சேத்திரத் திருவெண்பா - பாடல் 14 - வளர்புரம் என்ற வளைகுளம்
சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.
நேரிசை வெண்பா
இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. 14
குறிப்புரை :
(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).
இவ்வெண்பா, 'வளர்புரம் (வளைகுளம்) என்ற தளத்தில் வாழும் இறைவன் திருநாகேஸ்வரரை வாழ்த்தி வணங்கு ' என்று கூறுகிறது.
பொழிப்புரை:
நாம் கட்டுகின்ற வீடும், அவ்வீட்டில் சேர்த்து வைக்கக் கூடிய பொருட்களும் நம்மிடம் உள்ள வீட்டு மனையின் அளவுதான்.
நாம் இறந்தால் இறந்தமை பற்றி அக்கம் பக்கத்தவர்கள் உற்றவரை அணுகி இரங்கி தேறுதலாகச் சொல்வதுவும் அப்போது வந்து கண்டு நீங்குவதில் உள்ள தற்காலிக துடிப்பு உள்ள கடமையுணர்ச்சி மட்டுமே.
நல்ல சுற்றம் என்பதுவும் குளத்திலுள்ள நீரின் அளவுக்கேற்றபடி செடிகளின் வளர்ச்சியும், நீர் வளம் குன்றினால் வாடுவதும் போல செல்வ வளமாக இருக்கும்போது நெருங்குவதும், செல்வ வளம் வற்றினால் உறவுகள் நீங்குவதும் இயல்பே.
இதனை அறிய வல்லாயோ நெஞ்சே! அதனால், வளைகுளம் என்ற தளத்தில் வாழும் இறைவன் திருநாகேஸ்வரரை வாழ்த்தி வணங்கு என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.
கருத்து:
வாழ்க்கைக்கு முக்கியமாகக் கருதியிருந்த பொருள்களுள் ஒன்றேனும் உடன் வருவதில்லை).
இல் - இல்லாள். மனை - இல்லம். சொல் - இறந்தமை பற்றிய இரங்கிச் சொல்வனவும், தேற்றுவனவும்.
துடிப்பு - வந்து கண்டு நீங்குவதில்` உள்ள கடமையுணர்ச்சி. கிளை – சுற்றம்,
கிற்றியே - இதனை அறிய வல்லாயோ?
வளைகுளம்: வளர்புரம் என்று அழைக்கப்படுகிறது.
இறைவன்: நாகேஸ்வரர், இறைவி: சொர்ணவல்லி
அரக்கோணத்திலிருந்து 13 கி மீ
அரக்கோணம் – திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் நிறுத்தத்திலிருந்து இடது புறம் 6 கி மீ தொலைவு.