சான்றாண்மை தீயினஞ் சேரக் கெடும் – நாலடியார்179

நேரிசை வெண்பா
(’வ’ ‘யி’ இடையின எதுகை)

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும் 179

- நல்லினம் சேர்தல், நாலடியார்

பொருளுரை:

நிலத்தின் வளத்தினாற் செழித்து வளர்ந்த நெற்பயிரைப்போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மை யுடையோராவர்;

மரக்கலத்தின் வலிமையைக் கொடிய புயற்காற்றுச் சென்று கெடுத்தாற்போல, தீய இனத்தவரைச் சேர்பவர்க்கு அதனால் அச் சான்றாண்மை அழியும்.

கருத்து:

இயல்பாகவே நல்லோராயிருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கை நன்மையையும், தீயினச் சேர்க்கை தீமையையும் உண்டாக்கும்.

விளக்கம்:

நிலத்துக்கு நலமாவது வளம்; குலம் கலந்து பழகுவோர் இனம். இச்செய்யுள் சான்றோரைக் கருத்திற்றாதலின் அவர் மேலுமேலுஞ் சான்றோராகுவரென்று முதற்பகுதிக்கு உரைக்கப்பட்டது.

கலத்துக்கு நலமாவது அலைகளாற் தாக்குறாது செல்லும் உறுதி. உவமைக்கேற்றபடி பொருளின் எழுவாய் தீயினம் ஆகவேண்டுமாயினும், அதனாற் கருத்துக்கு இழுக்கின்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-22, 9:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே