சேத்திரத் திருவெண்பா - பாடல் 13 - உஞ்சேனை என்ற உச்சயினி நகரிலுள்ள மாகாளம்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து. 13

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, 'உஞ்சேனை என்ற உச்சயினி நகரில்லுள்ள மாகாளம் என்ற கோவிலில் அமர்ந்திருக்கும் இறைவனை கைகூப்பித் தொழுது வாழ்த்துவீர்களாக' என்று கூறுகிறது.

பொழிப்புரை:

நெஞ்சே! காளைகள் போல திடமான உடல்வாகு கொண்ட இளைஞர்களாகிய நீங்கள் முதுமையடைந்து கருகருவென்றிருந்த தலைமுடிகள் பூளைப்பூக்களைப் போல நரைத்து படியாது விரிந்து வெண்மையடைந்து அழகினையும் இழந்து, எரிகொளுவச் சூழ்ந்திருப்பவர்கள் அருவருத்து ஓங்கரித்து, முன் உண்டதைக் கக்குவதற்கு முன் வட நாட்டில் உள்ள உஞ்சேனை என்ற உச்சயினி நகரிலுள்ள மாகாளம் என்ற கோவிலில் அமர்ந்திருக்கும் இறைவனை கைகூப்பித் தொழுது வாழ்த்துவீர்களாக என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

குறிப்புரை:

`ஈளையர்கள்` என்றது, முதுமை எய்தினமையை உணர்த்தியது.

பூளை - பூளைப்பூ. இது வெண்ணிறம் உடையது.

பொங்குதல் - படியாது விரிதல்.

சூளையர்கள் - எரிகொளுவச் சூழ்ந்திருப்பவர்கள்.

ஓகாளம் செய்தல் - அருவருப்பால் முன் உண்டதைக் கக்குதல்.

உஞ்சேனை - உச்சயினி; இது வட நாட்டில் உள்ள ஒரு நகரம்.

இங்குள்ள கோயிலும் `மாகாளம்` எனப்படுகிறது. இஃதொரு வைப்புத் தலம்.

1. `நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்` 2 `உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்` 3 என்னும் தேவாரத் திருமுறைகளைக் காண்க.

உஞ்சேனை (மாகாளம்) உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர், சங்கரி (ஹரசித்திதேவி),

மத்திய பிரதேசம் போபாலிலிருந்து 170 கி மீ. சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளது. சென்னையிலிருந்து 1300 கி மீ.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-22, 2:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே