எல்லாம் உடையனாய் இன்பமீக் கூர்ந்திருக்க இழிநிலையில் - இனிமை, தருமதீபிகை 990
நேரிசை வெண்பா
எல்லாம் உடையனாய் இன்பமீக் கூர்ந்திருக்க
வல்லாய் அதனை மறந்துநீ - பொல்லா
இழிநிலையில் ஓடி இனைகின்றாய் உன்னை
ஒழியவே(று) இல்லை உணர். 990
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நீ எல்லாம் உடையனாய் என்றும் இன்பம் நிறைந்திருக்க உரியவன்; உண்மையான அந்த உரிமையை மறந்து புன்மையாயிழிந்து புலையாடி அலைகின்றாய்; புலைநிலை ஒழிந்து உனது தலைமையை உணர்ந்து உரிய தகைமையை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஈசனும் சீவனும் அநாதி நித்தியமான உறவுகள் உடையவர். சூரியனும் சந்திரனும் போல் நேரிய நிலையினர். கதிர் ஒளியால் கண் ஒளி இலங்கி வருதல் போல் பரஞ்சோதியால் சீவ சோதி துலங்கி வருகிறது. எங்கும் பரந்து நிறைந்துள்ள அவனைச் சீவர்கள் அறிந்தும் அறியாமல் மயங்கியுள்ளனர். கண்டவர் கண்டபடி எல்லாம் சொல்லிவர அவன் காட்சி புரிந்து வருகிறான்; உண்டு என்பவர்க்கு உளனாய் ஒளி புரிகிறான்; இல்லை என்பவர்க்கு இலனாய் எளிது மறைகிறான்.
பரமனுடைய நிலைமையும் தலைமையும் அதிசய விசித்திரங்களுடையன. எவரும் எவ்வழியும் தெளிவாக அறிய முடியாதன. அவரவருடைய நிலைமையின் அளவே அவனது அருளாடல்கள் வெளியாகின்றன. தெளிவான சிந்தை தெய்வ ஒளி ஆகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மா மா காய் அரையடிக்கு)
கண்டார் கண்ட காட்சியும்நீ! காணார் காணாக் கள்வனுநீ!
பண்டா ருயிர்நீ யாக்கையுநீ! பலவாஞ் சமயப் பகுதியும்நீ!
எண்தோள் முக்கட் செம்மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு
தொண்டாய்ப் பணிவா ரவர்பணிநீ சூட்டிக் கொள்வ தெவ்வாறே? 1
சூட்டி எனதென் றிடுஞ்சுமையைச் சுமத்தி எனையுஞ் சுமையாளாய்க்
கூட்டிப் பிடித்து வினைவழியே கூத்தாட் டினையே! நினதருளால்
வீட்டைக் கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பனைத்தும்
ஏட்டுக் கடங்காச் சொப்பனம்போல் எந்தாய் இருந்த தென்சொல்வேன். 2
- தாயுமானவர்
இறைவனுடைய அற்புத வினோதங்களைத் தாயுமானவர் இவ்வாறு விற்பன விவேகமாய் விளக்கியிருக்கிறார். உரைகளில் உணர்வு நலன்கள் ஒளி புரிந்துள்ளன. பொருள்களைத் துருவி நோக்குவோர் உயிர் பரங்களின் உறவுகளை துணுகி உணர்ந்து கொள்வர்.
நினதருளால் வீட்டைக் கருதும் போது உலக வியப்பு அனைத்தும் சொப்பனம் போல் இருந்தது என்றது ஈண்டு நினைந்து சிந்திக்கத் தக்கது. வீடு பெறுவது மெய்யுணர்வின் பேறாகிறது.
மனம் தூய்மை ஆனபொழுது மனிதன் மகானாய் வாய்மைகளைத் தெளிவாய்த் தெரிய உலக உயிர்கள் உய்ய அறிவு நலங்களை அருளுகிறான். புனித போதனை இனிய அமுதாம்.
நேரிசை வெண்பா
மாசடைந்து மண்ணை மருவிநின்ற மாமணிபின்
தேசடையச் செய்யின் தெளிவுறல்போல் - பாசம்
மருவியுள்ள சீவன் மயக்கொழிந்தால் தேசு
பெருகி ஒளிரும் பெரிது. - கவிராஜ பண்டிதர்
புழுதி படிந்து மண்ணில் மறைந்து கிடந்த மாணிக்க மணி அந்த மாசு நீங்கின.பின் மன்னன் மணி மகுடத்தில் தலைமையாய் ஒளி பெற்று விளங்கும்; அதுபோல் உலக பந்தங்களில் அழுந்தி இழிந்து கிடந்த சீவன் பாசம் நீங்கினால் தேசு மிகுந்து ஈசனையடைந்து எழில் மிகுந்து திகழும் என்பது இதனால் தெளிய வந்தது. மாசு ஒளிய ஈசன் வெளியாகிறான்.
புன்மையான மருள் ஒழிந்த அளவே உண்மையான பொருள் தெரிய நேர்ந்து உரிமையை அடைந்து பெருமை மிகப் பெறுகிறது. மெய்யை உணராமையால் வைய மையல்கள் விரிந்து பரந்து வெய்ய துயரங்கள் விளைந்து வந்துள்ளன.
நேரிசை வெண்பா
உள்ளம் தெளிந்தால் உறுதி நலமுணர்ந்து
கள்ளம் கழிந்து கதிகாணும் - உள்ளமே
யாவும் அருளும் அதுபுனிதம் ஆயினதேல்
தேவும் வெளியாம் தெளி. - கவிராஜ பண்டிதர்
மனத்தின் மகிமையை இது உணர்த்தியுள்ளது. மனம் மாசு படியாதிருந்தால் அங்கே ஈசன் குடிபுகுந்தருளுகிறான்.
இறைவனுடைய இனிய இனமான நீ மனிதன் என வந்திருக்கிறாய்; செய்த வினைகளால் பிறவிகள் எய்த நேர்ந்தன.
எண்ணில்லாத பிறவிகளில் பிறந்து கண்ணில்லாத குருடன் போல் யாதொரு உண்மையும் காணாமல் மண்ணாய் மடிந்து போனாய்; மீண்டும் மீண்டும் அவ்வாறே மாண்டு மறைந்து தொலைந்து ஈண்டு இந்த உருவை எடுத்து வந்துள்ளாய், கை, கால் முதலிய அவயவங்களோடு தேகம் தெரிய வருகிறது; உள்ளே உணர்வு மயமான சீவ சோதி மேவியுளது. வெளியே கூடியுள்ள கூட்டையே நான் என்று கோட்டி கொண்டு குலாவுகின்றாய்; குலம், செல்வம், கல்வி முதலிய நிலைகளையே நினைந்து செருக்கி வீணே நிலைகுலைந்து திரிகின்றாய்; புலையான இந்தப் புன்மைகளை ஒழிந்து நிலையான உண்மை தெளிந்து என்றும் நித்தியமான நன்மைகளை நன்கு அடைந்து கொள்க.
தூய்மையான பரமனுடைய உரிமையான உறவுநீ; உனது மெய்யான நிலைமையை உணர்ந்தால் மேலான தலைமை வெளியாகும்; உன் உள்ளத்தைப் புனிதம் ஆக்கு; உயர்ந்த சிந்தனைகளை ஓர்ந்து செய், பேரின்ப வெள்ளத்தை நேரே காணலாம்.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
தனிமையில் அமர்ந்துநீ தன்னை நோக்கினால்
துனிமையல் ஒழிந்துபோம் தூயன் ஆகுவாய்!
இனிமைகள் பொங்கியே எங்கும் நேர்வரும்
அனையபே ரின்பினை அடைந்து வாழுக.
- கவிராஜ பண்டிதர்
ஊன்றி உணர்ந்து சிந்தித்து வருமளவே மனிதன் உயர்ந்து வருகிறான். உணரவுரியதை உணர்பவரே உண்மை ஞானிகளாய் உயர் கதியுறுகிறார். மதிதெளியக் கதி தெரிகிறது.
தனது ஆன்ம நிலையைக் கருதாமல் மயலாய்க் கண்டு களிப்பனவெல்லாம் கடுவெறிகளாய் விரிந்து கெடு மூடங்களாகவே நீண்டு நிற்கின்றன. அல்லல்கள் நீங்கி ஒழிய ஆய்ந்து காண்பதே நல்ல காட்சியாய் ஓங்கி நலம் பல அருளுகிறது.
தன் சீவனைக் காண்பவன் தேவனைக் காண்கின்றான். உரிமையான பொருளைக் கண்டவன் அரிய பல மகிமைகளைக் கண்டு அதிசய இன்பங்களை அடைந்து துதிகொண்டு திகழ்கிறான்.
மனிதன் இயல்பாகவே இனிமைகளை நாடுகிறான்; அவை நேரே வருகிற வழியை அறியாமல் அயலே மயலாய்ப் போகின்றான். மையல் வாழ்வுகள் வெய்ய தாழ்வுகளையே விளைத்து வருகின்றன. துன்ப விளைவுகள் தெரியாமல் இன்பமாய்க் களிப்பது இழி மடமையாகிறது. மாய மருளொழியின் தூய வழி தெரியும்.
தன்னுயிர்க்கு உறுதி காண்பவனே உத்தம மேதை ஆகிறான். தெளிவான அறிவும் விழுமிய சீலமும் தெய்வ ஒளிகளாய்த் தேசு மிகுந்துள்ளன. மாசு படியாத மனம் ஈசனுக்கு இனிய இடம் ஆகி அதன் தனி மகிமை தெரியலாகும். புனித மனம் உடையவரே முனிவர் என நேர்ந்துள்ளனர்.
தன் உள்ளத்தைத் தூய்மையாய்ப் பேணி வருபவன் எல்லா மேன்மைகளையும் எளிதே எய்தி மகிழ்கிறான். சித்த சுத்தியுடையவன் தத்துவ ஞானியினும் உத்தம முத்தனாய் ஒளி மிகுந்து நிற்கின்றான் உரிய இதயம் இனியதானால் அரிய இனிமைகள் யாவும் அங்கே உதயம் ஆகின்றன. எல்லா நன்மைகளுக்கும் மூலமாயுள்ளமையால் மனநலம் மனிதனுக்கு அதிசய பாக்கியமாய்த் துதி மிகப்பெற்றது. உயிரின் உயர்வு உள்ளத்திலுள்ளது.
Keep thy heart with all diligence; for out of it are the issues of life. . (Bible)
உள்ளத்திலிருந்தே உயிர்க்கு உயர்நலங்கள் உளவாகின்றனவாதலால் உன் இதயத்தை எவ்வழியும் புனிதமாய் இனிது பேணுக என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அறிய வுரியது.
துன்பம் நீங்கி மனிதன் யாண்டும் இன்பம் அடைய வேண்டுமானால் அவனுடைய மனம் பழுதுபடாமல் எவ்வழியும் விழுமிய நிலையில் புனிதமாயிருக்க வேண்டும். இதயத்தின் இனிய தூய்மையிலிருந்தே ஞானம் உதயமாய் வான சோதி போல் வயங்கி வருகிறது. சீவன் ஆதிபகவனுடைய ஞாதி என்பதை ஞானம் காட்டியருளுகிறது. அத்தகைய வித்தக விவேகமும் சித்த சுத்தியால் சிறந்து திகழ்தலால் இதன் உத்தம சித்தியை உணர்ந்து கொள்ளலாம். இனிய மனம் இன்பநிலையம் ஆகிறது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
மந்திரி எனலாம் உண்மை மருவுறும் விசாரத் தாலே;
இந்திரி யங்கள் என்னும் இடர்ப்பகை அறுத்த லாலே
தந்திரி எனலாம்; இட்டம் சமைத்தலால் ஏவல் ஆளாம்:
நொந்திரி கிலாத உள்ளம் நோக்கிய விவேகத் தோர்க்கே. 1
ஆலிக்கும் இன்பத் தாலே அன்புறு மனைவி ஆகும்;
பாலிக்கும் இயல்பி னாலே பாவன தந்தை ஆகும்;
சீலிக்கும் உறுதி யாலே தேடரு நட்பும் ஆகும்;
தூலிக்கும் வினைகள் இல்லாத் தூய்மனம் விவேகத் தோர்க்கே. 2
- ஞான வாசிட்டம்
இனிய மனமும் அரிய விவேகமும் இங்கே தெரிய வந்துள்ளன. உண்மையை விசாரித்து உறுதி கண்டு உதவி புரிதலால் உயிர்க்கு மனம் மந்திரி போல் மருவியுள்ளது; புலன்களாகிய பகைகளை வென்று நலம் பல புரிதலால் சேனாதிபதி போல் சிறந்து நிற்கிறது, அமைதியாய் இனிய சுகம் தருதலால் மனைவி போலவும், யாதொரு தீதும் நேராமல் பாதுகாத்து வருதலால் தந்தை போலவும், தாய் போலவும், நண்பன் போலவும் நல்ல மனம் உள்ளது. அந்த உண்மையைச் சுவையாய் இவை உணர்த்தியுள்ளன.
தீய அழுக்குகள் படியாமல் மனம் தூயதானால் அதிலிருந்து ஞான ஒளி வீசுகிறது; தெளிவான அந்த ஒளியில் எல்லா உண்மைகளும் எளிதே தெரிய வருகின்றன. ஈசனுடைய இனிய இனமே சீவன் என்று தெளிவாய் அறிந்து அதிசய ஆனந்தம் அடைகிறது. பேரின்ப நிலையமாய்ப் பெருகியுள்ள பரமான்வினுடைய வரமான உறவே ஆன்மா, அந்த உரிமையை உணர்ந்து உறுதிநலம் தெளிந்து உயர்கதி யுறுக.
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
சீவன் என்னும் சிறுமை ஒழிந்துயர்
தேவன் என்னும் தெளிவு வெளிவரின்
ஏவல் உன்வழி யாவும் எதிர்வரும்
மேவும் முத்தியின் மெய்த்திரு மெய்ம்மையே.
- கவிராஜ பண்டிதர்
இந்த உண்மையை ஓர்ந்து தேர்ந்துயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.