வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும் தாழாமே நோற்பார் தவம் - நீதிநெறி விளக்கம் 91
நேரிசை வெண்பா
(‘ழ்’ மேல் உயிர் ’ஆ’ உயிர் மேலே வருவது)
இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென்
றுளைவின்று கண்பாடும் ஊழே - விளிவின்று
வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும்
தாழாமே நோற்பார் தவம் 91
தாழ்’ஆ’மே - தாழாமே
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
இளமையில் இறத்தலின்றி தமது வாழ்நாள் நீண்ட கால எல்லையினை உடையதாதல் அறிவரேல் (நாம்இப்போது) இளைஞராயிருக்கிறோம், முதுமையில் வருந்தி தவம் செய்வோம் என்று வருத்தமில்லாமல் உறங்கிக் கிடப்பதும் ஒருகால் முறையேயாகலாம்;
தமது ஆயுள் நாள் முடிவைக் காணுந் துறவியரும் நொடிப்பொழுதாயினுந் தாமதியாமல் தவஞ் செய்வார்,
விளக்கம்:
வரம்பு - எல்லை, முடிவு, விளிவின்று என்பதில் இன்றி என்னும் வினையெச்சம் செய்யுள் ஆகலின் உகரத் திரியாக வந்தது.
கருத்து:
இறக்கும் நாள் என்றென்று யார்க்குந் தெரியாதாகையால் உடனே தவஞ் செய்து கொள்ளுதல் மக்கள் கடன்,