சேத்திரத் திருவெண்பா - பாடல் 12 - திருப்புன்னையங்கானல் என்ற கபாலீச்சரம்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து. 12

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, 'திருப்புன்னையங்கானல் எனப்படும் மயிலை என்ற மயிலாப்பூரில் உறையும் இறைவனை நினைந்து வணங்குங்கள்' என்று கூறுகிறது.

பொழிப்புரை:

நெஞ்சமே! குயிலுக்கு இணையான கருமை நிறமான தலைமுடி கொக்கைப் போன்று வெளுத்து, நெஞ்சில் கோழை மிகுந்து இருமல் அடிக்கடி எழுந்து நோய்வாய்ப் படுமுன் திருப்புன்னையங்கானல் எனப்படும் புன்னை மரங்கள் மிக்குள்ள கடற்கரை நகரிலுள்ள மயிலை என்ற மயிலாப்பூரில் உறையும் இறைவனை நினைந்து வணங்கவில்லையானால், யாதும் இயலாத இறுதிக் காலத்தில் துயரத்தால் வாயைத் திறந்து கொண்டு உயிர் போய்விட காண்போர் இரங்கக் கிடக்கும் நிலை வரலாம். அதற்கு முன் இவ்விறைவனை இப்பொழுதே சிந்திப்பாயாயின் இந்நிலை வாராது எனப்படுகிறது.

புன்னையங் கானல் - புன்னை மரங்கள் மிக்குள்ள கடற்கரை.

மயிலை - மயிலாப்பூர், இது தொண்டை நாட்டுத் தலம்.

இஃது இங்குள்ள திருக்கோயிலைக் குறித்தது.

இக் கோயில் `கபாலீச்சரம்` என்னும் பெயருடையது.

பின்னை - யாதும் இயலாத இறுதிக் காலம்.
அங்காந்து - துயரத்தால் வாயைத் திறந்து கொண்டு உயிர் போய்விட,
இரு - காண்போர் இரங்கக் கிட

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-22, 9:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே