அறிவினால் கால் தொழில் என்று கருதற்க – நாலடியார் 193

நேரிசை வெண்பா

உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியுந் தின்னும்; - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும். 193

தாளாண்மை, நாலடியார்.

பொருளுரை:

வலிமைமிக்க புலி தனக்கேற்ற இறைச்சி யுணவில்லாமல் ஒருநாள் ஒரு வேளை சிறிய தவளையைப் பிடித்துந் தின்னும்;

ஆதலால், தமக்குரிய அறிவு மேம்பாட்டினால், எதனையும் காலால் செய்தற்குரிய சிறுதொழிலென்று யாரும் கருதாதிருப்பராக;

அச்சிறு தொழிலையும் பொருள் செய்தொழுகும் முயற்சியினால் உயர்ந்த தொழிலும் அதிலிருந்தே பெருகிவரும்.

கருத்து:

சிறு தொழிலையும் முயற்சியோடு திருத்தமாகச் செய்ய வேண்டும்.

விளக்கம்:

உவமத்திற் புலிக்கு உடம்பு வலிமை கூறப்பட்டமையின், பொருளிலும் அறிவு வலிமை காட்டுதற்கு ‘அறிவினால்' என்றார். ஊனிரையின்றி யென்றமையின், தேரையின் ஊன் சிறுமை பெறப்பட்டது. தேரை தின்று பசியாறிய ஒரு சிறு தணிவிலிருந்து பேரிரை பற்றும் வன்மை புலிக்குண்டாதலின், சிறு தொழிலையும் பொருள் செய்தொழுகும்

முயற்சியிலிருந்தே மக்கட்கு உயர்தொழிலும் பெருகிவருமென்பது கருத்து. கையினால் முயற்சி ஒழுக்கத்தாலென்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-22, 8:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே