விரிய வீணன் தெரிகிறான்.
உள்ளே உணர்வு பெருகியிருப்பின் வெளியே உரைகள் அருகி வருகின்றன. எவனுடைய வாயிலிருந்து பயனில்லாத வார்த்தைகள் அதிகமாய் விரிகின்றனவோ அவன் ஒரு மதி கேடன் என்பதை அவை தெளிவாய் வெளியே வார்த்துக் காட்டுகின்றன. பேசும் பேச்சால் மனிதன் எளிதே காணப்படுகிறான்.
பேச வாய் திறந்தால் பயனுடைய மொழிகளை நயமாய்ப் பேசுக. அவசியம் இல்லாத போது யாண்டும் பேசலாகாது. நாவடங்கி வந்தால் அதில் நலங்கள் பல நன்கு அடங்கி வருகின்றன.
அடங்காத வாய் மடங்காத நோயாய்க் கொடிய துயரங்களை விளைத்து விடும். பேசப் பேசப் பிழை என்பது பழமொழி; இந்த முதுமொழியின் குறிப்பைக் கூர்ந்து நோக்கி ஓர்ந்து மதி தெளிய வேண்டும். மோனம் வர ஞானம் வருகிறது.
அகமுகமாய் ஆன்ம சிந்தனை செய்யும் ஞானிகள் யாதும் பேசாமல் சித்த சாந்தியாய் அடங்கி யிருக்கின்றனர். உண்மையான பரமானந்தத்தில் திளைத்துள்ளமையால் உரைகள் அடங்கி விடுகின்றன. உள்ளம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கவே சொல்லும் செயலும் சோர்ந்து தொலைந்து போகின்றன.
தேனை நாடிப் பறந்து திரிகிற வண்டு ஒலித்து ஓலமிட்டு உழலுகின்றது; அதனைக் கண்டு உண்ண நேர்ந்தால் ஒலி அடங்கி விடுகிறது. ஆன்ம சுகமாகிய அமுதை அடையாதவர் ஆரவாரமாய்ப் பேசிப் பிதற்றிப் பிழையாய் அலைகின்றனர்; அதனை அடைந்தவர் அமைதியாய் ஆனந்த நிலையில் அமர்ந்திருக்கின்றனர். உள்ளம் அடங்கிவர உரைகள் ஒடுங்கி விடுகின்றன.
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
தேனை நாடித் திரிந்துழல் வண்டுகள்
வான வீதியில் வாய்ஒலி செய்தன;
மோனம் கொண்டன. மொண்டதை உண்டன;
ஞானம் கொண்டவர் கண்டன மானவே.
இந்த உவமையும் பொருளும் ஓர்ந்து சிந்திக்கத் தக்கன.
அனுபவ ஞானிகளின் இனிய அடையாளமாக மோனம் மருவியுள்ளது. அந்த உண்மை இங்கே கருதியுணர வந்தது. வான மதியில் வயங்கும் சீதளம் போல் ஞான மதியில் மோனம் விளங்கியுளது. ஆன்ம அமைதி அதிசய சுகமாகிறது.
தியானம், சமாதி என்னும் ஞான சீலங்களில் மோனம் குடி கொண்டு உள்ளமையால் அதன் நிலைமையும் நீர்மையும் எத்தகையன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம் பேச்சு ஒடுங்கினாலன்றிப் பேரின்ப போகத்தை நேரே பெறமுடியாது.
பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகு தூரமே:
பேசுகின்ற பேதைக்கும் பேசாத ஆனந்த சமாதிக்கும் வெகு துாரமே என்று தாயுமானவர் இவ்வாறு தமது நிலைமைக்கிரங்கி மறுகியிருக்கிறார். மவுன நிலையில் அதிசய சுகங்களை அனுபவித்த மகாதவசியாதலால் பேசாத நீர்மையை இங்ஙனம் வியந்து புகழ்ந்துள்ளார். அனுபவ அமைதி அறிய வந்தது.
அறுசீர் ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
பேசா அநுபூ தியைஅடியேன் பெற்றுப் பிழைக்கப் பேரருளால்
தேசோ மயந்தந் தினியொருகாற் சித்தத் திருளுந் தீர்ப்பாயோ
பாசா டவியைக் கடந்தவன்பர் பற்றும் அகண்டப் பரப்பான
ஈசா பொதுவில் நடமாடும் இறைவா குறையா இன்னமுதே.
- தாயுமானவர்
பேசா அனுபூதியை அளித்து அருளும்படி ஈசனிடம் தாயுமானவர் இங்ஙனம் வேண்டியுள்ளார். மோன நிலையில் வானமழைபோல் வந்து ஆனந்தம் பொழியுமாதலால் அந்தப் பரம்பொருளிடம் அதனை விநயமாய் விழைந்து வேண்டியிருக்கிறார்.
பன்னிருசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
(மா மா காய் காலடிக்கு)
அலையி லாத சாகரம்போல் அனிலம் சேரா விளக்கதுபோல்
..அருங்கல் இரும்பொன் சமமாகி அனத ராசின் நுனியதுபோல்
நிலைஒன் றியநற் சமாதியுற்று நின்தாள் கமலத்(து) எழும்பிரச
..நிறைவா ரிதியில் புகுந்ததனில் நேசித் தடியேன் இருப்பேனோ?
விலையில் மகுடத் திருமுடியாய்! மிளிர்குண் டலங்கள் செறிகாதாய்!
..வியன்கே யூரத் திருத்தோளாய்! விஞ்சுஞ் சதங்கை சூழ்தாளா!
புலையும் கொலையும் களவுமில்லாப் புனிதத் தவத்தோர் தொழுதேத்தும்
..புராரி குமரா! உமைசிறுவா! போரூர் முருகப் பெருமாளே!
– திருப்போரூர் சந்நிதி முறை
அமைதியான சமாதியில் விளையும் பேரானந்த நிலையைச் சிதம்பர சுவாமிகள் இதில் இனிது குறித்திருக்கிறார். குறிப்புகள் கூர்ந்த அனுபவங்களால் ஓர்ந்து உணர்ந்து கொள்ள வுரியன.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
..சேர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
..ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
..நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
..கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே. 40
- மகாதேவ மாலை, மூன்றாம் திருமுறை, அருட்பா
இறைவனுடைய இன்ப நலம் எய்தும் துறையை இராமலிங்க அடிகள் இவ்வாறு துலக்கியிருக்கிறார். சொல்லொழிந்த அமைதியில் விளையும் நல்ல ஆனந்த போகம் இங்கு அறிய வந்தது.
உலக நசைகளை நீங்கி உரையடங்கியிருப்பது ஞான யோகமான மோனம் ஆகும். சாந்த சீலமான இந்த மவுனத்தில் உள்ளம் உணர்வோடு தோய்ந்து உயிரை நோக்க பரமன் ஒளி வெளியாகி பேரின்ப வெள்ளம் பெருகியெழுகிறது. பேசாத மவுனம் பேசரிய பேரானந்தத்தை அருளுதலால் அது அரிய தவம், பெரிய ஞானம், அற்புத யோகம், அதிசய சீவ அமுதம் எனத் துதிகொண்டு நின்றது.
Silence is the ecstatic bliss of souls, that by intelligence ԱԱ)Il We Et) : (Otway)
அறிவோடு அளவளாவுகிற அமைதியான மவுனம் ஆன்மாவின் பரவசமான பேரின்பமாம் என ஓட்வே என்னும் அறிஞர் மோன விளைவினை இங்ஙனம் விளக்கிக் கூறியிருக்கிறார்.
புனிதமான அறிவும் சிந்தனையும் பெருகிவர அங்கே ஆன்மானந்தம் மருவி வருகிறது; தூய பரம்பொருளோடு தோய்ந்து மகிழ்வதே யோக சமாதியாய் ஒளி வீசியுள்ளது.
They always talk who never think. (Prior)
ஒருபோதும் சிந்திக்காதவர் தாம் எப்போதும் பேசுகின்றனர் எனப் பேச்சின் இழிவை இது காட்சியாய்க் காட்டியுளது.
பயனின்றி வீணே பேசுகின்றவர் பழுதான இழுதைகளாய் இழிவுறுகின்றனர். இழிவு ஒழிய உயர்வு வருகிறது.
வெளியே பேசுவதைச் சுருக்கு; உள்ளே சிந்தனையைப் பெருக்கு. தனியான மோன நிலையோடு இனிது பழகித் தனிமுதல் தலைவனை நலமாய்க் காணுக; இக்காட்சி அரிய மாட்சியாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.