தம்பி நீங்க

சீனிவாசகம் வீட்டின் பெயர்
அதில் ஒரு பெயர்பலகை “சா. சீனிவாசன், சூப்பிரண்டு (ஓய்வு)
அப்படித்தான் அந்த வீட்டில் இருந்தது.
உள்ளே...
லட்சுமி.. லட்சுமி..
என்னங்க... இந்தா வர்றேன்..
ஒரு காபி கொண்டாடி... அப்படியே இந்த இன்சூரன்ஸ் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வந்துர்றேன்.
என்ன விசயம்ங் அந்த ஆபிசுக்கு...
ஒன்னுமில்லடி அங்க வேலை பார்க்கிறவருக்கு நம்ம வீட்ட பக்கத்து வீட்டு தம்பி சொல்லுச்சாம். அதான் என்னன்னு ஒரு எட்டுப்போயி பார்த்துவந்துடறேன்.
காபியோடு வந்த லட்சுமியம்மா இப்படித்தான் சொன்னார்கள் “சரிங்க நல்லா விசாரிச்சிட்டு வாங்க.. ம்ங்.. ஒரு காலத்துல எல்லாம் நம்ம பயபுள்ளைகளா இருந்ததுக, இப்ப பாருங்க யாருயாரோ உள்ள வந்துசுருச்சிங்க”.
காபியை குடுத்து டம்ளரை அப்படியே வைத்துவிட்டு, சரி லட்சுமி போய்ட்டு வர்றேன்.. சீனிவாசன் கிளம்பினார்.
5 நிமிட நடைக்குள் அந்த அலுவலகம் வந்தது.. வாசலிலே காவலாளி...
என்ன சார் என்ன வேணும்.
இங்க கிருபான்னு..
கிருபா சாரா? நீங்க..
அவருக்கு தெரிஞ்சவருதான்.. என் பேரு சீனிவாசன்
ஒரு நிமிசம் சார்.. அந்த காவலாளி இண்டர்காமில் தொடர்பு கொண்டு சார் சீனிவாசன்னு ஒருத்தர் வந்துருக்கார் உங்களுக்கு தெரிஞ்சவர்ன்னு சொன்னாரு... மறுமுனை பதிலை கேட்டுவிட்டு சரிசார் அனுப்பிவைக்கிறேன் சார் என்றவர் அப்படியே சீனிவாசனை பார்த்து திரும்பி, சார் நீங்க போங்க கிருபா சார் இரண்டாவது மாடியில ஆபிஸ்ல இருக்காங்க.. இந்த பக்கம் போனீங்கன்னா லிப்ட்டு இருக்கும்..
சீனிவாசன் அந்த காவலாளியின் பேச்சை நன்கு கவனித்தார். ஆம் அந்த அலுவலகத்தில் கிருபா என்பவர் நல்ல மரியாதையுடன் தான் இருக்கிறார். மெதுவாக லிப்ட்டை நோக்கி நடக்கலானார்.
லிப்டில் இரண்டாம் தளம் என்ற வார்த்தை உரக்க கேட்டது.
வெளியே இறங்கி அலுவலகத்தை நோக்கி நடந்தார் சீனிவாசன்.. ம். பெரிய அலுவலகம்தான்.. அந்த அலுவலக அறையிலிருந்து வெளியே வந்தவரை நிறுத்தி இங்க கிருபா...ன்னு சொல்ல.. அந்த நபர் கிருபா சாரா .. இங்க தான் இருக்காங்க என்றவாறு அலுவல கதவை மீண்டும் திறந்து சார் உங்கள பார்க்க ஒருத்தர் வந்துருக்காங்க என்றார்.
அலுவலக அறையை திறந்து ஒரு நபர் வெளியே வந்தார்.. சீனிவாசனில் 5 நொடி பார்வையில் அந்த நபரை இப்படித்தான் எடைபோட்டிருந்தார். ஏறத்தாழ சரியான உயரம், நல்ல உடல்வாகு, நல்ல உடை, கையில் கட்டிய கடிகாரம் கொஞ்சம் விலை கூடத்தான் இருக்கும் அந்த செருப்பு கூட நல்ல விலை இருக்கலாம். ஆனால் இன்னும் ஒன்றை கண்டறிய முடியவில்லை அதனால் சீனிவாசனை பேச ஆரம்பித்தார்.
தம்பி என்பேரு சீனிவாசன், குமார் தம்பி சொன்னாரு உங்களுக்கு வீடு வாடகைக்கு வேணும்னு..
ஓ.. ஆமா சார். குமார்ட்ட சொல்லிருந்தேன்..
தம்பி நான் பிஎப் ஆபிசில சூப்பிரண்டா இருந்து ரிடையர்டு ஆயிட்டேன். இங்க கம்பன் தெருவில ரெண்டு பெரிய வீடு இருக்கு அதுல ஒன்னு இப்ப காலியா இருக்கு..அதான் உங்கள பார்த்து பேசிட்டு வந்துரலாம்னு ... வந்தேன்
சார்.. என் மனைவியும் பார்க்கணும் நாளைக்கு வர்றோம் சார்.. உங்க நம்பள கொடுங்களேன்.
அதான் தம்பி உங்கள பார்த்து.. என அப்படியே இழுத்தார்
கிருபாவும், சார்..என் மனைவியும் பார்க்கணும் ஆசைப்படுவா நாளைக்கு வர்றேனே என மறுபடியும் இன்னொரு நாள் கேட்க
மறுபடியும் சீனிவாசன் அதான் தம்பி உங்கள பார்த்து ... என இழுக்க
கிருபாவும் அதை யோசித்து, சார் சொல்லுங்க என்ன விசயம் என கேட்டார்
சீனிவாசன் மெதுவாக தம்பி உங்களுக்கு எந்த ஊரு பூர்வீகம்..
தூத்துக்குடி சார் இது கிருபாவின் பதில்
சீனிவாசனுக்கு இன்னும் தெளிவாகவில்லை.. இந்த முறை வாயைத் திறந்து கேட்டுவிட்டார் தம்பி நீங்க என்ன ஆளுங்க..
கிருபா கேட்டார் சார் நீங்க என்ன ஆளுங்க,?
தம்பி நான் ... ... ... ...... சற்று தோளை உயர்த்திக்கொண்டார் சீனீவாசன்.
பட்டென சொன்னார் கிருபா, சார் உங்காளுங்க வீட்ல நாங்க குடியிருக்க மாட்டோம் போயிட்டுவாங்க,
சீனிவாசனுக்கு வியர்த்துவிட்டது இவன் பதில் சொன்னானா இல்லை செருப்பால் அடித்துவிட்டானா என விளங்கவில்லை. கன்னத்தை தடவியும் பார்த்துவிட்டார், கிருபாவின் காலையும் பார்த்துவிட்டார் செருப்பு அங்குதான் இருந்தது கழட்டியதுபோல் தெரியவில்லை.
கிருபா மறுபடியும் தொடர்ந்தார்.. சார் நீங்க சூப்பிரண்ட இருந்தேன்னு சொல்றீங்க ஆனா சாதிய இப்படி பிடிச்சிருக்கீங்க.. வேலை பார்க்கும்போது இப்படித்தான் இருந்தீங்களா?
சார் வீட்ட வாடகைக்கு கொடுக்குனும்ணா, இவன் வாடகை கட்டிருவானா, ஒழுங்கா இருப்பானான்னு பாருங்க அதவுட்டு என்ன சாதின்னு தேடிட்டு இருக்கீங்க
ஏன் உங்க சாதியில எவனும் தண்ணியடிக்கிறவன் இல்லையா? இரண்டு பொண்டாட்டிக்காரன் இல்லயா?
கதவை திறந்து விட்டு கிருபா உள்ளே சென்றுவிட்டார்.
இனி சீனிவாசன் திரும்பித்தான் போகவேண்டும். ஆனால் இன்னும் அந்த செருப்படி மட்டும் கன்னத்திலா உள்ளத்திலா கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைபார்க்கும்போது மட்டுமல்ல இப்பவும் கூட யாரும் இப்படி பேசியதில்லை..
சீனிவாசன் திருந்த வாய்ப்பு தெரியவில்லை. கிருபா திருத்தியிருக்கிறார்.

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (26-Mar-22, 3:27 pm)
Tanglish : thambi nenga
பார்வை : 134

மேலே