நற்சார்வு சார்ந்தார்மேற் செல்லாவாம் செற்றார் சினம் – நாலடியார் 178

இன்னிசை வெண்பா

கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம் 178

- நல்லினம் சேர்தல், நாலடியார்

பொருளுரை:

கொல்லையாகிய பெரிய நிலத்திலுள்ள மரக்கட்டையைச் சேர்ந்து வளர்ந்த புல் உழவரது உழுகின்ற படையாகிய கலப்பைக்குக் கெடாதனவாகும்;

வலிமை இல்லாதவரேயாயினும் நல்லினத்தாரென்னும் வலிய சார்பினைச் சார்ந்தவர் மேல், பகைவரது சினம் பயன்படாமற் போகும்.

கருத்து:

நல்லாரினத்திற் சேர்ந்திருப்பார் மேற் பகைவர் சினம் செல்லாது.

விளக்கம்:

குற்றி - சிறுகட்டை; ஈண்டுக், கொல்லையில் வளர்ந்து தரையளவாக வெட்டப்பட்டு விட்ட வேர்க்கட்டை. ஒல்காமைக்கு இங்குக் கெடாமைப் பொருளுரைக்க.

மெல்லியரென்றது அறிவு, ஆற்றல், பொருள் நிலை முதலியவற்றிற் சிறியர் என்னும் பொருட்டு;.

நற்சார்வு - இந்நிலைகளிற் பெரியாராயினாரது துணை.

சினம், பகையின் மேற்று, செல்லாது என்பது கடை குறைந்து நின்றது.

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்,
செற்றார் செயக்கிடந்த தில் 445

(பெரியாரைத் துணைக்கோடல்) என்றார் வள்ளுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே