பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல் அறனன்றே - நீதிநெறி விளக்கம் 77

நேரிசை வெண்பா
’ன்’ ‘ந்’ மெல்லின எதுகை, ‘ய்’ இடையின ஆசு)

பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறனன்றே ஆயினு மாக - சிறுவரையும்
ந’ன்’னலத்த தாயிணுங் கொள்க நலமன்றே
மெ’ய்’ந்’நடுங்க வுண்ணடுங்கு நோய். 77

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பிறன் வரம்பில் நிற்பவள், அஃதாவது பிறன் மனைவி, தலைவாயிலினிடத்துச் செல்லல் நற்செயலாகாது;

அவ்வாறு அறனாகாது ஆயினுமாகுக. அச்செயலில் நொடிப்பொழுதாயினும் தூய இன்பமுடையதாயின் அதனைக் கைக்கொள்க;

அச்செயலால் வருவது இன்பமன்றே; ஆனால் வருவது என்னவென்றால், உடல் நடுங்க மனமும் நடுங்குவதற்குக் காரணமாகிய வருத்தமேயாகும்.

விளக்கம்:

பிறன்மனை புகுவான் புகுங்கால் மெய்ந்நடுங்கி உள்ளொடுங்கிச் செல்வானாதலால் "மெய்ந் நடுங்க உண்ணடுங்க நோய்" என்றார்.

கருத்து:

பிறன்மனையாளை விரும்பல் அறனன்று; இன்பமுமன்று; துன்பமே விளைவிக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-22, 6:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே