பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வது நன்று - சிறுபஞ்ச மூலம் 15

நேரிசை வெண்பா

பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை
இழைத்ததீங் கெண்ணி யிருத்தல்; - இழைத்த
பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று. 15

சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

தனக்குப் பிறனொருவன் செய்த தீமையை பொறுத்துக் கொள்வது பெருமை ஆகும்.

பிறர் தமக்குச் செய்த தீமையை மறவாமல் நினைத்துக்கொண்டே இருப்பது சிறுமை ஆகும்.

தான் செய்த பகைமைச் செயல்கள் மாறுவதற்கு ஏதுவாக வாழ்வதும், மிகுந்த பொருள்களையுடைய செல்வர்களும், பெரியோர்களும் ஏளனஞ் செய்து நகைப்பிற்கு இடங்கொடாமல் வாழ்வதும் நன்மை பயப்பதாகும்.

கருத்துரை:

பிறர் தவற்றைப் பொறுத்தல் பெருமை, பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை, பிறர் பகை கெட வாழ்தலும் செல்வரும் நல்லோரும் ஏளனஞ்செய்து நகைக்காது வாழ்தலும் நன்மை யுடையனவாம்.

தவறு - ஒருவன் அறியாது செய்த குற்றம். இதனைப் பொறுப்பவர் பெருமை யடைவர்; பொறுக்கா திருத்தலால் அத் தீங்கின் தொடர்ந்த எண்ணமே நெடுநாட் பகைவிளைத்துக் கேடும் பயக்கும். இதனாற் சிறுமையே நேரும்.

பிறர் பகை ஏற்படின் அதனை நால்வகையிலொன்றால் நீக்கி வாழ வேண்டும். பிறரால் நகைத்து எள்ளப்பட வேண்டாதார் வறுமையையும் இரப்பையும் நன்முயற்சியால் நீக்கி வாழ வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 12:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே