குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கை - நீதிநெறி விளக்கம் 62

நேரிசை வெண்பா
(இடையின எதுகை 'ல', 'வ' - குலம், நலம், தவம்)

குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திருவும் - தவம்விற்றாங்(கு)
ஊனோம்பும் வாழ்வும் உரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்தல் தலை 62

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

(ஒருவன்) தன்குலத்தின் பெருமைக்கு மாறான செய்கையால் தேடும் பொருளும், உண்மை எனும் நற்பொருளை விற்று (அஃதாவது, பொய் புகன்று) பெறும் செல்வமும், (தான் கொண்ட) விரதத்தை விற்றுத் தன் உடலைப் பாதுகாக்கும் வாழ்க்கையும், தன் முன்னோர் வாக்களித்த உரிமைகளை விற்று உண்ணுதலும் (ஆகிய இவை யாவும் தன்னை வந்தடையாமல்), தான் விழிப்புடன் காத்துக்கொள்வது எல்லா அறங்களுள்ளும்) தலைமையான அறமாகும்.

விளக்கம்:

வெறுக்கை - பொருளுடையார்க்கு எப்போதும் உயிரச்சமேயாதலால் அறிஞர் அதனை வெறுப்பர் எனுங் காரணம் பற்றிப் பொருளுக்கு வெறுக்கை என்பது பெயராயிற்று.

ஊன் - காரியமாகிய உடம்பிற்காதலால்

கருத்து:

மிகுந்த பொருள் கிடைக்கும் என்றெண்ணி ஒருவன் தன்குலம், வாய்மை, தவம், உரிமை ஆகியவற்றைக் கைவிடல் தகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-22, 6:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே