வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு கோல்வழி வாழ்தல் குணம் - சிறுபஞ்ச மூலம் 14
நேரிசை வெண்பா
கொண்டான் வழியொழுகல் பெண்;மகன் தந்தைக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கிளையஃ(து) - அண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம் 14
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
இல்வாழ்க்கைக்கு இசைந்த பெண்ணானவள் தன்னை மணந்து கொண்டவனுடைய சொல்வழியே நடத்தலும்,
ஒருவனுக்குப் புதல்வனாயிருப்பவன் தன் தகப்பனுக்கு அவனது கட்டளையைவிட்டு நீங்காதவனாய் அவனுரைக்கும் வழியிலேயே நடத்தலும்,
அத்தந்தையினுடைய சுற்றத்தார்க்கு அக்குணமே பொருத்தியிருந்தலும்,
மன்னனுடைய வெவ்விய போரைச் செய்யும் வீரர்கள் பகைவரோடு சேர்ந்துகொள்ளாமல் அரசன் பகைவர் மீது ஏவுகின்ற வேல் செல்லும் வழியேபோய் அவனை நீங்காது போர்செய்தலும்,
அரசன் செங்கோல் முறைப்படி ஒழுகுதலும் நன்மையாம்;
பொழிப்புரை: கொழுகன் வழியொழுதல் பெண் குணம், தந்தைக்கு இடைவிடாதே நிரந்தரமாய் ஒழுகல் மகன் குணம், அவனைப் போல் வழியொழுகுதல் கிளையின் குணம், பகைவரோடு செறியாதே வேல்வழியினிடை விடாது வாழ்தல், அரசன் வெம்முனையிற் போயிருந்தார் குணம், அவ்வரசன் கோல்வழியே வாழ்தல் நாட்டின் குணம்.
கருத்துரை:
பெண் கனவன் சொற்படி யொழுகுதலும், மகன் தந்தை சொல்வழி நடத்தலும், கிளை அவன்போலவே வழியொழுகுதலும், வெம்முனையின்கட் போயிருந்தார் பகைவரோடு செராதே அவரை செல்லும் வழியால் இடைவிடாமல் வாழ்தலும், நாடு அரசனது கோல்வழியே வாழ்தலும் அவரவர்கட்குரிய குணங்களாம்.
''கோனோக்கிவாழுங் குடி'' என்ற நான்மணிக்கடிகையடிக்கிணங்க, 'நாடு கோல்வழி வாழ்தல்' என்றார்.
வெல்வழி - வெல்லும் வழி எனலுமாம். வீடாது - கெடாது.
தட்டான் என்பது தண்டான் என மெலித்தல் விகாரம் பெற்றது.
முனை - போர். அஃது ஆகுபெயராய்ப் போர் செய்யும் வீரர்களை யுணர்த்திற்று;
மன், வாழ்தல் என்பன இரண்டிடத்துங் கூட்டப்பட்டன. நாடு - இடவாகுபெயர்.