பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு – நான்மணிக்கடிகை 81

இன்னிசை வெண்பா

நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்;
குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்;
வளமில் குளத்தின்கீழ் நெற்சாம்; பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு 81

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

அழகும், இளமையியல்பும் வறுமையினால் மங்கும்; குலத்துயர்வும், குலத்தொழுக்கமும் கல்லாமையினால் கெடும்;

நீர் வருவாயில்லாத ஏரியின்கீழ் விளையும் நெற்பயிர் சாவியாம்; சுமத்தலாற்றாத சுமைப் பொருளின் கீழ்த் தாங்கும் எருதுகள் சாகும்.

கருத்து:

அழகும் இளமையும் வறுமையிற் கெடும்; குலத்துயர்வுங் குலத்தொழுக்கமுங் கல்லாமையிற் கெடும்; வருவாயற்ற ஏரியின்கீழ் விளையும் நெற்பயிர் சாவியாம்; சுமத்தலாற்றாத சுமையைத் தாங்கும் எருதுகள் சாகும்.

விளக்கவுரை:

‘குடிமை' உயர் குடிப்பிறந்தாரது ஒழுக்கத்தை யுணர்த்துதல், ‘குடிமை - குடிசெய்தல் தன்மை,

‘குடிமை - உயர்ந்த குடியின்கட் பிறந்தாரது தன்மை' (குடிமை). வளம் - வருவாய்.

பரமல்லா - சுமக்கலாற்றாத; பரமல்லாப் பண்டம் - சுமக்குமளவிற்கு விஞ்சிய பண்டம்.

பகடு - வண்டியிழுக்கும் எருது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 11:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே