பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல் - பழமொழி நானூறு 92

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்(து)இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல். 92

- பழமொழி நானூறு

பொருளுரை:

இலங்கையரசன் இராவணனுக்கு இளவலாகிய விபீடணன் பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாகத் தான் சென்று அவனது சார்பைப் பெற்று, இலங்கைக்கே மீண்டும் சென்று தலைவனாய அரசபதவியை அடைந்தான்.

ஆதலால், பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால் பயன் அடையாதவர் யாரும் இல்லை.

கெழீஇ இலார் - பயன் அடையாதார்

கருத்து:

பெரியோரைச் சார்ந்து ஒழுகுவார் பயன்பெறுவர் என்பதாம்.

விளக்கம்:

அரசன் பெரியோர்களுடைய சார்புகொண்டு ஒழுகின் எல்லா நலங்களையும் எய்தலாமென்ற கருத்தை விபீடணன் இராமன் சார்பைப் பெற்று அரசியலடைந்ததிலிருந்து அறிந்து தெளியலாம்.

'பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-22, 8:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே