நள்ளளவின் மிக்காய காற்றொழிலை யோம்பலே தெள்ளறிஞர் கண்ட நெறி – இன்னிலை 36
இன்னிசை வெண்பா
உள்ளவா சேற லியைபெனினும் போம்வாய
வெள்ளத் தனசேறல் வேண்டல் மனைக்கிழவன்
நள்ளளவின் மிக்காய காற்றொழிலை யோம்பலே
தெள்ளறிஞர் கண்ட நெறி 36
– இன்னிலை
பொருளுரை:
தன்னிடத்தில் உள்ள பொருளுக்கு ஏற்றவாறு செலவழித்து நடப்பது பொருத்தமென்றாலும், செலவழிக்க வேண்டிய இடத்தில் வெள்ளத்தைப் போலப் பெருக்கமாகச் செலவு செய்து நடப்பதை விரும்பற்க; ஒரு மனைக்கு உரிமையுடைய தலைவன் விரும்பும் அளவிற்கு மேற்பட்ட அளவுடைய முயற்சியை விலக்குவதே தெளிந்த அறிவுடையோர் கூறிய வழியாம்.
கருத்து:
இல்வாழ்வோர் செல்வத்திற்குத் தக்கவாறு செலவழிக்க வேண்டுமெனினும் அளவுகடந்து செலவழித்தல் ஆகாது; தம்பொருள் அளவிற்கு மேற்பட்ட முயற்சியையும் செய்யக் கருதலாகாது.
விளக்கம்:
உள்ளவா சேறல் என்பது பொருள் உள்ளவாற்றை யுணர்ந்து அதற்குத் தகச் செல்லுதல் எனப் பொருள் படும். சேறல் - செல்லுதல். இது நடப்பதையுணர்த்திற்று.
செல்வத்துக்குத் தக்கவாறுதான் செலவழிக்கின்றான்; அதிகமாகச் செலவு செய்திலன்; இவ்வாறு செலவு செய்வது இவற்கு இயைத்தே என்று பிறர் கூறத் தக்கதாயினும் அதுவுஞ் செய்ய விரும்பற்க என்பார் "இயைபு எனினும்....வேண்டல்" என்றார்,
போம்வாய - பொருள் செல்லும் இடத்தன, உடன் பாட்டிலும் இவ்வாறே நிற்கும்.
நள் என்பது விரும்பும் என்ற பொருளில் வந்தது. நள் என்பதை நடு எனப் பொருள் கொண்டு இடையாகிய அளவிற்கு மேற்பட்ட அளவுடைய தொழில் எனவும் கொள்ளலாம்.
தன் பொருளளவுக்கு நடுவாகிய முயற்சியைச் செய்ய முயலலாம்; அதற்கு மேற்பட்டதெனில் அம் முயற்சியை விட்டொழிப்பது நல்லது.
ஓம்பல்: ஒழித்தல், நீக்குதல் என்று பொருளில் வந்தது.
குறிப்பு: செல் + தல் - சேறல்.