மானிடனாய் வந்த வகையை வகுத்தறிந்து சொந்தமாய் நின்ற சுகநிலை - வீடு, தருமதீபிகை 1000

நேரிசை வெண்பா

இந்த உடம்பை எடுத்திங்கு மானிடனாய்
வந்த வகையை வகுத்தறிந்து - முந்திநீ
சொந்தமாய் நின்ற சுகநிலையைத் தோய்ந்தாயேல்
அந்தமிலா இன்பம் அது. 1000

- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இந்த உடம்போடு இங்கே இப்பொழுது ஒரு மனிதனாய் வந்திருக்கிறாய்; இந்தப் பிறவி வந்த வகையைப் பகுத்தறிந்து முந்தி நீ சொந்தமாய் இருந்த அந்தச் சுக நிலையைத் தோய்ந்தாயேல் அது அந்தமில்லாத அதிசய ஆனந்தம் ஆகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அண்மைச் சுட்டு உண்மையை ஓர்ந்துணர வந்தது. கண் எதிரே தோன்றியுள்ள இவ்வுடல் எண்ணரிய பிறவிகளைக் கடந்து பெரிய புண்ணியத்தால் கிடைத்துள்ளது; பெறுதற்கரிய பேறாய் வாய்ந்துள்ள இந்தக் கருவியைக் கொண்டு பெறவுரிய பேரின்ப நிலையை விரைந்து பெறுபவனே சிறந்த மகிமையாளனாய் உயர்ந்து திகழ்கிறான். பிறவிப் பேறு பின்பு பிறவாமையே.

அரிய சாதனம் அமைந்துள்ள பொழுதே பெரிய ஊதியத்தைப் பெறாது நின்றவர் பேதைகளாய் இழிந்து போகின்றார்; பெற்றவர் மேதைகளாய் விளங்கி நிற்கின்றார், மெய்யுணர்வு என்பது பொய்யிழிவுகளை நீக்கி மெய்யான இன்ப நிலையை எய்துவதேயாம். பெறவுரியதைப் பெறுபவன் பேறாளனாகிறான்.

ஈனமும் இடர்களும் இகந்து தன்உயிர்க்(கு)
ஆனதை அறிவதே ஆன்ம ஞானமாம்.

தத்துவ ஞானத்தின் உத்தம உருவத்தை இது உணர்த்தியுள்ளது. உள்ளதை உள்ளபடி ஓர்ந்து தெளிவதே தெள்ளிய ஞானம்; என்றும் உள்ள ஈசனை எய்தி இன்புறுக

பிறவி எவ்வழியும் துன்பம் என்பது அனுபவங்களால் செவ்வையாய்த் தெரிய வருகிறது. அல்லல்களே யாண்டும் நீண்டு தொடர்ந்து நெடிது படர்ந்து வருதலால் துயரப் பிறப்பு என்று பெயர் பெற்று அதன் இயல்பை விளக்கி நின்றது. .

பற்றிய துன்பங்கள் எல்லாம் ஒருங்கே நீங்கி என்றும் அழியாத இன்ப நிலையைப் பெறுவதே முத்தி, வீடு என முடிவாயுள்ளது. பந்த நீக்கங்களை இந்த மொழிகள் தெளிவாக்கியுள்ளன:

துன்பம் தோற்றம்; பற்றே காரணம்.
இன்பம் வீடே; பற்றிலி காரணம் - மணிமேகலை, 30

நான்கு உண்மைகளை இது நன்கு காட்டியுள்ளது. தோன்றி மறையும் மருமம் தெரிய பிறப்பைத் தோற்றம் என்றது.

தோற்றம் துன்பம்; அதற்குக் காரணம் பற்றே.
வீடு இன்பம்; அதற்குக் காரணம் பற்றின்மையே.

என விளக்கியுள்ள இதனைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும்

துக்கம், துக்க விளைவு, துக்க நீக்கம், துக்கம் நீங்கும் நெறி என்னும் இந்த நான்கையும் சத்திய சதுட்டயம் என்பர். இந்த நிலைகளை உய்த்துணர்ந்து உய்தி காண்போரே உத்தம ஞானிகள் ஆகின்றார். அறிவதை அறிந்த அடைவதை அடைக.

இடும்பைகளே நிறைந்துள்ளமையால் உடம்போடு கூடி வாழும் உலக வாழ்வை வெறுத்த ஞானிகள் உய்தி காண நேர்ந்தனர். உண்மை கண்டவர் நன்மை காணுகின்றார்.

இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே. - புறம், 194

இவ்வுலக வாழ்வு துன்பம் மிக வுடையது; ஆகவே நிலையான இன்ப வீட்டை அடையும் நெறியினை விரைந்து காணுங்கள் என நன்கணியார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் போதித்திருக்கிறார். இன்னாமை காணாமல் இனிமை காண்பதே மகிமையாகும்.

உடல் அளவில் உள்ள உயிர் கடலளவு துயரங்களைக் கண்டு வருகிறது. நினைவுகளில் இருந்தே வினைகள் விளைந்தன; அந்த வினைகளின் பயன்களை நுகர்ந்து கழிக்கவே பிறவிகள் எழுந்தன. பிறப்பில்லாத பரமனிடமிருந்து பிரிந்து வந்து பிறவிகளில் விழுந்து சீவன் துயர்களில் தோய்ந்து துடிப்பது மாயா விசித்திரமாய் மருவியுள்ளது. மாயமருள் தெளிவது தூய ஒளியாம்.

’முந்திநீ சொந்தமாய் நின்ற சுக நிலை’ என்றது சீவனது இயல்பான உண்மை நிலையை ஓர்ந்து சிந்திக்க வந்தது. ஆனந்த நிலையமான அந்தப் பரஞ்சோதியின் இனம் என்று தன்னை உணர்ந்து தெளிய நேர்ந்தால் மயலாய் விளைந்த இழி துயரங்கள் எல்லாம் அயலே ஒழிந்து போய் உயர் சுகம் ஒளிவீசி வரும்.

கலிவிருத்தம்

சிந்தை தெளிந்தால் சீவன் சிவனாய்
அந்தமில் இன்பம் அடைந்து மகிழும்;
தந்தையும் தாயும் தனையனும் ஆகி
வந்த பிறவி வரவுகள் மறையும்.

என்றதனால் மெய்யான சிந்தனையின் மேன்மை தெளியலாம். சித்தம் தெளியப் பித்தம் ஒழிகிறது. உத்தம உணர்வுகள் ஒளி வீசி எழுகின்றன. அந்த ஒளி ஆனந்த வெளியாகிறது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே. 13

- ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம், பத்தாம் திருமுறை, திருமந்திரம்

சீவன் சிவமாய் முத்திபெறும் நிலையைத் திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார். தூய பரம்பொருளின் உறவு என்று உயிரை உணர்ந்து உள்ளம் உயருமானால் துயரங்கள் யாவும் தொலைந்து போகும். இயல்பான இன்பம் எங்கும் விளங்கும்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

இருவினை தாம்வரும் யானென லாலவ்
இருவினை யால்வரும் இன்பொடு துன்பம்:
இருவினை யானெனல் இன்றெனில் இல்லை;
இருவினை இல்லெனில் இல்லை பிறப்பே.

மனத்தை அடக்க மனம்துணை ஆகும்;
பினைத்துணை இன்றது பெற்றனன் ஆயின்
தனிச்சிவ மேயொரு தானென வாழ்வன்
நினைத்து மறந்து நிலத்துழ லானே.

– பிரபுலிங்க லீலை, மனோலய கதி, 8, 9

தீய நினைப்பின் விளைவுகளையும், தூய மனத்தின் மகிமையையும் அல்லம தேவர் இவ்வாறு நன்கு விளக்கியுள்ளார். சீவன் சிவமாய் வாழும் திவ்விய மந்திரம் இங்கே தெரிய வந்துள்ளது.

‘நான் பிரமம் என்று உரிமையாய்ச் சிந்தனை செய்க’ எனப் பைங்கலம் என்னும் உபநிடதம் கூறியுள்ளது.

நான் தேவன் என்று எவன் பாவனை செய்து வருகிறானோ அவன் அவ்வாறே யாவும் ஆகிறான் என்பது பிருகதாரணியகம். வேத உபநிடதங்கள் இப்படிச் செப்பமாயுணர்த்தி வருதலால் சீவனுக்கும் ஈசனுக்கும் உள்ள உறவுரிமைகள் தெளிவாயின.உரியசோதியுள் கலந்தது.பெரிய ஆனந்தமாயது.

அறிவும் ஆனந்தமும் நிறைந்த ஆன்மா இறைவனை விட்டு நழுவிப் பிறவியில் விழுந்தமையால் மாடு, ஆடு, மனிதன் எனப் பெயர் பெறலாயது. சாதி, மதம், தேசம், மொழி முதலிய நிலைகளால் பலவகையான பேதங்கள் பரந்து ஏதங்கள் விரிந்தன. நீண்டு மருண்டு மூண்டு இருண்டுள்ள இந்த மாய இருள் ஞான ஒளியாலன்றி வேறு வழியால் என்றும் யாண்டும் ஒழியாது.

சித்த சுத்தி வாய்ந்த ஞானம் தோன்றிய போது ஈசனிடமிருந்தே சீவ கோடிகள் பிரிந்து வந்துள்ளன என்று தெரிந்து அவனை நினைந்து உருகுகின்றனர்; அவனுடைய அதிசய மகிமைகளைத் துதிசெய்து போற்றுகின்றனர். அம்மொழிகளில் அரிய உண்மைகள் வருகின்றன.

பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியா(து)

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகி
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும்

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே. 4

- 030 பட்டினத்து அடிகள் - திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது, பதினொன்றாம் திருமுறை

மூவா முதல்வ! பலகோடி அலைகள் கடலில் எழுந்தடங்குதல் போல் அகில சீவ கோடிகளும் உன்னிடமிருந்தே தோன்றி மீண்டும் ஒடுங்குகின்றன; இந்த அற்புத நிலையை உன்னருள் பெற்றவரன்றி மற்றவர் அறிதல் அரிதென ஈசனை நோக்கிப் பட்டினத்தார் இவ்வாறு பேசித் துதித்திருக்கிறார்.

சத்தியமாய் நித்தியமாய் ஆனந்த மயமாயெங்கும் நிறைந்துள்ள இறைவனுடைய சொந்த உறவு நீ; இந்த உண்மையை உணர்ந்து மாய பந்தங்கள் யாவுமொழிந்து தூயனாயுயர்ந்து உன்னுடைய இயல்பான பேரின்ப நிலையை இனிது பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-22, 7:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே