பிறன் தாரத்து அற்றத்தை நோக்காத கண்ணென்ப கண் – அறநெறிச்சாரம் 103

நேரிசை வெண்பா

அறங்கூறு நாவென்ப நாவுஞ் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர் - பிறன்றாரத்(து)
அற்றத்தை நோக்காத கண்ணென்ப யார்மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு, 103

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

அறத்தினைக் கூறுகின்ற நாவே நா ஆகும் என்பர்.

புறங்கூறுதலைக் கேளாத செவியே செவியாகும் என்பர்.

அயலான் மனைவியினது சோர்வை எதிர்பாராத கண்ணே கண் என்பர்.

தீமை செய்வாரிடத்தும் பகைமையின்றி இருப்பதே மனம் ஆகும்.

குறிப்பு:

கூற்று – கூறப்படுவது, சொல், செற்றம் - நெடுங்காலமாகக் கொண்டுள்ள சினம்.

அற்றம்:

1 Loosening, weakening, relaxing - சோர்வு.
2. Occasion, opportunity - அவகாசம்.
3. Destitution, poverty - வறுமை.
4. Time of being away - நீங்கினசமயம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே