சேத்திரத் திருவெண்பா - பாடல் 11 - திரு ஆனைக்காவல்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று. 11

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, 'என் காதல் மணாளனை காத்திட வாவென்றும், இது தகாதென்றும் புலம்புமுன் தென்னாட்டில் உள்ள `திருஆனைக்கா`வில் உறையும் இறைவனைச் சென்று சேர்' என்று கூறுகிறது.

பொழிப்புரை:

எவர் ஒருவர் இறப்பினும் அங்கே குழுமியிருக்கும் உறவினர் கூட்டம் இறந்தவரது குற்றங்களை எல்லாம் மறைத்து விட்டு அவரிடம் இருந்த குணங்கள் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப் பாராட்டுதல் வழக்கம்.

அவ்வாறிருக்க, வழமையாக இருந்த உடல்நிலை கெட்டு, உடல் உறுப்புக்களைச் சூழ்ந்து உறவுகள், மனைவி மக்கள் இருக்க, என் காதல் மணாளனைக் காத்திட வாவென்றும், இது தகாதென்றும் புலம்புமுன் தென்னாட்டில் உள்ள 'திருஆனைக்கா`வில் உறையும் இறைவனைச் சென்று சேர் என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

திருஆனைக்காவல்:

இறைவர் திருப்பெயர்: நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி
வழிபட்டோர்: அம்பிகை, சிலந்தி, யானை.
தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர், 2. அப்பர், 3. சுந்தரர்

பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம்.

ஆனை வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.

இறைவனைப் பூசித்த சிலந்தி, அடுத்த பிறவியில் ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழ மாமன்னர் கோச்செங்கட்சோழராக அருள்பெற்ற இடம்.

நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.

ஈசன், சித்தராக வந்து திருநீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிரகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது.

சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, தான் ஏற்றார்.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் மொத்தம் 154 உள்ளன.

இத்தலம் திருச்சி நகரில் உள்ளது. திருச்சி நகரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-22, 9:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே