நற்புடையிலாளர் தொழில் யாவை – திரிகடுகம் 97

நேரிசை வெண்பா
(’ங்’ ‘ஞ்’ மெல்லின எதுகை)

ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில். 97

- திரிகடுகம்

பொருளுரை:

அரசன், ஆசிரியன், தந்தை, தாய், மூத்த சகோதரன் ஆகிய ஐந்து பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும்;

விரும்பிய குறையாமல் வளர்கின்ற நட்புச் செய்வாரிடத்து பொய் பேசி வழக்காடுதலும்;

தன்னை மனத்தில் இருத்தி விரும்பிய கற்புடைய மனைவியைத் துறத்தலும் ஆகிய இம் மூன்றும் நற்பண்பில்லாதவரது செயல்களாகும்.

கருத்துரை:

ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-22, 5:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே