நஞ்சாக வேண்டாம் நம் மனம் வஞ்சகனாக வேண்டாம் உள்மனம்
மனம் ஒரு மர்ம மனிதன்;
இவன் இருமுகம் கொண்டவன்;
இறுமாப்பு கொண்டவன் இரக்கம் கொண்டவன்;
இருவேறு முகம் உண்டு இவனுக்கு;
இன்முகமும்; துன்முகமும்; கொண்டது மனம்;
நன்மனம், நல்மனம்;
துர்மனம்; மறைந்தே வாழ விரும்பும் மர்ம மனிதன்;
கண்ணுக்கு தெரியாதவன்;
கற்பனையில் மிதப்பவன்,
கன நேரத்தில், காத தூரம் சுற்றி வரும் வல்லமை படைத்தவன்;
முகமூடி இல்லாது,முழுதாய் ஒழிந்து வாழும் அருவ மனிதன்;
அகத்திற்குள் அமர்ந்து அடம் பிடிப்பவன்;
நொடிக்கு நொடி மாறுவான்;
நொந்தே சாவான்;
தொன தொன என்று சீண்டுவான்; தொல்லை பல தருவான்;
கண்ணுக்கு தெரியாதவன்;
நோய்வாய் பட்டவன் போல் சுருண்டு கிடப்பான்.
போடாத வேசத்தையும் மாற்றி மாற்றி போட்டுக்கொண்டே இருக்கும் சதிகாரன்;
அழுக்கை சுமந்து, புழுங்கி வாழும்
மர்ம மனிதன்;
அழுக்குள் அமுங்கி, இழுக்கை செய்யும் ஈனபுத்திக்காரன்; பேராசைக்காரன்;
ஒழுக்கங் கெட்ட நினைவுகளை சுமந்து
ஓயாது புழுங்கித் தவிப்பான்; ஒவ்வாததை செய்து,
ஒழித்தே வாழும் மர்ம மனிதன்;
இதயத்தை சிறையாக்கி,
இருப்பதை வைத்து வாழாது,
இன்ப லீலைகளை செய்யத் தூண்டும் மாயாவி;
தோண்ட தோண்ட; அசிங்கங்களையும், அருவறுப்பையும் புதைத்து வைத்திருக்கும் புதைகுழி;
உண்மையை மறைக்க நினைக்கும் மனிதனின் ஊழியன்;
ஊமையாய் இருப்பான் சில நேரம்;
ஊம குசும்பு செய்வான் பல நேரம்;
உள்ளே இருந்தே கெடுப்பான்;
உறவாடுவது போல் நடிப்பான்;
ஓயாது தவித்துக்கொண்டே இருப்பான்;
சதா உலவு பார்ப்பான்;
கண்ணுக்குத் தெரியாத கயவன்.
ஆசைத் தீயில் கருகி,
தன்னையே சிதைக்க துடிக்கும் சண்டாலன்;
இவன்தான் மர்ம மனிதமனம்,
தவறுகளைச் செய்து விட்டு;
தள்ளி ஓடிப்போக தவிக்கும் மர்ம மனிதன்;
தள்ளாமையில் தனிமையில் நடு நடுங்குவான்;
தனது தவறுகளை எல்லாம் நினைத்து, துடி துடிக்கும் அருவ மனிதனே மனம்;
வேடங்கள் பல போடாமல் போட்டு;
விதவிதமாய் நடிக்கும் கூத்தாடியே இந்த மர்ம மனம்;
அச்சம் பயத்தில் அமுங்கிக் கிடக்கும் அழுக்கு மூட்டையன்;
மனசாட்சியை கொலை செய்ய துடி துடிக்கும் கொலையாளி;
ஆணவ மனம், இவன்,
சஞ்சலமும் சந்தேகப் பட்டுக் கொண்டே இருப்பான்;
அடங்கிக்கிடப்பான் சில நேரம்,
ஆவேசம் கொண்டு எழுவான் சில நேரம்;
ஆட்டம் போடுவான் சில நேரம்
இரக்கத்தோடு இருப்பான் சிலநேரம்;
கோழையாய் வாழ்வான் பலநேரம்;
குழந்தையாய் சிரிப்பான் சிலநேரம்;
குரங்காய் தாவுவான் பலநேரம்;
மரண பயத்தை மனதில் சுமந்தே திரியும்
மர்ம மனிதன் இவனும் இவனே;
உண்மையை கல்லறைக்குள் புதைக்கத் தவிக்கும் மரணமனிதன்,
அறிந்து கொள், உள் மனம் ஒன்றே உன்னையே வீழ்த்தும் ஆயுதம்;
அச்சம் பயமும் அண்டிக்கிடக்கும் பேய் உன் உள்மனம்;
நல்ல மனம் வாழும்;
உள்ளத்தில் குடிகொண்ட
கோவிலில் தெய்வமாய் வாழும் நன்மனம்;
அமைதியை காக்கும்; அகந்தையை ஒழிக்கும்;
அன்பை சொரியும்;
நம்மை நல்மனிதனாக்குவது நன்மனம்;
அன்பும் பொறுமையும் சுமந்து மணக்கும் இந்தமனம்;
அழிக்க நினைக்காது,
இது இரக்கத்தைத்தேடும்;
மனித பண்பை நாடும்.
ஈரமனம் இதயத்தை தொடும்; இரக்கம் காட்டும்;
ஈரமனம் ஈர்க்கும் மனம்;
ஈரமனதில் இருக்கும் நேசம்
அடக்கிபார்க்கும் ஒரு மனம்;
அடங்கிப்போகும் ஒரு மனம்;
வேண்டாம் வேண்டாம் வன்மம் , நன்மையைத் தேடட்டும் மனம்;
நல்ல மனம் இது நறுமண(ன)ம்
நல்ல சிந்தனையை விதைக்கட்டும் இந்த மனம்;
இரக்கம் சுரக்கட்டும்; கருணை பிறக்கட்டும்;
மனித நேயம் மலரட்டும்,
இதயத்தில் அன்புமழை பொழியட்டும்;
இளகிய மனம் இது என்றென்றும் இனங்கும் மனம்;
இது வணங்க வேண்டிய மனம்;
அஞ்சிட வேண்டாம் உன்மனம்;
நஞ்சிட வேண்டாம் நல்மனம்;
நஞ்சாக வேண்டாம் நம் மனம்;
வஞ்சகனாக வேண்டாம் உள்(ன்)மனம்;
நன்மனத்தோடு நல்ல உள்ளங்களை தேடு
நாளும் நலம் பெரும் ;
நாடும் வளம் பெரும்.