ஆசிரியரை புரிந்து கொண்ட மாணவர்கள்

ஆசிரியரை புரிந்து கொண்ட மாணவர்கள்

“கர்ணபுரம்” என்னும் ஒரு சிற்றூர்.அது நகர வளர்ச்சி பெற்ற ஊர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஊருக்கு உண்டான அடிப்படை வசதிகள் கொண்ட ஊராகத்தான் இருந்தது. நூலகம் முதல் பள்ளி வரை எல்லாமே இருந்தது.அந்த ஊரில்
காலை நேரத்தில் இந்த கதையை ஒரு குடும்ப தலைவரின் குரலில் ஆரம்பிப்போம்.
ரகு..ரகு..டேய் ரகுநாதா..அப்பாவின் கர்ண கடூரமான குரல் கேட்டு தூங்கிக்கோண்டிருந்த ரகு தடாலென எழுந்து வந்தான். ஏண்டா தடி மாடு இன்னைக்கு லீவுன்னா எட்டு மணி வரைக்கும் தூங்குவயா? எப்பவும் போல காலையில நேரத்துல எழுந்து வீட்டு வேலைய பாக்கலாமில்லை.அப்பாவின் இந்த பேச்சுக்கு இவன் மனதுக்குள் முணு முணுத்துக்கொண்டான். “இந்த வீட்டில தூங்கறதுக்கு கூட உரிமையில்லை.
என்னடா முணு முணுப்பு, இந்த வயசுல உனக்கு இப்படித்தாண்டா இருக்கும், முதல்ல முணு முணுன்னு பேசாம போய் வேலையை பாரு பதில் எதுவும் பேசாமல் குளியலறை
நோக்கி போனான்.
என்ன வீடு இது, ஒன்பதாவது படிக்கும் பையனை இப்படித்தான் நடத்துவார்களா?
காலையில எழுந்தா மாட்டை புடி, கொண்டு போய் மேயி, அப்புறம் வீட்டுக்கு வந்து அவசர அவசரமா குளிச்சு ஸ்கூலுக்கு ஓடி, அங்க போனா வாத்தியாருங்க அதை எழுதிட்டு வந்தியா,இதை எழுதிட்டு வந்தியா? அப்படீன்னு உசிரை எடுக்கறது. என்ன பொழப்பு இது?
மறு நாள் இதே மன நிலையுடன் பள்ளியின் உள்ளே நுழையும் வரை இவனுக்கு இருந்த மன இறுக்கம் நண்பர்களை கண்டவுடன் மறைந்து விட்டது. மாப்ளே..இன்னைக்கு முதல் பீரியட் மெள்னசாமியா? ஆமாண்டா காலையிலேயே அந்த ஆள் நம்மளை எல்லாம் மெளனமாகவே கொல்ல ஆரம்பிச்சுடுவான்.
இவர்களால் “மெளனசாமி” எனறு அன்புடன் அழைக்கப்பட்ட குருமூர்த்தி வகுப்புக்குள்
நுழைந்தார்.. வகுப்பு அப்படியே அமைதியாக எழுந்து நின்று உட்கார்ந்தது. முகத்தை இறுக்கமாக வைத்தபடியே ஆங்கில வகுப்பை எடுக்க ஆரம்பித்தார். நல்ல கணீர் குரல்,
மாணவர்களுக்கு அவரைப்பற்றிய பயமே அந்த குரல்தான். பாடங்களை வாசித்து அதனுக்கு
விளக்கமும் கொடுப்பதில் கைதேர்ந்தவர்.நன்கு மனதில் புரியவேண்டும் என்று தமிழிலும்
விளக்கம் கொடுப்பார்.
பக்கத்து நகரத்திலிருந்து,பள்ளிக்கு தினமும் பேருந்தில் வரும் குருமூர்த்தி மாணவர்களுக்கு எப்பவுமே புரியாத புதிர்தான்.ஒரே மாதிரி முகம், மாணவிகளானாலும், மாணவர்களானாலும், ஒரே மாதிரிதான்.மொத்த்த்தில் அவரைப்பற்றி “மெளனசாமி” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிக்கொண்டாலும், தவறான முறையிலோ,கண்டபடி அவரைப்பற்றி பேசுவதை மாணவர்களாகவே தவிர்த்தார்கள். காரணம், அவர் எந்த மாணவனையும் தண்டிப்பதோ, திட்டுவதோ கிடையாது.பாடவேளைகளில் மட்டும்
அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரவில்லை என்றால் “வெளியே போ” என்று சைகை காட்டுவார். அதோடு சரி.இருந்தாலும், அவரின் செய்கையினாலேயே அவருக்கு “மெளனசாமி” என்று பெயர் வைத்து விட்டார்களோ?இந்த மாணவர்கள்..
அன்று விடுமுறை நாள், காலையில் ரகுவுடன் நான்கைந்து நண்பர்கள் பக்கத்திலுள்ள நகரத்திற்கு சினிமா பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். அன்று அந்த திரைபடத்திற்கு கூட்டம் அதிகமானதால் டிக்கட் கிடைக்கவில்லை. சரி அடுத்து மதியம் மேல் அந்த திரைப்பட்த்தை பார்த்துவிட்டுத்தான் போவது என்று முடிவு செய்த மாணவர்கள், அந்த நகரத்தை சுற்றி பார்க்கலாம் என்று சுற்றி வந்தார்கள்.
ஒரு தெரு வழியாக செல்லும்போது ஒரு வீட்டின் முன் குருமூர்த்தி படிப்பகம்
என்று போடப்பட்டிருந்தது. டேய் இது நம்ம வாத்தியார் குரு மூர்த்தியாடா? தெரியலை பார்க்கலாம் என்றவர்கள் மெல்ல அந்த கேட்டை தாண்டி உள்ளே எட்டி பார்த்தார்கள்.
முன்புறம் ஒரு பெரிய ஹால், அதில் அதே குருமூர்த்தி ஆசிரியர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.ஆனால் என்ன்வொரு ஆச்சர்யம்? அவர் சிரித்தபடியே நின்று கொண்டு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அது மட்டுமல்ல ஏதோ “ஜோக்”.அடித்திருப்பார்
போலிருக்கிறது மாணவர்களும், மாணவிகளும் சிரிப்பது இவர்கள் காதுக்கு கேட்டது.
ஆசிரியருக்கு எதிரில் இருப்பவர்களின் முதுகுப்பறம்தான் இவர்களுக்கு தெரிந்தது. அதுவும்
பாதி ஜன்னல் மறைத்துக்கொண்டிருந்தது.
பாத்தியாடா இந்த வாத்தியை, நம்ம கிட்டே பாடம் எடுக்க வரும்போது மட்டும் மூஞ்சிய கடுவன் பூனையாட்டம் வச்சுக்கறது.இங்க பாரு, காசுக்கு டியூசன் எடுக்கும்போது மட்டும் பல்லை இளிச்சு இளிச்சு பாடம் நடத்தறது. எல்லாம் இருக்கட்டும், நாளைக்கு வரும்போது வச்சுக்கலாம். மனதுக்குள் கருவிக்கொண்டே அங்கிருந்து நழுவினர்.
மறு நாள் குருமூர்த்தி உள்ளே வரும்போது அவருக்கு தினமும் காட்டும் ஒரே மாதிரி எழுந்து உட்காரும் மரியாதையை, காட்டாமல் பாதி பேர்வேண்டுமென்றே உட்கார்ந்து இருந்த்தையும், விருப்பமில்லாமல், சிலர் எழுந்து உட்கார்ந்த்தையும் ஓரக்கண்ணால் கவனித்த
குருமூர்த்தி எதனால்? என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பிக்கொண்டாலும், அதை உதறி விட்டு பாடங்களை நடத்த ஆரம்பித்தார்.
ஒரு வாரமாக கவனித்து கொண்டிருந்த குருமூர்த்தி இப்பொழுதெல்லாம் மாணவர்கள்
கண்களால் தன்னை நோக்குவதிலும் ஒரு மாற்றத்தை உணர்ந்து கொண்டார்.எதனால்?
என்ற கேள்வி அவர் மனதை குடைந்து கொண்டே இருந்தது.
மெல்ல மெல்ல இந்த விசயம் கசிந்து அவர் காதுக்கும் வந்து சேர்ந்தது. வாத்தியார்
காசு வாங்கிட்டு ஒரு மாதிரியும், கவர்ண்மென்ட் சம்பளத்துக்கு ஒரு மாதிரியாகவும் பாடம் எடுக்கறாரு. இது அவர் காதுக்கு வரவும், யார் மூலம் இது வந்தது என்று விசாரித்தார். மாணவர்கள் ரகுவையும், அவன் நண்பர்கள் பக்கமும் கை காண்பித்தனர்.
மறு நாள் ரகுவின் வகுப்புக்குள் நுழைந்தவர், முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல்
ரகுவையும், அவன் அருகில் இருந்த நான்கைந்து பேரையும் எழுப்பினார்.அவர்கள் மனதுக்குள்
ஒரு பயத்துடன் எழுந்து நின்றனர். இந்த “மெளனசாமிக்கு” தெரிஞ்சு போச்சோ ! நாமதான் இதை பரப்பி விட்டுட்டோமேன்னு.
நாளைக்கு ஸ்கூல் லீவுதான ! ரகு நீயும் உன் கூட அன்னைக்கு வந்த நண்பர்களையும், காலையில என் வீட்டுக்கு கூட்டிட்டி வரயா?
சார் நாங்க எதுக்கு சார் உங்க வீட்டுக்கு? தயக்கத்துடன் கேட்க.,..
பராவாயில்லை, ஒரு நட்போடதான் கூப்பிடறேன், வர்றீங்களா?
வேறு வழி எதுவும் தோன்றாமல் சரி வர்றோம் சார் பதில் சொன்னான்.
காலையில அவர் வீட்டுக்குள் நுழைந்த போது அவரே வாசலில் நின்று வரவேற்றார்.
அவர்களுக்கு காலை சிற்றுண்டியையும் சாபிட சொல்லி வற்புறுத்த அவர் மனைவியும் குழந்தைகளும் பரிமாறினர்.இவர்களுக்கு கூச்சமாக இருந்தது.
சாப்பிட்டு முடிந்து இவர்களை முன்புற ஹாலுக்கு கூட்டிக்கொண்டு வந்தவர் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க சொன்னார். அதற்குள் ஏதோ ஒரு வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்க
அவசரமாய் வெளியே சென்றார்.
அவருடன் ஹாலுக்கு உள்ளே வந்த மாணவிகளையும், மாணவர்களையும் பார்த்த ரகுவுக்கும், அவன் நண்பர்களுக்கும், பெரிய வியப்பாகி விட்டது. வந்தவர்கள் உடல் ஊனமுற்றவர்களாகவும், ஒரு சிலர் கண் பார்வை அற்றவர்களாகவும், இருந்தனர்.ஆசிரியரும், அவர் மனைவியும் ஒவ்வொருவரையும் கையை பிடித்து உள்ளே கூ.ட்டி வந்து உட்கார வைத்தனர். பத்து பேருக்கு மேல் இருந்தனர்.
முதலில் அவர்களுக்கு சிற்றுண்டியை கொண்டு வந்து கொடுத்தனர். ஒவ்வொருவருக்கும் கையில் ஒரு ஸ்பூனைக்கொடுத்து சாப்பிட சொன்னார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் இவர் பாடம் எடுக்க தொடங்கினார். ஒவ்வொரு மாணவன் அருகில் சென்று தொட்டு அவர்களுக்கு வேடிக்கையாகவும், ஆனால் புரியும்படியும் நடத்தினார்.
மதியம் மேல் ஒரு தொண்டு நிறுவனத்தின் வேன் வந்து அவர்களை அழைத்து சென்றது. இவர்கள் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். மதியம் சாப்பிட்டு போகலாம் என்று குருமூர்த்தியின் மனைவி கேட்டுக்கொண்டாள்.
அன்புடன் மறுத்துவிட்டு வெளியே வந்தவர்கள் மனதுக்குள் தாங்கள் அவரை தப்பிதமாக புரிந்து கொண்டோமே, என்ற வருத்தந்தான் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருந்தது.
அது மட்டுமல்ல குருமூர்த்தி ஆசிரியர் எப்பொழுதும் சைகையிலேயே சொல்பவர்
அவர் பக்கம் உள்ள உண்மையையும் காட்சியாகவே காட்டியதை மாணவர்கள் மனதார பாராட்டிக்கொண்டனர். .

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-May-22, 11:48 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 163

மேலே