தொக்கிருந்து எண்ணினான் எண்ணப் படும் – நான்மணிக்கடிகை 76

இன்னிசை வெண்பா

நாக்கின் அறிப இனியதை; - மூக்கினான்
மோந்தறிப வெல்லா மலர்களும்; நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத்; தொக்கிருந்(து)
எண்ணினான் எண்ணப் படும் 76

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

சுவைக்கினியதை நாவாற் சுவைத்தறிவார்கள்; எல்லா மலர்களையும் மூக்கினால் யாவரும் மோந்தறிவார்கள்; காட்சிக்கு அழகான பொருள்களை பார்வை யுண்டென்று கருதப்படும் கண்ணாற் பார்ப்பார்கள்; அறிஞர்கள் கூடியிருந்து அறிவினால் உணர்ச்சிகள் ஆராயப்படும்.

கருத்து:

சுவைக்கினியதை யாவரும் நாவினாற் சுவைத்தறிப; மலர்மணங்களை மூக்கினால் மோந்தறிப; காட்சிக்கு அழகிய பொருள்களைக் கண்ணினாற் காண்ப; உணர்வருங் கருத்துக்களை அறிஞர் ஒன்று கூடியிருந்து அறிவானால் ஆராய்வர்.

விளக்கவுரை:

காட்சிப் பொருள்களைக் கண் முதலிய ஐம்பொறிகளாலும், கருத்துப் பொருள்களை அறிவின் ஆராய்ச்சியாலும் மக்கள் தெரிந்து கொள்வர் என்பது கருத்து. நாப்பயன் முதலிய மூன்றுங் கூறினமையின் ஏனை மெய்ப்பயன் செவிப்பயன்களையுந் தழுவிக்கொள்க. எண்ணப்படுமென்பதற்கு உணர்வுகள் அவாய் நிலையான் வருவிக்கப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-22, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே