32 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 32
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

செல்வந்தர் தான் நன்கொடை கொடுப்பது பற்றி ஆன்மீக வழியில் சிந்தித்து மனைவியிடம் ‘நீ சொல்வதுபோல் அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் நூறு பேருக்கு கோவிலுக்கு என்று நன்கொடை கொடுத்தாலும் அதில் என்னை ஏமாற்றுகிறவர்கள் தொண்ணூறு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். என்னை ஏமாற்றுபவர்களை பற்றி எந்தவிதமான கவலையும் எனக்கு இல்லை. நூறு நபர்களில் பத்துப்பேர்கள் நான் கொடுக்கும் நன்கொடையை பயனுள்ள வகையில் நன்கு முறையாக கோவில் பணிக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இதில் என்னை ஏமாற்றுபவர்கள் தொண்ணூறு பேர்கள் இருந்தாலும், நான் கொடுக்கும் நன்கொடையை நேர்மையான முறையில் பயன்படுத்தி உண்மையுடன் தொண்டு செய்யும் தகுதியுள்ள அந்த பத்து நபர்களை இழப்பதற்கு நான் விரும்பவில்லை. அவர்கள் மீது உள்ள நம்பிக்கையைப் பற்றி தெளிவாக தன் மனைவியிடம் அவர் விளக்கிக் கூறினார்.
.
நம் மீது முழு நம்பிக்கையுடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை வைக்காமல் இருப்பது நமக்கு ஒருவிதமான இழப்பு ஆகும். நம்பிக்கையுள்ள நண்பர்கள் உறவினர்கள் ஆகியோர்கள் மீது நாம் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு நம்பிக்கை இல்லாமல் இருப்பது நமது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய இழப்பாகும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாம் ஒருவர் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் நம்பிக்கையுடன் நடந்து கொண்டாலும், அவர்கள் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் அவர்களால் நமக்கு முழுமையான அழிவை இழப்பை நமக்கு கொடுத்து விடாது என்பதை மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு என்பதுபோல் ஒருவர் மீது நாம் கொள்ளும் முழுமையான நம்பிக்கையானது எக்காலத்திலும் நமக்கு கெடுதல் ஏதும் நேர்ந்து விடாது என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகில் தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நினைப்பது இது தவறான முடிவாகும். நம்பிக்கையானவர்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் பற்றி நாள்தோறும் நினைத்துக் கொண்டிருந்தால் நாம் மன அமைதியைத்தான் இழக்க நேரிடும். நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் துரோகிகளை பற்றி நினைத்து கவலைப்படாமல் இருக்க வேண்டும். அதேபோல் நமக்கு நம்பிக்கையானவர்களில் ஒருவரைக்கூட நாம் எந்த நிலையிலும் இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நமது வாழ்வில் நம்பிக்கையான ஒருவரை இழப்பதன் மூலம் நாம்தான் பாதிப்பு அடைவோம். அதனால் நம்மையும் அறியாமல் மன அமைதியையும் இழக்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். நாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மீது அவர்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளாமல் நம்பிக்கை வைப்பதால் நாம் எந்தவிதத்திலும் கெட்டுவிடப் போவதில்லை.

ஆன்மீகத்தில் குரு கூறிய அனைத்தையும் சீடன் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டும் என்பது கட்டாயமல்ல. எடுத்துக்காட்டாக குருவானவர் கையை மூடிக்கொண்டு சீடனிடம் தன்னோட உள்ளங்கையில் ஒரு பூனைக்குட்டியை மறைத்து வைத்துள்ளேன் என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். குரு கூறியதுபோல் உள்ளங்கையில் பூனையை மறைத்து வைத்துக் கொள்ள முடியாது என்பது சீடனுக்கு நன்றாகத் தெரியும்.

குரு சொல்லிவிட்டாரே என்று எண்ணிக்கொண்டு அதனை சீடன் நம்ப வேண்டியதில்லை. சீடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் வேண்டியதில்லை. அதனை குரு ஒரு நகைச்சுவை நோக்குடன்கூட சொல்லியிருக்கலாம் என்று சீடன் நினைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் குருவின் வார்த்தைகளை தத்துவங்களை சீடன் முழுமையாக மறுத்து விடவும் கூடாது. அதுதான் குருவின்மீது சீடன் வைத்திருக்கும் ஆழ்ந்த குரு பக்தியாகும்.

ஒரு விவசாயி தன்னோட கஷ்டங்களை குருவிடம் கூறி ஆறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வருகிறான். அப்போது குருவானவர் அந்த விவசாயியைப் பார்த்தவுடன் நீ ஆனந்த சொரூபியாக இருக்கிறாய் என்று சொன்னால் அப்போது அந்த விவசாயின் மனநிலை எப்படியிருக்கும். அவன் கஷ்டப்பட்டு குருவிடம் ஆறுதல் தேடி வந்திருக்கிறான். அவனுக்கு ஆறுதல் கூறாமல் இவ்வாறு குரு விவசாயிடம் கூறுவதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

குரு சொல்வதை நாம் முழுமையாக நம்பாமல் இருக்கக் கூடாது. அவர் அவ்வாறு கூறினால் குருவின் வார்த்தையில் ஏதோ ஒரு நுட்பமான தத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குரு கூறிய வார்த்தைகள் தத்துவம் நமக்கு புரியாமல் உள்ளது என்று நமக்குள் நினைத்துக் கொண்டு, குருவின் வார்த்தைகளின் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்குப் பெயர்தான் சிரத்தை அல்லது நம்பிக்கை ஆகும்.

குரு கூறுவதை சீடன் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அவர் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளாமல், யோசிக்காமல் அவரிடம் புரியவில்லை என்று அவசரப்பட்டு மறுத்து விடக்கூடாது. அவ்வாறு மறுத்தால் ஆன்மீக வழியில் அது தாமசமான சிரத்தை என்று கூறுகிறது. எனவே குருவின் வார்த்தைகளில் தற்சமயம் சீடனுக்குப் புரியவில்லை. நாளடைவில் அதன் உண்மை நிலை சீடனுக்குப் புரிந்து விடும். அவ்வாறு நாளடைவில் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.

குருவானவர் தன்னோட சீடர்களிடம் சத்தியத்தை கடைபிடி அகிம்சையுடன் இருக்க வேண்டும் என்று போதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சீடன் உடனே இதெல்லாம் தனது வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது என்று குருவிடம் உடனே மறுத்து விடக்கூடாது. சீடன் சத்தியத்தையும் அகிம்சையையும் கடைபிடித்தால் கஷ்டங்கள் இடர்பாடுகள் எல்லாம் வரும் என்று சீடனுக்குத் தெரிய வருவதால் அவனை அறியாமல் குருவின் வார்த்தைகளை அப்போது மறுப்பதற்குத் தோன்றும். அவ்வாறு மறுக்காமல் சீடன் கடைப்பிடித்து குருவின் மீது நம்பிக்கை, அவர் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். இதுதான் சீடனது சாத்வீக சிரத்தையாகும்.

நமக்கு ஞானம் வருவதற்கு இந்த நம்பிக்கையானது ஓர் பாலமாக துணை புரிகிறது. ஆரோக்கியமான மனம், உறுதியான மனம், ஞானத்தினை உள்வாங்கும் மனம் என்ற நிலைகளில் சிரத்தை நமக்கு துணை புரிகிறது. ஆன்மீக வழியில் ஞானத்தினை அடைவதற்கு நம்பிக்கைதான் முதலிடம் பெறுகிறது. நமக்கு ஞானம் வரும் வரை நாம் பொறுமையாக குரு கூறிய வார்த்தைகளில் தத்துவங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை வரும் வரை அவற்றின் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கு ஆன்மீக வழியில் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமக்கு பொறுமை சிரத்தை போன்றவை அவசியம் வேண்டும்.

நமக்கு ஞானம் இருந்தாலே குருவின்மீது நம்பிக்கை, அவர் கூறும் வார்த்தைகளில் தத்துவங்களின் மீது நம்பிக்கை இயல்பாகவே வந்து விடும். அதேபோல் அமைதியும் நம்மையறியாமல் ஆன்மீக வழியில் இயல்பாகவே வந்து விடும் என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக எல்லாருடைய மனதிலும் ஒருவர் உண்மையை கூறினாலும் அவன் உண்மைதான் கூறுகிறானா? அல்லது பொய் கூறுகிறானா? என்று நமது மனது நம்மை அறியாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

எனவே நமது மனது எவரையும் எளிதில் நம்பாமல் யார் நல்லது கூறினாலும் நம்பாமல் இருக்கிறது. இத்தகைய மனநிலையை நாம் ஆன்மீக வழியில் சென்று நமது மனதை மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மனது மாறினால்தான் வாழ்க்கையில் நாம் தேடும் விரும்பும் மனஅமைதி கிடைக்கும். இதற்கு புராணக் கதைகள் இதிகாசங்கள் போன்றவை எத்தனையோ ஆன்மீக வழியில் பல்வேறு வழிமுறைகளைக் காட்டுகிறது.

உலகில் யாரையும் நம்பாமல் இருப்பது சிலருக்கு ஒரு மனநோயாகவே உருவெடுத்து விடுகிறது. அதனால் அவர்களது மனம் நிம்மதியற்ற நிலை உருவாகிறது. பொதுவாகவே நமது மனமானது இயல்பாகவே யாரையும் எளிதில் நம்புவதில்லை. எனவே நாம் மனதளவில் அனைவரையும் நம்பவேண்டும் என்ற நல்ல பண்பினை ஆன்மீக வழியில் முயற்சி செய்து வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும்.

மனம் யாரையும் நம்புவதற்கு மறுத்தாலும் அதனை அதன் போக்கில் விட்டுவிடாமல் நம்பிக்கையை வளர்ப்பதற்கு சிரத்தை எடுக்க வேண்டும். அப்படி நாம் அனைவரிடமும் நம்பிக்கை வைத்தால், அதனால் நமக்கு என்ன பயன் என்று சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் நம்மிடம் தவறு செய்வதற்கு அஞ்சுவார்கள். மேலும் அவர்கள் தங்களையும் அறியாமல்கூட நமக்கு நம்பிக்கைத் துரோகமோ கெடுதலோ செய்வதற்கு தங்கள் மனதில்கூட இடம் தரமாட்டர்கள். இதனைதான் நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு என்று ஆன்மிகம் கூறுகிறது.

உலகில் புதிதாக கண்டுபிடித்து வரப்பட்டுள்ள மருந்தின்மீது மருத்துவர் ஒருவர் அவரையும் அறியாமலே நம்பிக்கை வைத்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மருந்தினை நம்பிக்கையுடன் நோயாளிகளுக்கு கொடுத்து சிறிது காலம் வரை நோய் குணமாகி அவர்களுக்கு நன்மையாகவே இருந்து இருக்கும். அதே மருந்து நாளடைவில் நோயாளிகளின் நோயைக் குணப்படுத்தாமல் போய்விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்ததில், அந்த மருத்துவர், புதிதாக கண்டுபிடித்த மருந்தின் மீது ஆரம்பத்தில் நம்பிக்கை வைத்ததுதான் நோய் குணமாவதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றல் ஒருவர் மீதோ ஒரு பொருளின் மீதோ நம்பிக்கை கொள்ளும் பண்பு மிகவும் சக்தி படைத்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதே மருத்துவர் அதே மருந்தை நோயாளிகளுக்குக் கொடுத்தபோது சிலருக்கு நோய் குணமாகவில்லை என்று தெரிந்தவுடன், மருத்துவர் அந்த மருந்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையே முக்கிய காரணம் என்று தெரிந்ததாம்.

பிறரிடம் நாம் ஏமாற்றம் அடைவதால் நமக்கு சிரத்தையில் கவனம் வரவேண்டுமே தவிர நம்பிக்கையில் உறுதியில்லாமல் இருக்கக்கூடாது. அனைத்து மதங்களிலும் உள்ள தத்துவங்கள் கோட்பாடுகள் எல்லாம் கடவுளிடமிருந்து வந்தது என்றுதான் கூறப்படுகிறது. காரணம் மனிதனிடமிருந்து தத்துவங்கள் கோட்பாடுகள் எல்லாம் வந்தது என்றால் மக்களுக்கு அவற்றின்மீது முழு நம்பிக்கை எளிதில் வந்து விடுவதில்லை.

ரிஷிகள் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு ஏற்றார்போல் மந்திரங்கள் பழக்கங்கள் வழக்கங்களை எழுதியிருப்பார்கள் என்றுகூட சிலரால் நினைக்கத் தோன்றும். அவ்வாறு மனதில் நினைத்துவிடாமல் புராணங்கள் இதிகாசங்கள் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் இறைவனிடமிருந்துதான் வந்தது என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொள்ளும்போது, தத்துவங்கள் கோட்பாடுகள் மீதும் நம்பிக்கையில் ஒரு உறுதி நிலை தானாகவே நமக்கு வந்து விடும். குருவிடமிருந்து வரக்கூடிய வார்த்தைகள் மந்திரங்கள் ஈஸ்வனிடமிருந்து வரப்பட்டது என்று பாவனை செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு இருந்தால் குரு கூறும் தத்துவங்கள் சாஸ்திரக்கோட்பாடுகள் மீது சீடனுக்கு நம்பிக்கை இயல்பாக வளரும்.

நம்பிக்கை என்ற நல்ல பண்பு நம்மிடம் வளர்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும். அனைத்து மதங்களின் கொள்கைகள் தத்துவங்கள் கோட்பாடுகள் கடவுளிடமிருந்து வரப்பட்டுள்ளது. இதனை ரிஷிகள் முனிவர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உலக மக்களுக்கு தங்கள் கருத்துக்களை வேதங்கள் உபநிடதங்கள் இதிகாசங்கள் மூலம் தெரிவித்துள்ளார்கள். அதன் மீது நமக்கு முழு நம்பிக்கை வர வேண்டும். அதற்கு நாம் மனோசக்தியை ஆன்மீக வழியில் வளர்த்துக்கொண்டால் அவற்றின் மீது நம்பிக்கை தானாகவே வந்து விடும்.

நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பணிவு என்ற பண்பாடு வேண்டும். பணிவு நம்மிடம் இருந்தால்தான் ரிஷிகள், முனிவர்கள் ,சாதுக்கள் கூறுவதை கவனமாக கேட்டு ஆன்மீக வழியில் நடப்பதற்கு ஆரம்பிப்போம். ஒருவரிடம் செல்வம் அதிகமாக இருந்தாலும், கல்வியில் சிறந்தவராக இருந்தாலும் தங்களை விட உலகில் செல்வந்தர்கள் இல்லை. தங்களைவிட கல்வியில் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு கர்வத்துடன் மற்றவர்கள் கூறுவதை அலட்சியப்படுத்தி விடுவார்கள். அப்படிப்பட்ட எண்ணங்கள் உள்ளவர்களிடம் நம்பிக்கை என்னும் பண்பு எளிதில் வளர்வதில்லை. அதனால் அவர்கள் தங்களையும் அறியாமல் மன அமைதியை இழந்து தவிப்பார்கள். எனவே மனிதனுக்கு எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உயர்ந்தநிலை, தாழ்ந்த நிலையில் இருந்தாலும் கர்வம் என்பது இருக்கக்கூடாது. மனிதனுக்கு கர்வம் சிறிது இருந்தாலும் அதனை வளர விட்டுவிட க்கூடாது.

ஒருவர் அனைத்து துறைகளிலும் திறமை உள்ளவர்களாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சிலர் நிறைகுடம் ததும்பாது என்பதுபோல் அமைதியாக இருப்பார்கள். ஒருசிலரிடம் பணிவு என்ற பண்பினை எதிர்பார்க்க முடியாது. மேலும் அவர்கள் ஆன்மீகக் கருத்துக்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். அதாவது ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு சிலரது கர்வமே ஒரு தடையாக இருக்கும். ஒருவர் விஞ்ஞானத்தில் பெளதிகத்தில் சிறந்து விளங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் வேண்டுமானால் அவர் சிறந்தவராக இருக்கலாம். மற்றபடி வேதாந்தம் ஆன்மிகம் ஆகியவற்றில் அவர் ஒரு பூஜ்யம்தான். கற்றுத் தேர்ந்தவர்கள் கர்வம் கொள்ளக்கூடாது என்பதற்கு நமது முன்னோர்கள் ‘கற்றது கடுகு அளவு கல்லாததது உலகளவு’ என்று கூறியிருக்கிறார்கள். வித்தியா கர்வம் அவரையும் அறியாமல் ஒரு சிலருக்கு வந்து விட்டால் ஆன்மீகக் கருத்துக்களை கேட்பதில் அத்தகையவருக்கு விருப்பம் இருப்பதில்லை.

அதிகம் படித்தவர்கள் தங்கள் மனதிற்குள் தான் ஒரு முட்டாள் என்று நினைத்துக்கொண்டால் அவர்கள் ஆன்மீக வழியில் முன்னேற்றம் காண்பார்கள். அதை விட்டுவிட்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்துடன் இருந்தால் அவர்கள் ஒருபோதும் ஆன்மீகத்தில் ஞானத்தினை பெற முடியாது. வாழ்வில் மனஅமைதி என்பது அவர்களுக்கு ஒரு கானல்நீர்தான். உலகில் யாரையும் நம்பக்கூடாது ஆன்மீகத்தில் கூறும் தத்துவங்களை வார்த்தைகளையும் நம்பக்கூடாது என்பது ஒரு சிலருக்கு இருக்கும் ஒருவிதமான மன நோய் ஆகும்.

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது அவசியம் இருக்க வேண்டிய ஒரு நல்ல பண்பாகும். அப்படி நீங்கள் ஒருவரை முழுமையாக நம்பியவர் உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாலும், அதன்மூலம் வரக்கூடிய துன்பங்கள் எதுவும் உங்களை அதிகம் பாதிக்காது. ஆனால் நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களைத்தான் சிறிது காலம் சென்ற பிறகு அல்லது உடனடியாகவோ அவர் உங்களுக்குச் செய்த கெடுதல்கள் அவருக்குத் துன்பங்களாக சுவரில் எறியப்பட்ட பந்துபோல் திருப்பி வந்து அவரை தாக்கும். நம்பிக்கைத் துரோகத்தை அவர் நினைத்து வருந்தக்கூடிய மனநிலைக்கு துன்பம் அவர்களைக் கொண்டு வந்து விடும். எனவே மன அமைதியை விரும்புவர்கள் அனைவரிடம் நம்பிக்கைகுரியவராக நடந்து கொள்ள வேண்டும்.

நமக்கு யாரிடமிருந்தும் அறிவுபூர்வமான அனுபவபூர்வமான ஆன்மீகக் கருத்துகள் வரலாம். அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய பரந்த மனம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஆன்மீகக் கருத்துக்கள் நம்மோட மனதில் பதிந்து நம்மை நல்வழிப்படுத்தும் என்பதை உணர வேண்டும். சேவை மனப்பான்மையுடன் இருப்பது மனிதனுக்கு தாழ்வு மனப்பான்மையை முற்றிலும் அழிக்கும் தன்மையுடையது.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சேவை மனப்பான்மை இருக்க வேண்டும். குருகுலத்தில் குருவின் தேவையை அறிந்து அதனை மகிழ்வுடன் பூர்த்தி செய்பவர்களாக சீடர்கள் இருந்தார்கள். தற்போதும் ஆசிரமத்தில் வசிக்கும் குருவுக்கு சீடர்கள் சேவை செய்து தங்கள் பணிவையும் அன்பையும் பக்தியையும் காட்டுகிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் ஒரு நல்ல இணக்கம் ஏற்படுவதற்கு சேவை மனப்பான்மை அவசியம் தேவை என்பதை இதன்மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

குருவிடம் இணக்கமுடன் ஆர்வமுடன் பக்தியுடன் சேவைகள் செய்யும்போது குருவிடமிருக்கும் ஆத்ம ஞானம், தத்துவங்கள் போன்றவற்றை நம்மையும் அறியாமல் இயல்பாக அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் சீடருக்கு குருவின் மீது ஒரு சிரத்தை ஏற்பட்டு ஞானத்தை அடைவதற்கு பணிவுடன் கூடிய மகிழ்ச்சியும் ஏற்படும். குருவினை அணுகி சேவை செய்தால்தான் ஞானத்தின் முழுப்பலனை அறிய முடியும். நாமும் அந்த ஞானத்தினை அடைய குருவின் மீதுள்ள நம்பிக்கை உறுதி பெறப்படும்.

ஒருவர் சாதுவிடம் சென்று அலுவலகத்தில் ஒரே பணியினை நாள்தோறும் தான் செய்து கொண்டிருப்பதால் தனக்கு பணியில் ஒருவிதமான சலிப்புடன்கூடிய அலுப்புத் தட்டுகிறது. ஆனால் குடும்பத்தில் உள்ள தனது மனைவி மக்கள் அப்பா அம்மா போன்றவர்களுக்குச் செய்யக்கூடிய பணியானது அவ்வாறு தனக்கு சலிப்போ அலுப்போ ஏற்படுவதில்லை என்று கூறினார். அதற்கு மாறாக மிகுந்த சந்தோஷம்தான் தனக்கு ஏற்படுகிறது இது எதனால் என்று அந்த சாதுவிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் ‘நீ குடும்பத்தில் உள்ள உன்னோட நெருங்கிய உறவினர்களுக்கு விரும்பி சேவை செய்வதால் எவ்விதமான அலுப்போ சலிப்போ உனக்கு தெரிவதில்லை’ என்று விளக்கம் கூறினார். எனவே உலகில் எந்தவொரு செயலும் சேவையும் நாம் விரும்பிச் செய்வதால் சலிப்போ கஷ்டங்களோ அதில் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

உலகில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயலாதவர்களுக்கு செய்யக்கூடிய சேவையானது நமக்கு ஒருவிதமான மனபக்குவதைக் கொடுக்கும். இதனை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். மற்றவர்கள் மீது நம்பிக்கை கொள்வதால் என்ன பலன் நமக்குக் கிடைக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால், முதலில் அறிவுபூர்வமான அனுபவபூர்வமாக ஞானம் கிடைக்கும். அதன் மூலம் வாழ்வில் நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும். ஒரு மனிதனுக்கு அனைத்து நற்பண்புகள் அவனை அறியாமல் கிடைக்கும்.

ஆனால் நம்பிக்கை என்னும் சிரத்தை இல்லை என்றால் ஞானம் அவர்களுக்கு ஒரு போதும் கிடைக்காது. மனிதனுக்கு பணிவு என்ற பண்பு இருந்தால் எல்லாரும் அவனை விரும்புவார்கள். மனிதனுக்கு நல்ல மன ஒழுக்கம் இருந்தால் அவர்கள் வாழ்வில் சந்தோசமாக இருப்பார்கள். மனக்கட்டுப்பாடு பொறுமை இருந்தால் வாழ்வில் மகிழ்வுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை என்ற பண்பு இல்லையென்றால் அவர்களுக்கு ஞானம் கிடைப்பதில்லை.

ஒருவருக்கு மற்றவர்கள் மீது நம்பிக்கை வருவதற்கு அறிவு வேண்டும். அதேபோல் பக்குவமான மனம் இருக்க வேண்டும். ஆனால் நம்பிக்கையின்மைக்கு அறிவும் மனபக்குவமோ தேவையில்லை. வாழ்க்கையில் பலவழிகளில் ஏமாற்றம் அடைந்து வாழ்வில் விரக்தி அடைந்து நம்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாமல் வாழ்வில் இருக்கக்கூடாது. எத்தனைமுறை ஏமாற்றம் அடைந்தாலும் மற்றவர்கள் மீது நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது என்ற மனபக்குவம் ஒவ்வொரு மனிதருக்கும் வரவேண்டும். நாம் கீழே விழுவது மீண்டும் எழுவதற்கு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வில் நம்பிக்கையுடன் நற்பண்புகளுடன் வாழ்ந்தால் என்ன பலன் நமக்கு ஏற்படுகிறது என்று சிந்தித்துப் பார்த்தால், முதலில் ஞானம் வருவதற்கு வழிகாட்டுகிறது. மனக் குழப்பங்கள் மறைந்து நமக்கு மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. மனதிற்கு அமைதி கிடைக்கிறது. இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யத் தோன்றுகிறது. யார் மீதும் பகைமை காட்டுவதற்கு மனம் இடம் கொடுப்பதில்லை. நாம் அனைவரும் விரும்பும் மனஅமைதி அப்போது நம்மையறியாமல் கிடைக்கிறது.

எடுத்தக்காட்டாக நாம் ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கு தடையாக இருக்கும் நமது பணியினை நம்பிக்கையுடன் ஒருவரிடம் ஒப்படைத்து விடவேண்டும். அவ்வாறு ஒப்படைத்து விட்டால், அதன்பிறகு எந்தவிதமான மனக்கஷ்டம் உடல்கஷ்டங்கள் போன்றவை இல்லாமல் மனம் அமைதியுடன் இருக்கலாம் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ள முடியும். ஒருவருக்கு உலகில் உள்ள அனைத்துவிதமான நற்பண்புகள் இருந்தாலும் நம்பிக்கை என்னும் பண்பு ஒன்று மட்டும் இல்லையென்றல் அவன் .ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணமுடியாது. ஆனால் அவனிடம் இருக்கும் ஏனைய நற்பண்புகள் மூலம் நன்மைகள் பலன்கள் அவனுக்குக் கிடைக்கும். அதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை. ஆனால் அவன் விரும்பும் ஞானத்தினை மன அமைதியை மட்டும் அடையமுடியாது. மனிதனுக்கு நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதுபோல் நம்பிக்கைதான் ஞானத்திற்கு அவசியம் என்பதை ஆன்மீகத்தை நாடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனை நன்கு புரிந்துகொண்டு ஆன்மீக வழியில் செயல்படும்போது அவன் விரும்பும் தேடும் மன அமைதி அவனையும் அறியாமல் கிடைக்கும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (14-Mar-22, 11:58 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 73

மேலே