உங்களுக்காக ஒரு கடிதம் 14

அன்பு பெற்றோரே,
அலசலுக்கு ரெடியா? பிரச்சனை என்னவென்று முதலில் ஆராய்வோம். என்னை கேட்டால் நம் வயதும்... இயலாமையும்தான் காரணங்கள் என்று சொல்வேன். இந்த தலைமுறையினர் நம்மிடமிருந்து எதை எதிர் பார்க்கிறார்கள்? அன்பையா? நட்பையா?. சில நேரம் புரிகிறது...பல நேரங்களில் புரிபடுவதில்லை. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன் என்று கீழே இறங்கி வந்தால்...ஓவர் அட்வான்டேஜ் எடுத்து கொள்கிறார்கள். சரி ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றெண்ணி கொஞ்சம் கடுமையாக இருந்துவிட்டால் நம்மை விட்டு..ஏன்? நம்மை ஒதுக்கியே வைத்து விடுகிறார்கள். கதையாய் சொன்னால் கேட்பதற்கு விருப்பமில்லை. அட்வைஸ் மூச்....இரண்டு காதுகளையும் மூடிக்கொள்கிறார்கள், சஜஷன்ஸ் ...ம்ம்ம் எல்லாம் எங்களுக்கு தெரியும். நீ சொல்லி எங்களுக்கு தெரியவேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை, அட எங்கள் அனுபவங்களை...வாய்ப்பே இல்லை.நாங்களே அனுபவித்து தெரிந்துகொள்கிறோம். உங்கள் அனுபவம் அந்த காலம்..எங்கள் வாழ்க்கையோ இந்த காலம். கொஞ்சம் யோசித்தால் இதுவும் சரியாகத்தான் படுகிறது. ஆக இந்த ஜென்ரேஷனோடு ஒத்துப்போவது ....எவ்வளவு பெரிய சவால் நமக்கு.
" மேடை ஏறி பேசும்போது ஆறு போல பேச்சு. கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு " கண்ணதாசனின் வரிகள் இதற்கு சால பொருந்தும். நாம் பேசுவதற்கு முன், இளைய தலை முறையினர்க்கு நண்பனாய்... உற்ற தோழனாய் இருப்பதற்கு .... அவர்கள் பின்பற்ற முன் உதாரணமாய்...ஒரு முன்னோடியாய் இருக்கிறோமா? இந்த கேள்விக்கு அவரவர் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலைத் தேடுவோம். ஏமாற்ற வேண்டாம். அப்படி ஏமாற்றினால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று அர்த்தம். அவன் சிகரெட் பிடிக்ககூடாதென்றால் நாம் சிகரெட் பிடிக்க கூடாது. அவன் தண்ணி அடிக்க கூடாதென்றால் நாமும் தண்ணி அடிக்கக்கூடாது. ப்ராக்டிகலா இது நடக்கிறதா? அப்படி நாம் இருந்தால் நாம் அட்வைஸ் செய்வதற்கு தகுதி உள்ளவர்கள் ஆகிறோம். அப்போதாவது நம் அட்வைஸ் கொஞ்சமாவது எடுபடும். நாம் ஒழுங்காய் நடந்தோமானால்...நடந்துகாட்டுவோமானால் நமக்கு மரியாதை இருக்கும். நம் பொண்டாட்டியாவது மதிப்பாள். அவளே நம்மை மரியாதை இல்லாமல் பேசும்போது நம் பிள்ளைகளுக்கு நம்மேல் எப்படி மரியாதை வரும்? இல்லை மதிப்புதான் வரும்? குடும்பத்துக்காகத்தான் உழைக்கிறோம். ஒத்துக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு உழைக்கிற காசை எத்தனை பேர் அப்படியே குடும்பத்துக்காக செலவிடுகிறோம்? உண்மையை சொல்லுங்கள். அன்றாடம் நான் கண்ட...காண்கின்ற காட்சியினை சொல்கிறேன். கணவன் தினமும் காலையிலிருந்து கஷ்டப்பட்டு வேலை செய்து...எரநூறோ இல்லை முண்ணுறோ சம்பாதித்து அதில் இருநூறுக்கு குடித்துவிட்டு...ஐம்பதோ சிலசமயம் அதுகூட கொடுக்காமல் மனைவியை இத்தனைக்கும் லவ் பண்ணி கல்யாணம் செய்த பொண்டாட்டியை அடி...அடியென்று அடித்து அவள் சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் சிறுவாட்டு காசையும்கூட பிடுங்கிப்போகும் அவல நிலையை பார்த்துதான் வேதனையுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். குடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை தேடிப்பிடித்து சொல்கிறோம். பொதுவாக கஷ்டப்பட்டு வேலை செய்த களைப்பை போக்க இல்லை உடல் வலி போக குடிக்கிறேன். நான் ஒன்றும் மற்றவன் காசுல குடிக்கலையே. நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு என் சொகத்துக்கு...என் சோகத்துக்கு குடிக்கிறேன் இதை தட்டி கேட்க எவனுக்கும் உரிமையில்லை என்று நம்மையும் ஏமாற்றிக்கொண்டு...ஊரையும் ஏமாற்றிக்கொண்டு...ஏன் படைத்தவனையும் ஏமாற்றிக்கொண்டு திரிகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகளிடம் இருந்து எப்படி நாம் ஒழுக்கத்தை எதிர் பார்க்கமுடியும்? நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.
கட்டின பாவத்துக்காக எத்தனை நாள்தான் அவள் பொறுத்து போவாள். பொங்கி எழுந்து விடுகிறாள் பல சமயம். வார்த்தைகள் தடிமனாக வந்து விழுகிறது. மரியாதை கரைந்து மண்ணாய் போகிறது. ஒரு நாளா?... இரண்டு நாளா?...
நித்தம் நித்தம் நடந்து தொடர் கதையாகிறது. இது கீழ் மட்டத்தில்...வாழ்க்கையில் மற்றொரு பக்கம் இருக்கிறதே. அப்படி என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்....?
தொடருவோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (5-May-22, 8:33 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 63

மேலே